Monday, November 21, 2011

கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை


17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நிகழ்ந்த முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதைத் தொடர்ந்து பொருள் உற்பத்தி முறையில் ஏற்பட்ட வேகமான மாறுதல்களும் முதலாளித்துவ பொருளாதார கட்டுமானத்தை உருவாக்க ஆரம்பித்திருந்தன. அதன் தவிர்க்க முடியாத விளைவாக ஒன்றாக திரட்டப்பட்ட, படிப்பறிவு உள்ள, போராடும் அமைப்பாக உருவெடுக்கும் குணமுள்ள பாட்டாளி வர்க்கமும் உருவாகியது.

தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களின் பகுதியாக சர்வதேச தொழிலாளர்களின் அமைப்பான கம்யூனிஸ்டு கழகம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இப்படி உழைக்கும் மக்கள் மூலம் தமது அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும் வரும் ஆபத்தைக் கண்டுணர்ந்த ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கம்யூனிச 'பூதத்துக்கு' எதிராக தமது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டனர். 20ம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளில் நடந்த பிரச்சாரங்கள் தமக்கு முன்னோடியாக 19ம் நூற்றாண்டின் ஆட்சியாளர்களைக் கொண்டிருக்கின்றன என உணரலாம்.

இதன் மூலம்

அ. கம்யூனிசம் என்பது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் எதிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு வலுவாக வளர்ந்திருக்கிறது என்பதும்

ஆ. கம்யூனிச இயக்கம் பற்றிய அவதூறுகளுக்கு முறையான பதில் அளிக்கப்பட வேண்டியது தேவை என்பதும்

உணரப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு தேசங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி இந்த அறிக்கையை வெளியிட்டார்கள். இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் காரல் மார்க்சும், பிரடெரிக் எங்கெல்சும் ஆவார்கள்.

முதலாளிகளும் பாட்டாளிகளும்

பதிவு செய்யப்பட்ட வரலாறு அனைத்துமே சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையேயான நேரடியான அல்லது மறைமுகமான போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட ஆதி சமவுடமை சமூகம் இதற்குள் அடங்காது.

இந்த போராட்டங்கள் சமூகத்தை புத்தமைப்பதிலோ, போராடும் இரு தரப்பினரது அழிவிலோதான் முடிந்திருக்கின்றன. புத்தமைக்கப்பட்ட சமூகங்கள் அடுத்தக் கட்ட போராட்டம், புத்தமைப்பு நோக்கி நகர்ந்திருக்கின்றன.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி

முதலாளித்துவம் பிரபுத்துவ சமூகத்தின் அழிவிலிருந்து உருவானது. ஆனால் முந்தைய வர்க்க சமூகங்களைப் போல சமுதாய படிநிலைகளைக் கொண்டிருக்காமல் முதலாளித்துவம் வர்க்கப் பகைமைகளை சுருக்கி எளிமையாக்கியுள்ளது. முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாக சமுதாயம் பிளவுண்டு வருகிறது.

16,17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து மேற்கு திசையில் அமெரிக்காவுக்கும், கிழக்கு திசையில் இந்தியா சீனாவுக்கும் கடல் வழியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் முதலாளித்துவ உற்பத்திக்கான சந்தைகளும் விரிவடைந்தன. பிரபுத்துவ அமைப்புடன் போட்டி போட்டு அதை அழித்துக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்திற்கு இவை கூடுதல் பலமாக அமைந்தன.

பிரபுத்துவ முறையில் தொழிற் பண்டங்களின் உற்பத்தி கைவினைச் சங்கங்களின் ஏகபோகமாக இருந்தது. வளர்ந்து வந்த சந்தைகளின் தேவைகளுக்கு அவை ஈடு கொடுக்க முடியாமல் பட்டறை தொழில் முறை வளரலாயிற்று. கைவினை சங்கங்களுக்கிடையேயான உழைப்புப் பிரிவினை, பட்டறை தொழிலகத்தினுள் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அழிய ஆரம்பித்தது.

