நவம்பர் 7. மனித வரலாற்றின் ஒரு மாபெரும் முன்னேற்ற பாய்ச்சலான ரஷ்ய சோஷலிசப் புரட்சியில் முக்கியமான ஒரு நாள் 1917ஆம் ஆண்டின் நவம்பர் 7.
நவம்பர் புரட்சி பற்றிய விபரங்கள் நமக்கு - ஒட்டு மொத்த மனித குலத்திற்கு - ஒரு வாழும் ஆவணமாக இருக்கின்றன.
உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய சூழ்நிலை என்ன?
புரட்சி எப்படி நடந்தது?
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு காலமும் இடமும் எப்படி அமைந்தன?
இவை எல்லாவற்றையும் நமது காலத்திற்கு நமது சமூகத்திற்கு எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று நடைமுறை பாடமாக அது திகழ்கிறது.
1. 1905க்கு முன் ரஷ்யாவின் சமூக அமைப்பு
2. 1905ல் ஏற்பட்ட புரட்சியும் சமரச அரசியல் அமைப்பும்
3. 1905 முதல் 1917 வரை ஏற்பட்ட மாற்றங்கள்.
4. 1917 மார்ச் (பிப்ரவரி) மாதம் ஜார் மன்னர் தூக்கி எறியப்படுதல்.
5. 1917 மார்ச் முதல் நவம்பர் வரையிலான நிகழ்வுகள்
6. 1917 நவம்பருக்குப் பின் 1923 வரை சோவியத் அரசாங்கம் நடத்த வேண்டியிருந்த போர்கள்
டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரனீனா அல்லது சிறுகதைகளைப் படித்தால் அந்த நூற்றாண்டு ரஷ்ய சமூகத்தின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ளலாம்.
19ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் தலைமையில், அரச குடும்பத்தினர், நிலபிரபுக்கள் என்ற சமூக அடுக்குகளை உழைக்கும் மக்கள், விவசாயிகள், போர்வீரர்கள் சுமக்க வேண்டியிருந்தது. ஆளும் வர்க்கத்தின் வரிசைகளில் இருந்து மதகுருக்கள், படைத் தளபதிகள் உருவானார்கள்.
ஐரோப்பாவில் ஆதிக்க சக்திகளுக்கிடையே நடக்கும் போர்களில் ரஷ்யா கலந்து கொள்வது 18ஆம் நூற்றாண்டின் நெப்போலியனிக் போர்களிலேயே ஆரம்பித்த ஒன்று. பெரும் அளவிலான ரஷ்ய படைகள், பிரபுக்களை படைத் தலைவர்களாகக் கொண்டு, விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் பெரும் அளவில் போர் முனையில் பலி கொடுப்பது என்ற வகையில்தான் ஜார் மன்னர்களின் வெளியுறவுக் கொள்கை அமைந்தது. ஐரோப்பிய சமூகத்தில் தான் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்ற ஜார் மன்னனின் கற்பனை செருக்குக்கு இந்த போர்கள் உதவி புரிந்தன.
அரச குடும்பத்தினர், பிரபு குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ஆதிக்க உரிமைகளை பெற்று வந்தார்கள். அரச குடும்பத்தினரும், பிரபு குடும்பத்தினரும் படைகளில் தலைமை பொறுப்பு, அரசு அதிகாரிகளாக நேரடியாக உட்காரும் வாய்ப்பு பெற்றிருந்தார்கள். பிரெஞ்சு மொழி உயர் தட்டு மக்களின் மொழியாக இருந்தது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிவுஜீவிகளும், தொழில்முறை வல்லுனர்களும் ஜார் மன்னரின் அவையில் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கும் சேர்த்து உழைத்தார்கள். சீமான்களும் சீமாட்டிகளும் சாப்பிடுவதும், நடனமாடுவதும், வேட்டைக்குப் போவதும், குடிப்பதுமாக பொழுதை கழித்தனர்.
இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி ரஷ்யாவிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது. விவசாயத்தில் நவீன கருவிகளை பயன்படுத்துதல், தொழில்துறையின் ஆரம்ப கட்டங்களில் மக்களிடையே மாற்றங்களுக்கான விழிப்புணர்வு ஏற்பட்டு, போராட்டங்கள் ஆரம்பிக்க ஆட்சி முறையில் தேர்தல் முறை அறிமுகப்படுத்துதல் போன்ற சீர்திருத்தங்கள் தோன்ற ஆரம்பித்தன.
மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மார்க்சிய அணுகுமுறையும் ரஷ்யாவுக்குள் பரவி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கத்தை 1895ல் லெனின் ஏற்படுத்தியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது. அந்த கட்சியிலிருந்துதான் போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் உருவானார்கள். 1903ல் நடந்த கட்சியின் இரண்டாவது காங்கிரசில் பெரும்பான்மை பெற்றிருந்த கோஷ்டி போல்ஷ்விக் என்றும் சிறுபான்மையினர் மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர். பொதுவாக போல்ஷ்விக்குகள் உழைக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தினார்கள். தொழிற்சாலைகளிலும், கிராமங்களிலும், போர்வீரர் பாசறைகளிலும் தமது பிராச்சாரத்தை செய்து வந்தார்கள்.
1905ல் ஜார் மன்னர், டூமா என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகள் மூலம் ஆட்சி செய்யும் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நகரங்களிலும் டூமாக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாக பணிகளில் பங்குபெற்றனர். 1905 முதல் 1917 வரையிலான கால கட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த, அவர்கள் வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மேலும் மேலும் ஏகாதிபத்தியங்களின் அழுத்தமும் ஜார் மன்னராட்சியின் கீழ் நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டலும் மேலும் மேலும் மக்களை கடுமையான கொடுமைக்குள்ளாக்கின.
கம்யூனிச அரசியல் அடிப்படைகள் உருவாக்கப்பட்டு விட்ட உலக சமூகத்தில் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு வேகமாக பரவியிருந்தது. சோஷலிச கட்சி மக்களிடையே வேலை செய்து தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் சோவியத்துகளை ஏற்படுத்தியிருந்தனர். சோவியத் என்பது உழைக்கும் மக்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருந்த பிரதிநிதித்துவ அரசியல் அமைப்புகள்.
1917 நவம்பர் புரட்சியின் போது உலகைக் குலுக்கிய 10 நாட்கள் நூலை எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீட் பெட்ரோகிராடுக்கு அடுத்த புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த பெட்ரோகிராடைத் தாக்க எதிர்ப் புரட்சிப் படைகள் வந்து விட்டதாக சொல்லப்பட்ட ட்சார்கோயே செலோ நகருக்கு ரயிலில் போகிறார். அங்குதான் தற்காலிக அரசின் தலைவர் கெரென்ஸ்கி கசாக் குதிரைப்படை வீரர்களைத் திரட்டி எதிர் புரட்சியை தலைமை வகித்து நடத்த தயாராகி வந்தார்.
ரயில் நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியில் வருகிறார் ஜான் ரீட்.
ரயில்நிலைய வாசலில் இரண்டு படைவீரர்கள் துப்பாக்கியுடன் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்களை நூற்றுக்கணக்கான வணிகர்கள், அரசு அதிகாரிகளும் மாணவர்களும் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தனர். இரண்டு சிப்பாய்களும் மனதளவில் நெளிந்து கொண்டிருந்தார்கள். மாணவர் சீருடை அணிந்த ஒரு இளைஞன்
"உங்கள் சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்பதன் மூலம் நீங்கள் கொலைகாரர்கள் மற்றும் துரோகிகளின் கைக்கூலிகளாகி விட்டீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?"
"இல்லை அண்ணே, உங்களுக்குப் புரியவில்லை, இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன- பாட்டாளி வர்க்கம், சுரண்டும் வர்க்கம். நாங்கள் ....."
"ஓ, எனக்குப் புரிந்து விட்டது. யாரோ சொன்ன சில வெற்று வார்த்தைகளை பிடித்துக் கொண்டு முட்டாள் விவசாயிகளான நீங்கள் அது என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே கிளிகள் போல பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் மார்க்சியம் படித்திருக்கிறேன். நீங்கள் போராடுவது சோசலித்துக்காக இல்லை, ஜெர்மானிய ஆதரவு அராஜகத்துக்குத்தான் என்று நான் சொல்கிறேன்"
"ஆமாமா, அது சரிதான், நீங்க படிச்ச ஆளு, அதனால் எளிதாக புரிகிறது. நான் ஒரு சாதாரண ஆளு, ஆனா என்னைப் பொறுத்த வரை ....." படைவீரரின் முகம் வேர்த்து விட்டிருந்தது.
"லெனின் பாட்டாளி மக்களின் உண்மையான நண்பர் என்று சொல்றீங்களா?"
"ஆமா" - சங்கடத்துடன் படைவீரர் பதில் சொல்கிறார்.
"லெனின் ஜெர்மனியிலிருந்து மூடப்பட்ட காரில் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லெனின் ஜெர்மானியர்களிடமிருந்து காசு வாங்கினார் என்பது தெரியுமா?"
