எல்லாவற்றுக்கும் மூல முதலானது பொருளே என்று சொல்லும் தத்துவம் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதைப் பயில்வது ஒரு கம்யூனிஸ்டின் போராட்டங்களுக்கு அடிப்படையான தேவையாகும்.
தத்துவம் இல்லாமல் நடைமுறை மட்டும் பழகிக் கொண்டிருந்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் திரும்பத் திரும்ப செயல்படும் எந்திரமாகத்தான் மனிதன் இருக்க முடியும். நடைமுறையில் இணைந்திருக்காமல் வெறும் தத்துவம் மட்டும் பேசிக் கொண்டிருப்பது ஏட்டுச் சுரைக்காயாகவே நின்று விடும். எனவே தத்துவமும் நடைமுறையும் இணைந்து ஒன்றுக் கொன்று சார்பாக செயல்பட வேண்டும்.
தத்துவத்தை பயில்வதற்கு குறிப்பிட்ட முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய முயற்சி மூலம் தத்துவத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்களை வெற்றி கொண்டு விடலாம்.
தத்துவம் என்பது இயற்கையை, உலகத்தை விளக்க முயற்சிப்பது ஆகும். எல்லா பிரச்சனைகளிலும் பொதுவாக பொதிந்துள்ள அம்சங்களை ஆராய்வது தத்துவம் ஆகும். மார்க்சிய தத்துவம் எல்லா பிரச்சனைகளுக்கும் விடை அளிக்கிறது.
ஆதி மனிதன் இயற்கைக்கும் பிரபஞ்சத்துக்கும் விளக்கம் தர முயற்சிக்கும் போது போதுமான தகவல்கள் அறிவு வளர்ச்சி இல்லாமையால் தோல்வியடைந்தான். மனிதனின் வாழ்க்கைக்கு அப்படி ஒரு விளக்கம் - உலகப் பார்வை - தேவைப்படுகிறது.
அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லாத இடத்தில் மதம், கடவுள் நம்பிக்கைகள் வளர்ந்தன. மதங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டு உலகை விளக்க முயற்சிக்கின்றன. அறிவியல் வளர வளர ஏற்கனவே மதத்தை நம்பி இருந்த நடைமுறைகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கிடைக்க ஆரம்பித்தது. இதன் மூலம் மதத்துக்கான இடம் சுருங்க வேண்டியிருந்தது.
ஆகவே அறிவியல் பூர்வமான பொருள்முதல்வாதம் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் மதம் முதலான கருத்து முதல்வாதத்துக்கு எதிராக போராடி வளர வேண்டியிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் அது வரை வளர்ந்து வந்திருந்த பொருள்முதல்வாதத்துக்கு புத்துயிர் கொடுத்து அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுத்தார்கள் மார்க்சும் எங்கெல்சும். இதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவம். பொருள்முதல்வாத தத்துவமே மார்க்சியத்துக்கு அடிப்படை. அறிவியல் அணுகுமுறையில் உள்ள பொருள்முதல்வாதம் அறிவியல் வளர வளர தொடர்ந்து வளர்கிறது.
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் முன்னரே பொருள்முதல்வாதம் பல வடிவங்களில் இருந்திருக்கின்றது. பொருள்முதல்வாதத்துக்கு என்று ஒரு திட்டமான வரலாறு இருக்கிறது. அது மார்க்சும் எங்கெல்சும் திடீரென்று கண்டுபிடித்த ஒரு கோட்பாடு இல்லை. பண்டைக்கால பொருள்முதல்வாதம் தீதரோவின் துணை கொண்டு வளர்ந்திருந்தது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைக்களஞ்சிய குழுவினர் அதை வளர்த்தார்கள்.
வர்க்கப் போராட்டத்தில் மூன்று பகுதிகள் இருக்கின்றன:
1. சுதந்திரத்துக்கான தத்துவ போராட்டம். சரியான தத்துவ அணுகுமுறை இல்லாமல் பொருளாதார அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றால் அவை காலப் போக்கில் தோற்கடிக்கப்பட்டு விடும்.
2. சோற்றுக்காக பொருளாதாரப் போராட்டம். பொருளாதார நலன்களை முன்னெடுக்கா விட்டால் அரசியல் அல்லது தத்துவ போராட்டங்களுக்கு தேவையே இல்லாமல் போய் விடும்.
3. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம். தத்துவ போராட்டமும், பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டத்தைக் கொண்டு வலுப்படுத்தப்பட வேண்டும்.
தத்துவப் போராட்டத்தில் மார்க்சியவாதி தினமும் ஈடுபட வேண்டியிருக்கிறது. கருத்து முதல்வாதிகளின், மதவாதிகளின் பல கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயக்கவியல் பொருள்முதல் வாதம் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் ஒரு ஆய்வு முறையை நமக்கு தருகிறது.
மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவம் ஒரு பெரிய இருட்டடிப்பு அல்லது திரித்தல் பிரச்சாரத்தை நடத்துகிறது. தத்துவம் பயின்று முனைவர் பட்டம் பெறும் ஒருவர் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதைப் பற்றி படிக்காமலேயே இருந்து விட முடிகிறது. மார்க்சியம் என்பது ஒரு அரசியல் தத்துவம் மட்டும்தான் அல்லது மார்க்சியம் என்பது பொருளாதாரத் துறையில் ஒரு குறிப்பிட்ட கோட்பாடு மட்டும்தான் என்று ஒதுக்கி விட முயற்சிக்கிறார்கள்.
மார்க்சியம் தரும் கண்ணோட்டம் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை அணுக வேண்டிய முறையை தருகிறது. இது இயற்கை அறிவியலில் பயன்படுத்தப்படும் அதே நடைமுறைதான். இந்த முழுமையை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதில் இரண்டு கோட்பாடுகள் இருக்கின்றன. இயக்கவியல் என்பது ஒன்று பொருள்முதல்வாதம் என்பது ஒன்று. இரண்டின் வரலாற்றையும் தனித்தனியாகப் பார்ப்போம்.
உலகத்தை விளக்குவதற்கு பல தத்துவங்கள் முன் வைக்கப்பட்டாலும் அவற்றை அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அறிவியல் ரீதியிலான கண்ணோட்டம், அறிவியல் ரீதியில் அல்லாத கண்ணோட்டம்.
நாம் புலன்களால் உணர முடிகிற பொருட்கள் உலகில் இருக்கின்றன. நமது அறிவால் மட்டும் உணரக் கூடிய கருத்துக்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றன. விஷயங்களைப் பற்றி பொருட்களைப் பற்றி நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்களைத்தான் சிந்தனை என்கிறோம். சில கருத்துக்கள் நமது புலன் உணர்ச்சிகளின் மூலம் கிடைக்கின்றன - நம்மைச் சூழ்ந்துள்ள பொருட்கள். கடவுள் முதலான கருத்துக்கள் புலன் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட கருத்துக்களாக திகழ்கின்றன.
நாம் எங்கிருந்து வந்தோம், நாம் இறந்த பிறகு நமது சிந்தனைகள் என்ன ஆகின்றன, இந்த உலகம் எப்படி உருவானது, எப்போது அழியப் போகிறது என்று பல கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஆன்மாவுக்கும் (உணர முடியாத்து) பொருளுக்கும் (ஐம்புலன்களால் உணரக் கூடியவை) என்ன உறவு? மூளைக்கும் (பொருள்) சிந்தனைக்கும் என்ன உறவு? சிந்தனைகள் எப்படி உருவாகின்றன?
ஆதிகாலத்தில் தம்மால் புரிந்து கொள்ள முடியாதவற்றை எல்லாம் (கனவுகள், மின்னல், இறப்பு போன்றவை) இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாக மனிதர்கள் நினைத்துக் கொண்டார்கள். ஆன்மா இருப்பதால்தான் உயிர் இருக்கிறது, ஒருவர் இறக்கும் போது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து தன்னிச்சையாக சென்று விடுகிறது என்று நினைத்தார்கள். அதிலிருந்து அழிவற்ற ஆன்மா என்ற கருத்து உருவானது. இவை எல்லாம் நடந்தது பல ஆயிரம் ஆண்டுகள் மனித சிந்தனை வளர்ச்சியின் மூலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர்தான் பெருமழையையும் இடியையும் உருவாக்குகிறார் என்று விளக்கமளித்துக் கொண்டார்கள். அதன் மூலம் கடவுள் என்ற கருத்து வளர்ந்தது. கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தார், ஒரு கட்டத்தில் அழிக்கவும் செய்து விடுவார் என்று நினைத்துக் கொண்டார்கள். இதன் மூலம் தாம் வாழும் உலகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு விடை கண்டார்கள்.
காலப் போக்கில் ஆன்மாவும் கடவுளும் ஒன்றுதான், கடவுள்தான் ஆன்மாவைப் படைத்தார், அல்லது ஆன்மாவாக இருக்கிறார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
இப்படியாக கருத்து முதல் வாதம் என்ற போக்கு வளர்ந்தது. அறிவியல் அணுகுமுறை ஏற்பட்ட பிறகு பொருட்களை உணர்வதன் மூலம் பல்வேறு நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக்க முடிந்தது.