இதற்கிடையே நீராவி இயந்திரங்கள் தொழில் முறை உற்பத்தியில் அடுத்தக் கட்ட புரட்சியை உருவாக்கின. பட்டறைத் தொழில் சிறு முதலாளிகளின் இடத்தில் பெரு முதலாளிகளும் கோடீஸ்வரர்களும் உருவானார்கள். இந்த தொழில் துறை வளர்ச்சி போக்குவரத்து சாதனங்களை வெகுவாக மேம்படுத்தியது. மேம்பட்ட போக்குவரத்து சாதனங்கள் இன்னும் சந்தையை விரிவுபடுத்த உதவின.

இப்படி நவீன முதலாளித்துவ வர்க்கம் தொடர்ச்சியான புரட்சிகர மாற்றங்களின் மூலம் முன்னேற்ற வர்க்கமாக உருவெடுத்தது.

இந்த வளர்ச்சிக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியது. முதலில் ஒடுக்கப்பட்ட வகுப்பாகவும், பிரபுக்களுக்கு எதிராக முடியாட்சிக்கு ஆதரவு பிரிவாகவும், உலகச் சந்தை நிறுவப்பட்ட பிறகு ஆட்சியில் நேரடி அதிகாரம் செலுத்துவதாகவும் வளர்ந்தது.

முதலாளித்துவம் ஆதிக்க நிலை பெற்றதும் பழைய பிரபுத்துவ விழுமியங்களை அழித்தொழித்து, பணத்தின் பரிமாற்றத்தின் அடிப்படையிலான ஒற்றை சூத்திரத்துக்கு எல்லாவற்றையும் மாற்றி அமைத்தது. வாணிபச் சுதந்திரம், போட்டி போடும் சுதந்திரம் என்பதைத் தவிர மற்ற எல்லா மனித மாண்புகளையும், உறவுகளையும் ஒழித்துக் கட்டியது.

தொழில் முறை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களை கூலியுழைப்பாளர்கள் ஆக்கியது, குடும்பத்தை காசு பண உறவாய சிறுக்கச் செய்தது என்பது ஒரு பக்கம் இருக்க அதுவரை இருந்த வரலாற்றில் செய்த சாதனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும வண்ணம் பெரும் சாதனைகளை செய்து காட்டியது.

முதலாளித்துவத்தின் சிக்கல்கள்

இதற்கு முந்தைய தொழில் உற்பத்தி முறைகள் தமது உற்பத்தி முறைகளைக் கட்டிக் காத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. முதலாளித்துவ தொழில் உற்பத்தி முறையில் தொடர்ச்சியாக இடைவிடாமல் உற்பத்தி முறைகள் மாறி வருகின்றன. புதிய முறைகளுக்கு ஒவ்வாதவர்கள் இரக்கம் இல்லாமல் தீர்த்துக் கட்டப்பட்டு, வேறு புதியவர்கள் அவர்கள்  இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். இப்படி ஈவு இரக்கமில்லாத ஒரு சமூக அராஜகம் வழக்கமாக ஆகி விட்டது.

இந்த நிச்சயமின்மை காரணமாக சந்தை விரிவடைந்து கொண்டே செல்வது ஒரு தவிர்க்கமுடியாத தேவையாகிறது. அது எல்லா நாடுகளுக்கும் தனது கடையை பரப்புகிறது. தேசிய தொழில்களை உலகமயமாக்குகிறது. ஒவ்வொரு தொழிலும் மூலப்பொருட்களை உலகெங்கிலுமிருந்து பெறுகின்றன, அதன் விளைபொருட்கள் உலகமெங்கும் நுகர்வுக்காக அனுப்பப்படுகின்றன. அறிவு துறையிலும் அறிவுப் படைப்புகள் எல்லா நாடுகளுக்கும் சொந்தமாக மாறுகின்றன.