"அதைப் பற்றி எனக்கு விபரங்கள் தெரியாதுதான். ஆனால், அவர் சொல்வதுதான் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் கேட்க விரும்பும் மாற்றம் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டே வர்க்கங்கள்தான் இருக்கின்றன, பாட்டாளி வர்க்கம், சுரண்டும் வர்க்கம் ....." விடாப்பிடியாக தொடர்கிறார்.
"நீ ஒரு முட்டாள், நண்பா. நான் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரியாவில் புரட்சி பணிகளுக்காக செலவிட்டிருக்கிறேன். அப்போ எல்லாம் நீங்க புரட்சியாளர்களை எதிர்த்து சுட்டுக் கொன்று விட்டு, ஜார் மன்னரின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பீர்கள். என் பெயர் வசீலி ஜார்ஜியோவிச் பான்யின். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"மன்னிச்சுக்கோங்க, கேள்விப்பட்டதேயில்லை. நான் படிக்காத ஆளு, நீங்க ஒரு பெரிய ஹீரோ" என்று அடக்கத்துடன் பதில் அளிக்கிறார்.
"உண்மைதான், நான் போல்ஷ்விக்குகள் ரஷ்யாவை அழிக்கிறார்கள், நமது புரட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறேன். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?"
படைவீரர் தலையைச் சொறிந்தார். "அதற்கு என்னிடம் விளக்கம் இல்லைதான், என்னைப் பொறுத்த வரை ரொம்ப சிம்பிள் பிரதர். நான் அதிகம் படிச்சவனில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை, இரண்டே வர்க்கங்கள்தான் இருக்கின்றன. பாட்டாளி மக்கள், சுரண்டும் வர்க்கம்...."
"திரும்பவும் அந்த முட்டாள்தனமான சூத்திரத்தை ஆரம்பித்து விட்டீங்க" கடுப்பாகி விட்டார் மாணவர்.
"--இரண்டு வர்க்கங்கள் மட்டும்தான்," விடாப்பிடியாக தொடர்கிறார் படைவீரர்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்கள், வாழ்வா சாவா போராட்டங்கள் ரஷ்யா முழுவதும் தெருக்களிலும், தொழிற்சாலை குழுக்களிலும், போர்ப்படை அணிகளிலும், விவசாயிகள் அமைப்புகளிலும் நடந்து வந்தன. உழைக்கும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். படித்தவர்கள், அறிவுஜீவிகள் என்னதான் குழப்பினாலும், குழம்ப தயாராக இல்லை.
மீண்டும் ஜான் ரீடின் புத்தகத்துக்கு வருவோம். மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை எதிர்ப் புரட்சிப் படையினர் கைப்பற்றியிருக்க, செம்படையினர் பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் தாக்கப்படுகிறார்கள், வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்ற வதந்திகள் பெட்ரோகிராடில் பரவின. நிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஜான் ரீட் மாஸ்கோவுக்குப் போகிறார்.
புரட்சி தலைமையகத்திலிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு புறப்படுகிறார்கள். ரயில் நிலையத்துக்குள் ரயில் நுழைந்ததுமே, அழுக்கான ஒரு படைவீரர் கூட்டம், உணவு மூட்டைகளை தூக்கிக் கொண்டு எல்லா கதவுகளையும் மொய்த்தார்கள். ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து எல்லா பெட்டிகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். நடைபாதைகளிலும் கூரையிலும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். ஜான் ரீடும் அவருடன் 2 பேரும் ஒரு பெட்டிக்குள் நெருக்கி அடித்துக் கொண்டு நுழைந்தார்கள். உடனேயே 20 படைவீரர்களும் நுழைந்து விட்டார்கள். நான்கு பேருக்குத்தான் இடம் இருந்தது.
நாங்களும் ரயில் அதிகாரியும் அவர்களுடன் விவாதம் புரிந்தோம், அவர்கள் சிரித்தார்கள். 'ஒரு பூர்ஷ்வா கூட்டத்தின் வசதியைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை?'. ஸ்மோல்னியிலிருந்து பெற்ற அனுமதிச் சீட்டை காட்டிய உடனேயே அவர்கள் மாறி விட்டார்கள்.
"வாங்க தோழர்களே, இவர்கள் அமெரிக்க பத்திரிகையாளர்கள், 30,000 மைல்கள் தாண்டி வந்து நமது புரட்சியை பார்க்க வந்திருக்கிறார்கள், இயல்பாகவே களைப்பாக இருப்பாங்க" என்று ஒருவர் சத்தம் போட, நட்புடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு படைவீரர்கள் கிளம்பி விட்டார்கள். சிறிது நேரத்தில் இரண்டு தடித்தடியான ரஷ்ய பணக்காரர்கள் லஞ்சம் கொடுத்து கதவை தாழ் போட்டு வைத்திருந்த பெட்டிக்குள் அவர்கள் நுழையும் சத்தம் கேட்டது.
