- போட்டி போடும் மேலாளராக எஸ்பி பாலசுப்பிரமணியன். தெற்கத்தி புதுப் பணக்கார தொழிலதிபர் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.
- பிரியாவாக காஜோல். தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே பார்த்ததிலிருந்தே அவரது அழகுக்கு அடிமையாகி இருந்தேன். மின்சாரக் கனவு அதற்கு முன்பு பார்த்ததா என்று நினைவில்லை. இதுவும் இந்தப் பாத்திரத்துக்கு என்றே வளர்ந்து நடிகையானது போன்ற முக அமைப்பு, உடல் மொழி. தென் தமிழகத்தின் கிருத்துவ இளம் பெண்ணாக வாழ்ந்து காட்டுகிறார்.
- ராபர்ட்டாக அரவிந்த் சாமி. அமுல் பேபி, அமெரிக்கன் ரிட்டர்ன், பெண்களுடன் கலாய்த்தல், பிரியாவிடம் காதலைச் சொல்லாமல் சொதப்புதல் என்று ஒரு இளைஞனின் பாத்திரத்தைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
- பிரியாவின் அப்பா கிரிஷ் கர்னாட். அவரும், கன்னியர் மடத்தின் தலைமைத் தாயும், பிரியா வீட்டு பணியாளராக வருபவரும் தத்தமது பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.
- படத்தின் ஹீரோ யார் என்று கேட்டால் கொஞ்சம் குழப்பம் வரும். காஜோல் கதாநாயகி என்றால் கதாநாயகன் ரகுமானின் இசைதான். பாடல்களும் பின்னணி இசையும் மனதை என்னவோ செய்கின்றன. இன்னொரு முக்கிய பாத்திரம் ஒளிப்பதிவு.
இப்படி படம் ஆரம்பித்து
- அரவிந்த் சாமி காதலைச் சொல்ல முடியாமல் அல்லாட,
- அவரது தந்தை பழைய முதலாளி மகளை மகன் மணந்து கொண்டால் இரண்டு தொழிற்சாலைகளையும் இணைத்து விடலாம் என்று கணக்குப் போட,
- பிரியாவின் தந்தை தனது பரம்பரை மேட்டிமைத்தனத்தை முன்னாள் மேலாளரின் முகத்தில் எறிய,
- பிரியா கடவுளின் சேவையில் தன்னை அர்ப்பணித்து விடுவதாக சொல்ல,
- தலைமைத் தாய் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்து விட்டு இறுதி முடிவு எடுக்கும்படி அனுப்புகிறார்.
வாடிக்கையாளரின் - அதுவும் காவல் துறை தலைமை அதிகாரியின் மனைவியின் - தலை முடியை தவறுதலாக வெட்டிப் போட்டு விட்ட சக பணியாள தோழிக்கு உதவியாக அந்த வாடிக்கையாளரின் முகம் இளமையாகும்படி தலை முடியை சீர் படுத்தி அவரை மகிழ்ச்சியின் உச்சத்தில் அனுப்பி வைக்கிறார் பிரபுதேவா. படத்திலும் பெயர் தேவாதான். அவரது நண்பர் பட்டாளமாக கண் தெரியாத நாசர் இசையமைப்பாளர் ஆகும் கனவுகளில், இன்னும் நான்கு இளைஞர், பையன்கள் பட்டாளம்.
கைப்பிடிக்கப் போகும் கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு கல்யாண வீட்டிலிருந்து ஓடிப் போய் உயரமான கட்டிடத்தில் தற்கொலை செய்ய ஏறி நிற்கும் அதே அழகு நிலையத் தோழியை மெதுவாக பேசிப் பேசி அவள் மனதைத் திருப்பி இறங்க வைக்கிறார். 'பெண்கள் மனதைத் தெரிஞ்சவன்' என்று சான்றிதழ் கொடுக்கப்படுவதைக் கேட்டு அரவிந்த் சாமி காஜோலின் மனதைத் திருப்ப இவரை உதவிக்கு அழைக்கிறார். நட்புக்காக செய்றேன் பாஸ் என்று களத்தில் இறங்குகிறார் பிரபு தேவா.
பாட்டுப்பாடி காஜோலை வர்ணித்து ஆடும் போது 'அவரது மூக்கு கொஞ்சம் பெரிதாக இருக்கிறது' என்று சொல்லி விடுகிறார் தேவா. அது மனதைத் தைத்து விட, அவருடன் பாட்டாலேயே சண்டை போட ஆரம்பிக்கும் போது காஜோலின் மனதின் கதவு திறக்க ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அரவிந்த் சாமிக்காக தேவா முயற்சிகள் செய்து கொண்டிருக்க காஜோல் மெல்ல மெல்ல தேவாவை நேசிக்க ஆரம்பிக்கிறார்.
அரவிந்த் சாமியின் தயாள குணத்தைக் காட்ட நள்ளிரவில் அவர் உடை தானம் செய்யும் இடத்துக்கு காஜோலை வரச் சொன்ன தேவா வெண்ணிலவே வெண்ணிலவே என்று பாட ஆரம்பிக்க காஜோலின் காதல் வெளிப்படுகிறது. அதை உணர்ந்து திகைக்கும் தேவாவுக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இருந்தும், தனக்கும் அவளுக்கும் பொருத்தமில்லை என்பதை உணர்ந்து அரவிந்த் சாமி பக்கமாக அவள் மனதைத் திருப்புவதுதான் தனது கடமை என்று முடிவு செய்கிறார். ஆனால் காஜோலைப் பார்க்கும் போது காதலின் தாக்கம் எதுவும் செய்ய முடியாமல் போகிறது.
இறுதியில் கொஞ்சம் நாடகத்தனமான இறுதிக் காட்சிகளுக்குப் பிறகு தேவாவும் பிரியாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள், அரவிந்த் சாமி மதபோதகர் ஆகி விடுகிறார்.
பாடல்களும், காட்சிகளும், நடிகர்களும் மனதைக் கட்டிப் போட்டு விட்ட திரைப்படம்.
0 comments:
Post a Comment