எல்லா தேசங்களையும் முதலாளித்துவ அமைப்பு அவற்றின் கூடுகளிலிருந்து வெளியில் இழுக்கிறது. நாட்டுப்புறத்தை நகரங்களுக்கும், அநாகரிக நிலையிலுள்ள நாடுகளை நாகரிக நாடுகளையும், விவசாய நாடுகளை முதலாளித்துவ நாடுகளையும், கிழக்கு நாடுகளை மேற்கு நாடுகளையும் சார்ந்திருக்க செய்கிறது.

முதலாளித்துவம கட்டமைப்பு சிதறிக் கிடக்கும் மக்களை ஒரே இடத்தில் வாழ வைக்கிறது. சொத்துக்களை சிலரது கைகளில் குவிக்கிறது. அரசியல் அதிகாரத்தையும் மையப்படுத்தச் செய்கிறது. பல தேசங்களில் பல அரசாங்கங்கள் இருப்பது மாறி தேசங்களின் கூட்டமைப்புகள் உருவாகின்றன (உதாரணம் : அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன், இந்தியா, ஆசியான் போன்றவை).

பொருளுற்பத்தி சக்திகளை பிரமாண்டமாக வளர்த்து இது வரை கண்டிராத உற்பத்தி சாதனைகளைப் புரிகிறது முதலாளித்துவம். பிரபுத்துவ சமூகத்தில் உதித்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை பொருட்கள் பிரபுத்துவ அமைப்பில் பிறந்தவை. பிரபுத்துவ அமைப்பு வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால் அதை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ அமைப்பு உருவானது.

இவ்வளவு பெரிய சக்திகளை பாதாள உலகிலிருந்து வெளிப்படச் செய்த முதலாளித்துவ அமைப்பு அவை தனது கட்டுப்பாடுகளை மீறி பூதமாக எழுந்திருப்பதைக் காண்கிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக வளர்ந்துள்ள உற்பத்தி சக்திகள் தமது தொடர்ந்த வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவ அதிகார அமைப்புகளை எதிர்த்து போராடுகின்றன. இதுதான் கடந்த 2 நூற்றாண்டுகளின் வரலாறாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. அபரிதமான உற்பத்தி வளர்ச்சிக்கு இடம் கொடுக்கும்படி முதலாளித்துவ சொத்துரிமை அதிகார கட்டமைப்புகள் இடம் கொடுப்பதில்லை. இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனையைத் தீர்க்க முதலாளித்துவ அதிகார வர்க்கம் வலுக்கட்டாயமாக உற்பத்தி சக்திகளை வளர்ப்பதையும், புதிய புதிய சந்தைகளில் விரிவடைந்து செல்வதையும் கடைப்பிடிக்க வேண்டியதாகிறது. பழைய சந்தைகளை இன்னும் மேலும் மேலும் அழுத்திப் பிழிந்து அதிக உற்பத்தி சக்திக்கு ஈடுகொடுக்க முயல்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க உருவாக்கம்

முதலாளித்துவ அமைப்பு தன்னை எதிர்க்கும் ஆயுதங்களை உருவாக்கியதோடு அல்லாமல் அவற்றை செலுத்துவதற்கான போர்ப்படையினராக பாட்டாளி வர்க்கத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தினர் தமது உழைப்பை விற்று கூலிக்கு வேலை பார்க்கும் நிலையில் இருக்கின்றனர். இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் மூலமாகவும், வேலைப் பிரிவினை மூலமாகவும் வேலையில் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருகிறது. வேலை செய்யத் தேவையான திறமையும் குறைகிறது. அதனால் தொழிலாளி மீள் உற்பத்தி ஆவதற்கான செலவு குறைந்து அதன் விளைவான கூலியும் குறைந்து கொண்டே போகிறது. இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் செய்ய வேண்டிய வேலைப்பளு அதிகமாகிறது. வேலை நேரம் அதிகமாக்கல், வேலை அளவை அதிகமாக்கல், அல்லது வேறு முறைகளின் மூலம் இது செய்யப்படுகிறது.

தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் படைகள் போல அணிவகுக்கப்பட்டிருக்கின்றனர். முதலாளித்துவ அமைப்பிற்கும், அரசுக்கும், தொழிற்சாலை முதலாளிக்கும், மேலாளர்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டியிருக்கிறது. அது வெறுப்பைத் தூண்டுவதாயிருக்கிறது. உற்பத்திக்குத் தேவையான உடல் வலிமை குறைய ஆண்களின் இடத்தில் பெண்களும் குழந்தைகளும் மாற்றப்பட்டு கூலி குறைவும் போட்டியும் அதிகமாகிறது.

தொழிலாளி சுரண்டலுக்குப் பிறகு தனது கூலியைப் பெற்றுக் கொண்ட பின் கடைக்காரர், வீட்டுக் காரர், வட்டிக்கடைக்காரர் என்று சுரண்டப்பட ஆரம்பிக்கிறார். இப்படி மத்தளத்துக்கு இரு புறமும் இடியாக தொழிலாளி தனது உழைப்பை விற்கும் போதும் சுரண்டப்படுகிறார். அதன் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி மற்றவர்களின் உழைப்பை வாங்கும் போதும் நடுவில் இருக்கும் இடைத்தரகர்களால் சுரண்டப்படுகிறார்.

கீழ் மத்தியதர வர்க்கத்தினர் படிப்படியாக தமது உடைமைகளை இழந்து பாட்டாளி வர்க்கத்தில் சேர்கிறார்கள்.

பாட்டாளி வர்க்கம் ஆரம்பத்தில் தனிப்பட்டும் அடுத்த ஒரு தொழிற்சாலை அளவிலும், அடுத்து ஒரு வட்டார அளவிலும் போராடுகிறார்கள். தமக்கு எதிராக புலப்படும் உற்பத்திக் கருவிகளை இறக்குமதிப் பொருட்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். மத்திய கால உற்பத்தி முறையை மீட்டமைக்க முயல்கிறார்கள்.

முதலாளித்துவம் தனது பகைவர்களாகிய நிலப்பிரபுக்கள், மன்னராட்சியையும், பிற முதலாளிகளையும், குட்டி முதலாளிகளையும் எதிர்க்க முதலாளிகள் தம்மைச் சேர்ந்த தொழிலாளிகளை நாடு தழுவி ஒன்று திரட்டி போராடுகிறார்கள். இதனால் தொழிலாளர்களுக்கிடையே நாடு தழுவிய ஒற்றுமை ஏற்படுகிறது. முதலாளித்துவம் இந்த வெற்றிகளை ஈட்ட ஈட்ட பாட்டாளி வர்க்கமும் அளவிலும் பலத்திலும், ஒற்றுமையிலும் வளர்ந்து கொண்டே போகிறது. கூலிக் குறைவு மோசமாகிக் கொண்டே போகிறது. முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்துக்காக கூட்டமைவுகள் - தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.

நவீனத் தொழில் துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து சாதனங்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் போராடும் வர்க்கத்துக்கு ஒற்றுமையை ஏற்படுத்தும் கருவிகளாகப் பயன்படுகின்றன (டுவிட்டர், பேஸ் புக் மூலமான மக்கள் புரட்சி). இதன் மூலம் தொழிலாளிகள் முதலாளிகளிடமிருந்து பல சலுகைகளை பறித்தெடுக்கிறார்கள். (8 மணி நேர வேலை, தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்றவை).

பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி

கூடவே ஆளும் வர்க்கத்தின், குட்டி முதலாளிகளின் பிரிவினர் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படும் போது அவர்கள் பாட்டாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் காரணிகளை அளிக்கின்றன. இறுதியில் வர்க்கப் போராட்டம் முடிவு கட்டும் நிலைமை நெருங்கும் நேரத்தில் ஆளும் வர்க்கத்திலிருந்து ஒரு சிறு பிரிவும் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது.

பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் உண்மையான புரட்சிகர வர்க்கம் மற்ற வர்க்கங்கள் மறைந்து போய் விடுகின்றன. கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பழமைப் பற்றுள்ளவர்களே தவிர புரட்சியாளர்கள் அல்ல. சில சமூகக் கசடுகளும் புரட்சி இயக்கத்துள் இழுக்கப்பட்டு ஊழலின் ஊற்றுக்கண்ணாக அமையலாம்.

பாட்டாளி வர்க்கத்துக்கு சொத்துக்களோ, குடும்ப உறவுகளோ, மத, இன அடையாளங்களோ இல்லாமல் துடைத்தெறியப்படுகின்றன.

முந்தைய புரட்சிகளைப் போலில்லாமல், பாட்டாளி வர்க்கப் புரட்சி தனியார் சொத்துடைமையை முழுமையாக ஒழித்துதான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். பாட்டாளி வர்க்கப் புரட்சி பெரும்பான்மையினரில் நலனுக்கான புரட்சி. இந்தப் போராட்டம் உள்ளடக்கத்தில் இல்லா விட்டாலும், வடிவத்தில் தேசிய போராட்டமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன்தான் முதலில் கணக்கு தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்துக்கு முந்தைய சமூகங்களில் சுரண்டப்படுபவர்களின் வாழ்வாதாரம் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் முதலாளித்துவக் கட்டமைப்பில் பாட்டாளிகளின் வாழ்க்கை மேலும் மேலும் சீர் குலைக்கப்படுவதால், முதலாளித்துவம் தனக்குத் தானே உலை வைத்துக் கொள்வதாகவே அமைகிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை ஆதாரமான கூலியுழைப்பு மேலும் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு பாட்டாளிகளை ஒன்று பட வைக்கிறது. தனது அழிவுக்கான கருவிகளையும் போர்ப்படையினரையும் முதலாளித்துவம் தானே உருவாக்கிக் கொள்கிறது.

பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்

கம்யூனிஸ்டு கட்சிகள் பிற தொழிலாளி வர்க்கக் கட்சிகளை விட முன்னேறிய அரசியல் பிரிவினர். தொழிலாளர் போராட்டத்தின் தேசிய தன்மைகளைத் தாண்டிய உலக தன்மையைச் சுட்டிக் காட்டுவதும், போராட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் பாட்டாளி வர்க்கத்துக்கு சரியான வழி காட்டிச் செல்வதும் கம்யூனிஸ்டுகளின் பணியாகும்.

அ. நடப்பிலுள்ள சொத்துடைமைகளை ஒழிப்பது இதற்கு முந்தைய புரட்சிகளும் செய்துள்ளன. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் சொத்து என்பது மிகச் சிறு பகுதியினரிடத்தில் குவிந்திருப்பதே ஆகும். எனவே பாட்டாளி வர்க்கம் புரட்சியின் மூலம் தனிச் சொத்துடைமையை ஒழிக்கிறது.

ஆ. உழைப்பின் மூலம் உருவாகும் சமூகப் பொதுச் சொத்தை, மூலதனத்தை சிறுபான்மை நபர்கள் கைவசம் குவிக்கும் கட்டமைப்பை ஒழித்து சமூக மயமான மூலதன அமைப்பை உருவாக்குகிறார்கள். இதைத் தவிர்த்த சிறு உடைமையாளர்களின் சொத்து ஏற்கனவே முதலாளித்துவத்தால் அழிக்கப்பட்டு விட்டது
(விட்டு வைக்கும் சிறு அளவு சொத்துக்கள் - நிலம், நகைகள், வீடு போன்றவை)

இ. கூலியுழைப்பின் இழிவான நுகர்வை கம்யூனிஸ்டுகள் ஒழிக்கிறார்கள். தொழில் முதல் வளர்வதற்கு தமது உழைப்பை அளிக்கும் இழிவை, கடந்த காலத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மூலதனம் நிகழ்காலத்தின் உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒழித்து, நிகழ்கால உழைப்புக்கு கடந்த கால மூலதனம் கட்டுப்பட்டு செயல்படுவதை கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்த வேண்டுகிறது.