மாலை 7 மணி வாக்கில் ரயில் புறப்பட்டது, எங்கும் ஒரே நெரிசல், புகை மூட்டமாகவும், கூச்சலாகவும் இருந்தது. இரவு முழுவதும் தூக்கமில்லாமல் ரஷ்யாவின் கட்சிகள், புரட்சி, இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் முழுவதும் கடும் குளிரில் ரயில் நின்று போன நிலையங்களில் பசியில் தவித்த பெருங்கூட்டம் இறங்கி கிடைத்த உணவுப் பொருட்களை திணித்து பசியாற முயற்சித்தார்கள். மாஸ்கோ போய் சேருவதற்கு முன்பு ஒவ்வொரு பெட்டியிலும் உணவுப் பொருட்களை வாங்கி வினியோகிக்க ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த கமிட்டிகளும் அரசியல் குழுக்களாக பிரிந்து விவாதித்துக் கொண்டார்கள்.
இப்படி உழைக்கும் மக்களின் அரசியல் அறிவும் தம்மைத் தாமே அமைப்பு மயமாக்கிக் கொள்ளும் போக்கும் உச்சத்தில் இருந்த ரஷ்யாவில் நிகழ்வுகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன.
1914ஆம் ஆண்டு செர்பிய மாணவன் ஒருவன் ஆஸ்திரிய இளவரசரை செர்பிய தலைநகரான சாரயேவில் சுட்டுக் கொன்றான். ஒரு பக்கத்தில் ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, துருக்கி மறுபக்கத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போரில் இறங்கின.
ஒவ்வொரு நாடும் போரில் இறக்கிய படைவீரர்களின் எண்ணிக்கையை பார்த்தால் ரஷ்யாவின் பங்கு என்ன என்று புரிந்து கொள்ளலாம்.
1. ஜெர்மனி - 38 லட்சம், ஆஸ்திரியா/ஹங்கேரி - 23 லட்சம், துருக்கி - 18 லட்சம்
2. பிரிட்டன் - 10 லட்சம், பிரான்ஸ் - 37 லட்சம், ரஷ்யா - 53 லட்சம்.
ஐரோப்பிய யுத்தங்களில் ரஷ்யாவின் பங்கு இப்படி பீரங்கி குண்டுகளுக்கு முன்பு இரையாக பெருமளவு படைகளை அனுப்பி வைப்பதாக இருப்பதை நெப்போலியன் காலத்து போர்களிலும், முதலாம் இரண்டாம் உலகப் போரிலும் பார்க்கலாம். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்து விரிந்திருக்கும் ரஷ்யாவின் பலம் அதன் ஆழமான நிலப்பரப்பும், கணிசமான மக்கள் தொகையும்தான்.
ஹிட்லர் பிரான்சை பிடிப்பதற்கு ஒரு சில மாதங்கள்தான் தேவைப்பட்டன. ஆனால், இது வரை வரலாற்றில் எந்த அன்னிய சக்தியும் ரஷ்யாவை பிடித்து ஆள முடிந்ததே இல்லை. அவ்வளவு பெரிய நிலப்பரப்பை படையெடுத்து சென்று ஆதிக்கம் செலுத்துவது என்றது ஒரு சராசரி ஐரோப்பிய ஆதிக்க சக்திக்கு சாத்தியம் இல்லாததாகவே இருந்து வந்திருக்கிறது.
அதனால் ரஷ்யா நிலப்பரப்பை ஒரு தாக்குதலை நீர்த்துப் போகச் செய்யும் செயல் தந்திர நடவடிக்கைக்கும், ரஷ்ய படைவீரர்களை போர்க்களத்தில் பலியாடுகளாக அனுப்பும் உத்திக்கும் அன்றைய ஐரோப்பிய ஆளும் சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. ஜார் மன்னருக்கு போர் என்பது அவரது புகழையும் செல்வாக்கையும் பரவச் செய்யும் ஒரு நடைமுறை. அதில் மக்கள் கொல்லப்படுவதும், துன்பப்படுவதும் சமாளிக்கப்பட வேண்டிய ஒரு சிக்கல் அவ்வளவுதான்.