இப்படி கருத்தை முன் வைத்த தத்துவம் அல்லது பொருளை முதன்மையாகக் கொண்ட தத்துவம் என்று இரண்டு பிரிவுகள்தான் இருக்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை நாம் பார்க்கிறோம். அவற்றில் பலவற்றுக்கு ஆன்மா அல்லது உயிர் இல்லை. ஒருவர் வாழும் போதும் இறந்து போன பிறகும் அவரது உடலில் மூளையைப் பார்க்கிறோம், ஆனால் ஆன்மாவைப் பார்க்க முடியவில்லை. நாம் அறிந்ததிலிருந்து அறிவை விரித்துக் கொண்டு போகும் அறிவியல் அணுகுமுறை பொருள் முதல்வாதம்தான் சரி என்று நிலைநாட்டுகிறது.
வரலாற்றில் அறிவியல் வளர வளர மனித அறிவு வளர வளர கருத்து முதல்வாதமான மதங்கள், கடவுள்களின் தேவை இல்லாமலேயே பல நிகழ்வுகளை விளக்க முடிந்தது. இதனால் கருத்து முதல்வாதிகள் தமது வாதங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டி வந்தது. இவற்றில் முக்கியமானவர் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெர்க்லி பாதிரியார். மற்ற எல்லா கருத்து முதல்வாத விவாதங்களை விட பெர்க்லி பாதிரியாரின் வாதம் வலுவாகவும் அதிலிருந்தே மற்ற வாதங்கள் வருவதாகவும் இருக்கிறது. அதனால் அந்த வாதத்தை விளக்கமாகத் தெரிந்து கொண்டு அதிலிருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும் (தீதரோ, லெனின்).
நாம் இருப்பதாக நம்பும் பொருட்கள் எதுவும் உண்மையில் இல்லை. அவை அனைத்தும் நமது மனதின் படைப்புகளே. ஒரு பொருளின் நிறம், எடை, தொடுஉணர்வு மூலமாக அதற்கு ஒரு கருத்தை உருவாக்கி பெயர் அளிக்கிறோம். ஆனால் நிறம், எடை, தொடு உணர்வு என்பது மனிதர்களுக்கு மனிதர், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடுகின்றன. எனவே பொருள் என்பதே நமது உணர்வுகளின் ஒரு தொகுப்புதான். அதற்கு வெளியில் பொருள் இருக்க முடியாது.
அதாவது பொருட்களின் பண்புகள் என்று நாம் உணருவது உண்மை இல்லை, அதனால் பொருள் என்பதே இல்லை என்று முடிவு செய்கிறார்.
இந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?
1. நான் ஒருவன்தான் இருக்கிறேன். மற்ற பொருட்கள், மனிதர்கள் எல்லாமே எனது சிந்தனைகளின் படைப்புதான் என்ற சோலிபிசத்தில் வந்து சேருவோம்.
2. ஆன்மாதான் பொருளை படைக்கிறது. ஒன்று, கடவுள் உலகைப் படைத்தார் என்று சொல்லலாம். அல்லது கடவுள் நமக்கு எண்ணங்களை அளிப்பது மூலம் உலகம் என்ற மாயையைப் படைத்தார் என்று சொல்லலாம். இரண்டுக்குமே கடவுள் தேவைப்படுகிறார்.
3. நமது மனதுக்கு வெளியே உலகம் என்று ஒன்று இல்லை.
4. நமது எண்ணங்கள்தான் பொருட்களை உருவாக்கிக் கொள்கின்றன.
இவற்றுக்கு பொருள்முதல்வாதம் தரும் விடைகள் என்ன?
பொருள்முதல்வாதம் மனித அறிவுடன் வளர்ந்து வந்தது என்று பார்த்தோம். குறிப்பிட்ட கட்டத்தில் அறிவியல் கோட்பாடுகள் கருத்துமுதல் வாதிகளை தடுமாறச் செய்தன. அதனால்தான் இயற்கை அறிவியலை தத்துவ ஞானத்திலிருந்து பிரித்துக் கொண்டார்கள். அறிவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் வளர்ந்து வந்த அதே நேரத்தில் அதன் தொந்தரவுகள் இல்லாமல் சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் தமது கருத்து முதல் வாத அணுகுமுறைகளை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் ஆளும் வர்க்கத்தினர் தமது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
பொருள்தான் அடிப்படை, பொருட்களை புலன்களால் உணர்வதன் மூலம்தான் சிந்தனை பிறக்கிறது. சிந்தனை என்பது மூளை என்ற பொருளில் பிறப்பதுதான். இந்த உலகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். பொருட்களை உணர்ந்து கொள்ளும் நமது திறன்களை வளர்ப்பதன் மூலம் உலகத்தைப் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள முடியும். புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள் மேலும் மேலும் பல பிரச்சனைகளுக்கு விளக்கங்களைத் தருகின்றன.
கருத்து முதல்வாதிகளுக்கும் பொருள் முதல்வாதிகளுக்கும் இப்படி ஒரு அடிப்படை முரண்பாடு இருக்கிறது? எது சரி? கருத்து முதல்வாதத்தின் அடிப்படை கோட்பாடுகளை ஆராய்வது மூலம் இதற்கு விடை காணலாம்.