ஈ. சுதந்திரமான வாணிகம், சுதந்திரமான பொருள் பரிமாற்றம் என்பதுதான் முதலாளித்துவ அமைப்பின் சுதந்திரமாக இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விற்பனை அல்லது பொருள் பரிமாற்றம் கூலிக்கு உழைப்பை விற்பதாக மட்டும் இருக்கும் போது (அதாவது சுரண்டலுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் சுதந்திரம்) அந்த விற்றல் வாங்கலை முழுதும் ஒழிப்பது இந்த சுரண்டை ஒழிப்பதாக அமைகிறது.

உ. சொத்தை ஒழித்தால் உழைப்பதற்கான ஊக்கம் போய் விடும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் சொத்தே இல்லாத பாட்டாளிகள்தான் அதிகமாக உழைக்கிறார்கள்.

ஊ. அறிவுத் துறை, கலாச்சாரத் துறையில் இருக்கும் அமைப்புகளை அழிப்பதாகச் சொல்லப்படுகிறது. பாட்டாளிகளை சுரண்டலுக்கு உட்படுத்தி வைக்கப் பயன்படும் மதம், கலாச்சாரம், தேசியம், கல்வி போன்றவற்றை அழிப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் நோக்கம். அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் சுதந்திரம் பெறப்படுகிறது.

எ. குடும்பத்தை ஒழித்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பை அழித்து விடுவதாக சொல்லப்படுகிறது. இப்போதைய குடும்ப அமைப்பு பொருளாதார உறவுகளையும் பொருளாதார நலன்களையும் சார்ந்திருக்கிறது. அதை உடைத்து, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உண்மையான அன்பின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதை கம்யூனிஸ்டு சமூகம் உறுதி செய்யும்.

ஏ. பாட்டாளி வர்க்கம் தேசத்தின் தலைமையாக வளர்வது வரை தேசியத் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது முதலாளித்துவ தேசியத் தன்மை இல்லை. தனிமனிதர் பிறரைச் சுரண்டுவதை ஒழிப்பது போல ஒரு தேசம் மற்றொரு தேசத்தைச் சுரண்டுவதும் ஒழிக்கப்படும்.

ஐ. அறிவுத் துறையிலும் பாட்டாளி வர்க்கம் அமைக்கும் சோசலிச அமைப்புக்கு பொருத்தமான மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையானதே. கடந்த புரட்சிகளில் இந்த அமைப்புகள் வர்க்கச் சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் புது வடிவத்துக்கு மாற்றத் தேவைப்பட்டன. சுரண்டல் முற்றிலும் ஒழிக்கப்படும் போது இந்த அமைப்புகள் தேவையில்லாமல் போய் விடுகின்றன.

புரட்சி
அ. அதிகாரத்தைக் கைப்பற்றுதல்
ஆ. மூலதனத்தைக் கைப்பற்றுதல்
இ. உற்பத்திக் கருவிகளைக் கைப்பற்றுதல்

இவற்றை பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி அரசின் கையில் மையப்படுத்துதல்.