அரசியல் விழிப்பு பெற்றிருந்த உழைக்கும் மக்களின் மீதான சுமை முதலாம் உலகப்போரின் விளைவால் பல மடங்கு அதிகரித்தது. பிரிட்டனும், ஜெர்மனியும் தமது ஏகாதிபத்திய விரிவாக்கப் போட்டியால் உருவான இந்த யுத்தத்தின் சுமையை எல்லா நாடுகளின் உழைக்கும் மக்களைப் போல ரஷ்ய உழைக்கும் மக்களும் பெருமளவு சுமந்தனர். அரசாங்கமோ இன்னமும் மேல் தட்டு மக்களின் ஆடம்பர வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்பதாகவே தொடர்ந்தது. பொருளாதாரத்தின் அன்னிய முதலீடு பல மடங்கு அதிகரித்திருந்தது. விலைவாசி பல மடங்கு உயர்ந்தது, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்தது.
இந்த நெருக்கடிகளின் மத்தியில் 3 ஆண்டுகள் போரில் ரஷ்யா ஈடுபடுத்தப்பட்டிருந்தது. சரியான சாப்பாடு, உடைகள் இல்லாமல் போர் முனையில் அவதியுற்றுக் கொண்டிருந்த போர்வீரர்கள் "யாருக்காக போரிட்டு சாகிறோம்" என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள். போர்க்கால பொருளாதார நெருக்கடியால் தொழிலாளர்களும் விவசாயிகளும் மேலும் மேலும் அவதிகளுக்கு ஆழாகிக் கொண்டிருந்தார்கள்.
1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளின் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பெட்ரோகிராடில் திரண்டு 'உணவு கொடு, யுத்தம் ஒழிக, பெண்களுக்கு வாக்குரிமை கொடு' என்று முழங்கினார்கள். பெண்களை ஆதரித்து 1 லட்சத்து 28 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். போல்ஷ்விக்குகள் இந்த போராட்டங்களுக்கு அரசியல் தலைமையும் கட்சி அமைப்பையும் வழங்கினார்கள். அடுத்த நாள் வேலை நிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்தது. மூன்றாவது நாள் (மார்ச் 10) பொது வேலைநிறுத்தம் நகரத்தையே முடக்கிப் போட்டது.
அன்று மாலை கலவரத்தை அடக்கும்படி ஜார் மன்னர் நகரத்தின் படைத் தளபதிக்கு ஆணையிட்டார். நான்காவது நாள் தொழிலாளர்களுக்கும் போலீஸ்-ராணுவத்துக்கும் ரத்தக் களறியான சண்டைகள் பல பகுதிகளில் நடந்தன. ஐந்தாவது நாள் (மார்ச் 12) 1 லட்சம் படைவீரர்கள் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆறாவது நாள், 1 லட்சத்து 27ஆயிரம் பேர் ஆனார்கள். மார்ச் 12 மாலையில் தொழிலாளர்களும் படைவீரர்களும் பெட்ரோகிராட் சோவியத்தை தேர்ந்தெடுத்தனர்.
ஜார் மன்னரின் கீழ் இயங்கி வந்த நகர டூமா உறுப்பினர்கள் அன்று மாலையே தற்காலிகக் குழு என்று அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற தயாரானார்கள். தொழிலாளர், படைவீரர் எழுச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெட்ரோகிராட் சோவியத்தின் ஆதரவோடு ஜார் மன்னரை பதவியிறக்கி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
புதிய அரசாங்கத்தில் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும், தொழிலாளர்களை ஒடுக்கும் ஆலை அதிபர்களும், ஏகாதிபத்திய போரில் ரஷ்யா விடாமல் போரிட வேண்டும் என்ற கொள்கையுடையவர்களும் அதிகாரத்தில் அமர்ந்தார்கள். இப்படியாக, அடிப்படை முரண்பாடுகள் கொண்ட பெட்ரோகிராட் சோவியத் ஒரு பக்கமும், மேல் தட்டு மக்களின் தற்காலிக அரசு இன்னொரு பக்கமும் அதிகாரம் கொண்டிருந்தன. மென்ஷ்விக்குகளின் ஆதிக்கத்தால் சோவியத்துகளின் மத்திய கமிட்டி மேல்தட்டு மக்களிடம் விட்டு வைத்திருந்தது.
மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் வலுக்க தற்காலிக அரசாங்கமும் பல முறை மாற்றியமைக்கப்பட்டு சோசலிச சமரச வாத குழுக்கள் அதிகாரத்தில் அமர்ந்தன.