1. மனதுதான் பொருள் படைக்கிறது.
அகநிலை நடைமுறை, புறநிலை நடைமுறை இரண்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைப்புக்குள் நிலவும் நடைமுறை அகநிலை, அதற்கு வெளியில் நிலவுபவை புறநிலை. நமது சிந்தனைக்குள் இருப்பவை அகநிலை, வெளியில் இருப்பவை புறநிலை.
இந்த உலகம் புறநிலையில் இல்லை, அகநிலையில்தான் இருக்கிறது என்பதுதான் இந்த கருத்து முதல்வாத கோட்பாட்டின் சாராம்சம். அவர்கள் சொல்வதுதான் சரி என்று வைத்துக் கொள்வோம். மனிதன் தோன்றுவதற்கு முன்பு இந்த உலகம் இருந்தது என்று அறிவியல் நிரூபிக்கிறது. அப்போது அது எந்த மனதுக்குள் இருந்தது? கடவுளிடன் குடியிருந்தன என்றுதான் சொல்ல முடியும்.
கடவுள் அல்லது அறிவியல் இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அனுபவம், நடைமுறை இரண்டையும் கொண்டு உலகம் என்பது ஒரு புறநிலை யதார்த்தம்தான் என்று அறிவியல் நிரூபிக்கிறது. நடைமுறையில் அனுபவங்களை வைத்து நமது மனதுக்கும், சிந்தனைகளுக்கும், விருப்பங்களுக்கும் அப்பால் பொருட்கள் இருக்கின்றன, இயங்குகின்றன என்று நாம் நிரூபிக்க முடியும்.
2. கடவுள்தான் உலகைப் படைத்தார்
இதற்கு ஆதாரங்களோ, அனுபவங்களோ முன்வைக்கப்படுவதில்லை. மதவாதிகள் சொல்வதை அப்படியே நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பொருளை மனது படைக்க வேண்டுமானால், பொருள் உருவாவதற்கு முன்பு மனம் அல்லது ஆன்மா தனியாக இருந்திருக்க வேண்டும். அப்படி ஒன்றை நாம் பார்க்கவே முடிவதில்லை. (ஆனால், மனம் இல்லாத பல பொருட்களை நாம் பார்க்கிறோம்).
பொருள்கள்தான் மனதை உருவாக்குகின்றன. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று பொருள்முதல்வாதம் நிறுவுகிறது.
இப்படி நெருக்கிப் பிடித்தால் கருத்து முதல்வாதிகளில் சிலர் மூன்றாவது ஒரு தத்துவத்துக்குள் தப்பிக்கப் பார்ப்பார்கள். இதுதான் சந்தேகவாதம். பொருட்கள் இருக்கலாம் (அல்லது இல்லாமல் போகலாம்), ஆனால் அவற்றை நாம் முற்றிலும் அறிந்து கொள்வது சாத்தியமில்லை. அறிவியல் மூலம் நம்மால் தெரிந்து கொள்பவற்றுக்கு அப்பால் பொருட்களை நாம் அறிந்து கொள்ள முடியாது. நாம் அறிந்த பொருள், தானே ஆகிய பொருள் இல்லை.
ஹ்யூம் என்ற ஆங்கிலேயரும் கான்த் என்ற ஜெர்மானியரும் இந்த தத்துவத்தை முன் வைக்கிறார்கள். புறநிலையில் ஒரு உலகம் நமது சிந்தனைகளை சாராமல் இருக்கிறது ஆனால் உலகம் இருப்பது ஒரு யதார்த்தம் இல்லை. யதார்த்தம் என்பது நமது புலன்களின் பிரதிபலிப்பே!
எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும் என்று பேசக் கூடாது. அறிவியலுக்கு உரித்தான தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும்.
இதுவும் கருத்து முதல்வாதத்தின் ஒரு வெளிப்பாடுதான்.
பொருட்களின் வெளித்தோற்றங்களைத்தான் அறிவியல் வெளிப்படுத்துகிறது. தானே ஆகிய பொருளைப் பற்றி அது சொல்வதில்லை, சொல்லவும் முடியாது.
Proof of pudding is in eating it தோசையைத் தின்று பார்த்தால் அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரிந்து விடுகிறது. பேருந்தின் முன் விழுந்து பார்த்தால் அது குறித்தான சந்தேகம் தீர்ந்து விடுகிறது.
உலகம் இல்லை, மாயை என்று சொல்வதற்கும், உலகம் இருக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று சொல்வதற்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை. இரண்டு பேருமே கருத்து முதல்வாதத்தில்தால் கொண்டு விடுகிறார்கள்.
0 comments:
Post a Comment