அ. நிலத்தில் சொத்துடமையை ஒழித்தல், நில வாடகையை சமூகத்துக்கு உரியதாக்குதல் (உழுபவனுக்கே நிலம் சொந்தம், ஆனால் விற்பதற்கு உரிமை இல்லை என்ற முறை)
ஆ. கடுமையான வருமான வரி (இதன் மூலம் சமூகத்தில் உபரியை அரசின் கையில் கொண்டு வருதல்)
இ. வாரிசு சொத்துரிமை ஒழிப்பு (உழைத்தவருக்கு அதன் பலன்கள், அவருக்குப் பிறகு அதன் அடிப்படையாக இருந்த சமூகத்துக்கு)
ஈ. நாட்டை விட்டு வெளியேறுவோர், கலகம் செய்பவர்களது உரிமைகளைப் பறித்தல் (சுப்ரமணிய சாமி போன்றவர்கள்)
உ. தேசிய வங்கியின் ஏக போகத்துடன் அரசு மூலதனமும் சேர்ந்து நிதி மூலதனத்தை அரசின் கையில் மட்டும் வைத்திருத்தல்
ஊ. செய்தி தொடர்பு, போக்குவரத்து சாதனங்கள் பாட்டாளி வர்க்க அரசின் கையில் இருத்தல்
எ. ஆலைகளையும் உற்பத்திக் கருவிகளையும் மேம்படுத்துதல், தரிசு நிலங்களை மேம்படுத்துதல்
ஏ. எல்லோரும் உழைக்கும் முறையை ஏற்படுத்துதல் (ஜெயேந்திர சரஸ்வதி, ஜெயலலிதா, அழகிரி விவசாயத்தில் உழைப்பார்கள்)
ஐ. விவசாயத்தையும் தொழில் துறையையும் ஒத்திசைந்து செயல்படச் செய்தல்.
ஒ. பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி

சோஷலிச கம்யூனிச இலக்கியம்

பிற்போக்கு சோஷலிசம்

அ. பிரபுத்துவ சோஷலிசம் -

பிரபுத்துவ சமூகத்தினர் இழந்த அதிகாரத்தைப் பிடிக்க, பாட்டாளிகளின் நலனுக்காக போராடுவதாக இறங்குதல்

இந்தியாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை பேசும் எளிமை, நேர்மை போன்றவை முதலாளித்துவத்தின் கொடுமைகளை பேசி, நிலப்பிரபுத்துவத்துக்குத் திரும்பிப் போவதை நோக்கமாகக் கொண்டவை. அவர்களது பிரச்சாரங்களால் கவரப்பட்ட மக்கள் அவர்கள் பின்னால் போனாலும், அவர்களின் உண்மையான நோக்கங்களைத் தெரிந்ததும் நிராகரித்து விலகி விடுவார்கள்.

இவர்கள் முதலாளித்துவத்தின் ஆதிக்கங்களை கடுமையாக எதிர்க்கும் போராட்டங்களில் இறங்குவார்கள்.

சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் இல்லை என்று சொல்லுகிறார்கள். முதலாளித்துவ வர்க்கமே தமது அமைப்பிலிருந்து உருவானதுதான் என்பதை மறந்து விடுகிறார்கள்.

அவர்கள் முதலாளித்துவ சமூகத்தின் விளைபலன்களை தமக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பிரிட்டனில் நிலப்பிரபுக்களும், இந்தியாவில் சரத் பவார், மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் வாய்ப்பு கிடைக்கும் போது முதலாளித்துவத்தின் அறுவடைகளை எடுத்துக் கொள்ளத் தயங்குவதில்லை.

அதே போல மதங்களும் சோசலிச, எளிமை வாத வேடம் பூண்டு கொள்கின்றன. ரமண மகரிஷியும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் சோசலிச வாதிகள் என்று பேச முடியும். ஏனென்றால் அவர்கள் சொத்து சேர்ப்பதில்லை, அடுத்தவரை சுரண்டுவதில்லை. ஆனால் உண்மையில் அவர்கள் பிற்போக்கு வாதத்தின் பிரதிநிதிகள்தான்.