ஆனால், படைப்பிரிவுகள் இடையேயும், தொழிலாளர்களிடையேயும் சோசலிச சீர்திருத்த நடவடிக்கைகள் சோவியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 ஏப்ரல் 16ஆம் தேதி நாடு கடத்தப்பட்டிருந்த லெனின் நாடு திரும்பி, போருக்கு எதிரான போல்ஷ்விக்குகளின் நிலைப்பாட்டை அறிவித்தார். தற்காலிக அரசாங்கத்துடன் வெளிப்படையான முரண்பாடாக அது அமைந்தது. ஏற்கனவே பார்த்தது படி தற்காலிக அரசாங்க தலைவர்கள் வெற்று கோஷங்களுடன் போரை தொடர்ந்து நடத்தும் நிலைப்பாட்டில் இருந்தனர்.
நிலச் சீர்திருத்தம், தொழிலாளர்களின் கோரிக்கை எப்போது நடக்கும் என்று கேட்டால், விரைவில் அரசியல் அமைப்பு அவையைக் கூட்டப் போவதாகவும், அதில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உருவாக்கப்படும் என்று சமாதானம் சொல்லி வந்தார்கள். மக்களைப் பொறுத்த வரை, தற்காலிக அரசாங்கம், அரசியல் அமைப்பு சபை, சோவியத் என்று அமைப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் கிராமங்களில் நிலங்களை பங்கிடுதலையும், தொழிற்சாலைகளில் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதிலும் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்.
போருக்கு எதிரான மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறையை அவிழ்த்து விட்டனர். ஜூலை 17 அன்று அமைதியாக கூடியிருந்த 5 லட்சம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 56 பேரைக் கொல்லவும் 650 பேர் படுகாயமடையவும் காரணமாக இருந்தனர். புரட்சிக்குத் தலைமை வகித்த லெனின் தலைமறைவாக வேண்டி ஆனது. ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் போல்ஷ்விக்குகளின் பெட்ரோகிராடில் ரகசியமாக கூட்டப்பட்டது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கைப்பற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தற்காலிக அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக கேரென்ஸ்கியும், தலைமை ராணுவ தளபதியாக கர்னீலவும் இருந்தார்கள். செப்டம்பர் முதல் வாரத்தில் ஜெனரல் கர்னீலவ் பெட்ரோகிராடின் மீது படையெடுத்த வந்ததை புரட்சிகர படைவீரர்கள் எதிர்த்து ஒடுக்கினார்கள். போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு நாடு முழுவதும் உயர்ந்தது.
அக்டோபர் மாத மத்தியில் லெனின் பெட்ரோகிராடுக்குத் திரும்பி ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கான செயல்திட்டத்தை உருவாக்கினார். அக்டோபர் 23ஆம் தேதி கட்சி அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது.
பெட்ரோகிராடில் புரட்சி அணிகள் இப்படி இருந்தன:
1. பால்டிக் கடற்படை மாலுமிகள்
2. தொழிற்சாலைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த செங்காவலர்கள்
3. படையணிகளில் இருந்த புரட்சிகர படையாட்கள்.
பெட்ரோகிராட் சோவியத்தின் முதல் காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். நாடெங்கிலும் உள்ள சோவியத்துகளில் போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகரித்திருந்த நிலையில் இரண்டாவது காங்கிரசைக் கூட்டுவதில் மென்ஷ்விக்குகள் முதலான சமரச சோசலிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய மத்திய கமிட்டி, ட்சாய் ஈ கா, நாடு முழுவதுக்குமான சோவியத் காங்கிரசைக் கூட்டி புதிய மத்திய கமிட்டி அமைப்பதைத் தள்ளிப் போட முற்பட்டனர்.
'விரைவில் அரசியல் அமைப்புச் சபை கூடி புதிய அரசாங்கம் அமைய இருப்பதால், அதன் பிறகு சோவியத்துகளுக்கு தேவை இல்லை ஆதலால் இப்போது காங்கிரசு கூட்ட வேண்டியதில்லை' என்று வாதிட்டார்கள்.
ஆனால் போல்ஷ்விக்குகள் நவம்பர் மாதம் அனைத்து ரஷ்ய தொழிலாளர், படைவீரர் சோவியத்துகளின் காங்கிரசு பெட்ரோகிரேடில் கூடும் என்று அறிவித்தார்கள். அதில் கலந்து கொள்ள நாடெங்கிலுமிருந்த பிரதிநிதிகள் வந்தனர். அதன் மூலம் புதிய மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் நிச்சயம் போல்ஷ்விக்குகளின் பெரும்பான்மை இருக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது.
தற்காலிக அரசாங்கம் பெட்ரோகிராட் படைப்பிரிவை போர் முனைக்கு அனுப்ப முயற்சித்தது. பெட்ரோகிராட் படைப்பிரிவில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மையாக இருந்தார்கள். போர்முனையிலிருந்து வந்த போர்ப்படை பிரதிநிதிகளும் பெட்ரோகிராடில் புரட்சிக்கு படைப்பிரிவு தேவை என்று சொன்னார்கள். படைப்பிரிவு அரசாங்கத்தின் ஆணையை செயல்படுத்த மறுத்தது. ஒரு ராணுவ புரட்சி கமிட்டியை ஏற்படுத்தினார்கள்.
சோவியத் பிரதிநிதிகளின் காங்கிரசில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மற்ற சோசலிச குழுக்களும் கலந்து கொள்வார்கள். ஒட்டு மொத்த காங்கிரசையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். காங்கிரசு 7ஆம் தேதி கூடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
போல்ஷ்விக்குகள் எப்போது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று லெனின் சொல்கிறார்.
'நவம்பர் 6 சீக்கிரமாகி விடும். அனைத்து ரஷ்ய அடிப்படை நமக்கு இல்லாமல் போய் விடும். நவம்பர் 6 அன்று எல்லா சோவியத் பிரதிநிதிகளும் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், நவம்பர் 8 தாமதமாகி விடும். அதற்குள் காங்கிரசு அமைக்கப்பட்டு விடும், அமைப்பு ரீதியான ஒரு அவை விரைவான இறுதியான முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை.
நாம் காங்கிரசு கூடும் நவம்பர் 7ஆம் தேதி செயலில் இறங்க வேண்டும். "இதோ அதிகாரம் நம் கையில், இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று காங்கிரசின் முன்பு நாம் சொல்ல முடிய வேண்டும்.'
நவம்பர் 6ஆம் தேதி போல்ஷ்விக்குகளின் பத்திரிகை அலுவலகம் மீது அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கையை கப்பல்படை புரட்சியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தற்காலிக அரசாங்கம் ராணுவ பிரிவுகளையும், ஊர்க்காவல் படைகளையும் திரட்ட ஆரம்பித்து நகரத்தில் அணிவகுக்க வைத்தது.
புரட்சியில் ராணுவத் தலைமையகமாக சோவியத் காங்கிரசு கூடும் இடம் ஸ்மோல்னி இன்ஸ்டிடுயூட். புரட்சிக்கு முன்பு மேல்தட்டு இளம்பெண்களின் கல்விநிலையமாக இருந்தது. நகருக்கு வெளியே நகர எல்லையில் இருந்தது. பெண்களுக்கு பிரெஞ்சு மொழி பேசவும், பியானோ வாசிக்கவும், நடனம் ஆடவும் கற்றுக் கொடுக்க பயன்படுத்தப்பட்ட வகுப்பறைகள் புரட்சியின் பாசறையாக மாறியிருந்தன.
தற்காலிக அரசாங்கத்தின் பாசறையாக குளிர்கால அரண்மனையில் பிரபு குலத்தைச் சேர்ந்த போர் வீரர்களும், தற்கொலைப் படையினர் என்று அழைக்கப்பட்ட பெண்கள் படையினரும் இருந்தார்கள். ஜான் ரீடை சுற்றிக் காண்பித்த படை வீரர், அமெரிக்காவுக்கு எப்படி குடிபெயர்வது என்ற விபரங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
புரட்சியின் தலைமையகமான ஸ்மோல்னியிலோ, இரவும் பகலும் தூங்காமல் பணி புரிந்து கொண்டிருக்கும் தலைவர்களும், இளைஞர்களும், தொழிலாளர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நவம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் புரட்சியாளர்கள் நகரத்தின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். தற்காலிக அரச அமைச்சர்கள் குளிர்கால அரண்மனையில் கலந்தாய்வு நடத்திக் கொண்டிருந்த போது கப்பற்படை கப்பலின் துப்பாக்கி முழக்கம் கேட்டது. அதைக் கேட்டதுமே கதி கலங்கிய தலைவர்கள், போர்வீரர்கள் சரணடைந்து விட செம்படையினர் குளிர்கால அரண்மனையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
இப்போது சோவியத்துகளின் காங்கிரசு ஆரம்பமாகிறது. போல்ஷ்விக்குகள் அதிகாரக் கைப்பற்றலை அறிவித்ததும், பல உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். 'இது அராஜகத்தில்தான் கொண்டு போய் விடும், போல்ஷ்விக்குகள் நாட்டை ஜெர்மனிக்கு அடிமையாக்கி விடுவார்கள்' என்று பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் புலம்ப ஆரம்பித்தார்கள்.
அவர்களை எதிர்த்து படைவீரர்கள், தொழிலாளர் பிரதிநிதிகள் உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் தேவையை ஆதரித்துப் பேசுகிறார்கள்.
இந்தக் கட்டத்தில் லெனின் மேடையில் ஏறி நிற்கிறார். பெரும் கைத்தட்டல் நின்று கூட்டம் அமைதியாவது வரை காத்திருக்கிறார்.
'சோஷலிச கட்டமைப்பு உருவாக்கத்தை நாம் ஆரம்பிக்கலாம்' என்று சொல்கிறார். பெரும் முழக்கங்கள்.
1. ஆக்கிரமிக்கும் நாட்டைச் சேர்ந்த மக்களை அனைவருக்கும் சோவியத் கொள்கைப்படி அமைதி ஒப்பந்தத்தை அறிவிக்கிறோம் - பிரதேச இணைப்பில்லாத, பிணைத் தொகை இல்லாத, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமாதானம். "நவம்பர் 6,7ல் நடந்த புரட்சி சோஷலிச புரட்சி யுகத்தை ஆரம்பித்திருக்கிறது. அமைதியின் பெயராலும், சோசலிசத்தின் பெயராலும் தொழிலாளர் இயக்கம் வெற்றி பெற்று தனது கடமையை நிறைவேற்றும்"
2. நிலத்தின் மீதான தனி உடைமை எந்த விதமான இழப்பீடும் இல்லாமல் ரத்து செய்யப்படுகிறது. நிலப்பிரபுக்களின் பண்ணைகளும், அரசாங்கத்தின், மதகுருக்களின் நிலங்களும் அந்தந்த பகுதி நில கமிட்டிகளின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றன.
3. தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர் கமிட்டிகளின் பொறுப்பிற்கு வருகிறது.
இதைத் தொடர்ந்து சோவியத் மத்திய அரசின் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இதன் விளைவுகள் அலை அலையாக பரவின. புரட்சியாளர்களும் எதிர் புரட்சியாளர்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொழிற்சாலைகளை தொழிலாளர்களுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாத முதலாளிகள் இயந்திரங்களை உடைத்து சேதப்படுத்த ஏற்பாடுகள் செய்தனர். போர்முனையில் படைவீரர் கமிட்டி எடுக்கும் முடிவை செயல்படுத்துவதை விட ஜெர்மானியர்களை வெற்றி பெறச் செய்யலாம் என்று ரஷ்ய தேச பக்தர்கள் என்று பேசி வந்த படைத்தளபதிகள் பணியாற்றினார்கள்.
அரசு வங்கி ஊழியர்கள், தொலைபேசி இணைப்பக ஊழியர்களான பெண்கள், நகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். புதிய அரசின் பிரதிநிதிகளை மதிக்க மறுத்து அமைச்சகங்களில் ஊழியர்கள் முரண்டு பிடித்தார்கள்.
பெட்ரோகிரேடில் இருந்து தப்பிச் சென்ற தற்காலிக அரசின் பிரதம மந்திரி கெரென்ஸ்கி கொசாக் குதிரைப்படையினரை வைத்து பெட்ரோகிராடை தாக்க முயற்சிகள் செய்து வந்தார். விவசாயிகள் புரட்சி அரசாங்கத்தை ஆதரிக்க வில்லை என்று எதிர்புரட்சியாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஆதிக்க சக்திகளின் இரு பக்க பகை நாடுகளும் புரட்சியை எதிர்ப்பதற்காக போரை முடிவுக்குக் கொண்டு வந்து ரஷ்யாவில் எதிர் புரட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்கள். பல லட்சக்கணக்கான பவுண்ட் செலவில் வெள்ளைப் படைகள் ரஷ்யாவுக்குள் கலகம் செய்ய அனுப்பப்பட்டன. தேசிய இனங்களின் பகுதிகளில் உள்ளூர் குட்டி முதலாளிகள் சோவியத்துகளை எதிர்த்து முதலாளித்துவ கைபொம்மை அரசுகளை நிறுவினார்கள்.
அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவற்றை எல்லாம் எதிர்த்து தீரத்துடன் போராடி, தமது புரட்சியை வெற்றிகரமாக காப்பாற்றித் தொடர்ந்தார்கள் ரஷ்யாவின் உழைக்கும் மக்கள். 1923ல் எதிர் புரட்சி கலகங்கள் அடக்கப்பட்டு, சோவியத்துகளின் கூட்டமைப்பான சோவியத் யூனியன் வலுவான ஒரு அமைப்பாக உருவாகியிருந்தது.
0 comments:
Post a Comment