ஆ. குட்டி முதலாளித்துவ சோஷலிசம்
குட்டி முதலாளி பிரிவினர் தமது சலுகைகள் பறிபோவதை தாங்க முடியாமல் இறங்கி போராடுதல், ஆனால் உண்மையான புரட்சி கொள்கை இல்லை.

இவர்கள் ஊசலாட்டத்திலேயே இருக்கிறார்கள். இழந்து கொண்டிருக்கும் தமது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போராடுவதுதான் முதன்மை நோக்கமாக இருக்கிறது. அதற்கு பாட்டாளி வர்க்க புரட்சியை இன்னும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

முதலாளித்துவத்தின் இயங்குமுறையை நுணுக்கமாக ஆராய்ந்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு சித்தாந்த இலக்கியத்தை அளிக்கிறார்கள். ஆனால், இவர்களது நோக்கம் முதலாளித்துவத்தை மாற்றி ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமது நடுத்தர வர்த்த வசதிகளை மீட்டமைப்பதும் பாதுகாப்பதுமே ஆகும்.

உற்பத்திக்கு தர்மகர்த்தா முறையிலான பெருநிறுவனங்கள் (டாடா, இன்போசிஸ் போன்றவை), அன்பான தந்தையின் கீழ் விவசாயம் என்பதுதான் அதன் தீர்வாக இருக்கிறது.

இ. ஜெர்மானிய சோஷலிசம்

பிரான்சில் முதலாளித்துவ புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்ட இலக்கியங்களை இறக்குமதி செய்து மொழி பெயர்த்து ஜெர்மனியில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், ஜெர்மனியில் அப்போது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் நிலையில் முதலாளி வர்க்கம் இருந்தது.

வேறொரு நாட்டில் உருவான முற்போக்கு கருத்துகளை அந்த நாட்டு யதார்த்தத்தோடு தொடர்பில்லாத இன்னோரு நாட்டுக்கு இறக்குமதி செய்து, மொழி பெயர்ப்புகள் மூலமும் அடிக்குறிப்புகள் மூலமும் தாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விட்டதாக குரல் கொடுப்பது ஜெர்மானிய சோசலிசத்தின் பொது வரையறை.

இந்தியாவில் மாவோயிசம், கம்யூனிசம் என்று பேசும் புரட்சிகரக் கட்சிகளில் பல இந்த வகையில் சேருகின்றன.

ஈ. பழமை வாத அல்லது முதலாளித்துவ சோசலிசம்

காங்கிரசு கட்சி பேசும் சோசலிசம். முதலாளித்துவ அமைப்பில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினருக்கு சலுகைகள், சில சமாதானங்கள் அளிப்பதன் மூலம் பிரச்சனைகளை சமாளித்து வளர்த்துச் செல்லும் முயற்சி. காங்கிரசு, ராம் மனோஹர் லோகியா போன்றவர்களின் சோசலிசம்.

சீர்திருத்த வாதிகள் (சிபிஐ, சிபிஎம்)

ஊ. கற்பனாவத சோஷலிசமும் கம்யூனிசமும்

கற்பனாவாத சோசலிசம் மேற்சொன்னவற்றை விட நேர்மையானது. முதலாளித்துவ கட்டமைப்பின் கொடுமைகளை அலசி, அதற்கு மாற்றாக உழைக்கும் மக்களின் அதிகாரம் ஏற்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிமுறையில் தவறிழைப்பது கற்பனாவாத சோசலிசம்.

ஓவன், ்பூரியே, செயின்ட் சிமோன். பாட்டாளி வர்க்க வளர்ச்சி முதிர்சி பெறாத கால கட்டத்தில் அவர்களது அணுகுமுறை இவ்வளவுதான் வளர முடிந்தது.

எதிர்க்கட்சிகள் குறித்த கம்யூனிஸ்டுகளின் நிலை

ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கும் ஏற்ப அந்த ஊர் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்கின்றனர் கம்யூனிஸ்டு கட்சியினர்.

0 comments: