Tuesday, March 16, 2010

The Fountainhead - 3

நான் முதன் முதலில் The Fountainhead பற்றி கேள்விப் பட்டது கல்லூரியில் படிக்கும் போது. ஏதேதோ பேசிக் கொணடிருக்கும் போது, எனக்கு எந்த மாதிரி புத்தகங்கள் பிடிக்கும், அவர்கள் படிக்கும் புத்தகங்கள் பற்றிய என்னுடைய கருத்து என்றெல்லாம் கேட்டு விட்டு, திடீரென்று,

'இவனுக்கு ரோர்க்தான் பிடிக்கும். Fountainhead மாதிரியான நாவல்கள்தான் இவனுக்கு சரிப்படும்' என்று கொஞ்சம் இளக்காரமும் எள்ளலும் கலந்த தொனியில் சொன்னார் ஒருவர். அப்போது சென்னை அமெரிக்க நூலகத்தில் உறுப்பினராக இருந்தேன். அங்குதான் Fountaihead எடுத்து முதலில் படித்தது.

நாவலின் பெரும்பகுதி புரியவேயில்லை. பீட்டர் கீட்டிங் வரும் பகுதிகளுடன் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ரோர்க் என்று ஒருவன் கதையில் உலாவுவதே ஏதோ கிளைப்பாத்திரமாகத்தான் தெரிந்தது.

என் வாழ்க்கையிலும், ஏன் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இரண்டு இழைகள் இருக்கின்றன. Fountainheadன் வெற்றிக்குக் காரணம், இந்த இரண்டு இழைகளின் இரு துருவங்களின் வடிவமாக ரோர்க்கையும் பீட்டர் கீட்டிங்கையும் காண்பித்து அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று காட்டியதுதான். நமது இரண்டு இழைகளுடன் அவர்களை அழகாக பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

அந்தக் கதையில் எல்லா பாத்திரங்களுமே ஒரு துருவத்தில்தான் நின்று கொண்டிருக்கின்றன.

  • எல்ஸ்வர்த் டூஹி போன்று எல்லாம் புரிந்து எல்லாம் தெரிந்து சக மனிதர்களின் பலவீனங்களை வளர்ப்பதன் மூலம் தனது அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் அரசியல்வாதி
  • கேல் வைனான்ட் போன்று எல்லாம் புரிந்து, எல்லாம் தெரிந்து ஆனால் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தி சக மனிதர்களின் பலவீனங்களுக்கு இரை போட்டு பணம் சம்பாதித்துக் கொள்ளும் வியாபாரி
  • டொமினிக் ஃபிராங்கன் போன்று எல்லாம் தெரிந்து எல்லாம் புரிந்து ஆனால் எல்லாவற்றையும் வெறுத்து சகமனிதர்களின் பலவீனங்களை மூர்க்கமாக வெளிப்படுத்தும் பெண்.

  • பீட்டர் கீட்டிங் போன்று சக மனிதர்களை நம்பி, அவர்களின் கருத்துக்களுக்காகவே தனது வாழ்க்கையை செலுத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை ஒழித்த அப்பாவி
  • ஹோவார்ட் ரோர்க் போன்று சக மனிதர்களை முற்றிலும் பொருட்படுத்தாமல் தனது கோட்பாடுகளுக்காகவே வாழ்க்கையே செலுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த ஆதர்ச மனிதன்

  • ஆல்வா ஸ்காரட்
  • கீட்டிங் அம்மா
  • கய் பிராங்கன் இவர்கள் சராசரி மனிதர்களின் உருவகங்கள்.
முதல் வகை எல்லாம் தெரிந்தவர்களால் ஆட்டிப் படைக்கப்படுபவர்கள், இரண்டாவது வகை அப்பாவிகளை தமக்கு ஏற்றது போல பயன்படுத்திக் கொள்பவர்கள். மூன்றாவதாக சொன்ன ஆதர்ச மனிதனால் புறக்கணிக்கப்படுபவர்கள்.

நமக்கு இருக்கும் தேர்வு - பீட்டர் கீட்டிங் போல இருப்பதா அல்லது ஹோவார்டு ரோர்க் போல இருப்பதா என்பதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு முடிவிலும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது, 'நாம் நம்பும், நாம் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளுக்காக வாழ்வதா, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், அடுத்தவர்கள் எப்படி நம்மைப் பார்ப்பார்கள் என்ற கேள்விக்குப் பதிலாக வாழ்வதா'

இரண்டாவது தேர்வு கவர்ச்சியாகப் படுகிறது. சமூக விலங்காக வாழும் மனிதர்களாகிய நமக்கு சக மனிதர்களின் பாராட்டும் அங்கீகாரமும் இலட்சியமாக இருக்கின்றன. ஆனால், அதற்காக வாழ ஆரம்பிக்கும் போது ஒருவரது உண்மையான திறமைகள், எங்கு அவர் உருப்படியாக பங்களிக்க முடியும் என்பவை தொலைந்து போய் மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மட்டும் மீந்து விடுகிறார்.

பீட்டர் கீட்டிங்கின் நுண்கலை திறமைகள் அவனது அம்மாவின் ஆட்டிப்படைப்பில் புறக்கணிக்கப்பட்டு அவனுக்கு விருப்பமேயில்லாத கட்டிடக் கலையில் வாழ்க்கையை செலுத்துகிறான். அடுத்தவர்களின் பணிகளை உறிந்து, அடுத்தவர்களின் கருத்துக்களை உருவாக்கி தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறான். ஏற்றி விடும் சமூக கருத்துப் போக்கு எதிர் திசையில் இறக்கி விடுவதற்கு அதிக நேரம் ஆவதில்லை. பொதுமக்களில் கருத்து திரும்பி தனது புகழ் மங்கும் போது தனது தனிமையை, தன்னைத் தானே எதிர் கொள்ள முடியாமல் மகிழ்ச்சி இழக்கிறான். புகழ் அலையில் மிதக்கும் போது கூட, தனித்திருக்கும் நேரங்களில் தன்னைப் பற்றிய உண்மைகளை எதிர் கொள்ள முடிவதில்லை. அப்படித் தனித்திருக்கும் நேரங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறோம்.

ஹோவார்ட் ரோர்க் பிறந்ததே கட்டிடக் கலைக்குத்தான். அவனது வாழ்க்கையில் வேறு எதையும் அவனால் சிந்திக்கத் தெரியாது. கட்டிக் கலைஞனாக செயல்பட முடியா விட்டால் என்ன செய்வான் என்ற ரோர்க் பற்றிய கேள்விக்கு 'அடுத்தவர்களின் பிணங்களின் மீது நடந்தாவது கட்டிடக் கலைஞனாக வாழ்வான் ரோர்க்' என்று பீட்டர் கீட்டிங் ஒரு கட்டத்தில் சொல்கிறான்.

கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படலாம், வேலைக்குச் சேர்ந்தால் நல்ல சம்பளம் கிடைக்காமல் இருக்கலாம், அவனது படைப்புகளை யாருமே பாராட்டாமல் இருக்கலாம், கட்டிடம் கட்ட வாய்ப்புகள் கிடைக்காமல் கல்லுடைக்கும் கூலித் தொழிலாளியாகக் கூட வேலை பார்க்கலாம், உலகமே எதிர்த்து நின்று அவனை இகழலாம். எதுவுமே ஒரு குறிப்பிட்ட புள்ளி வரைதான் அவனை பாதிக்கும். அதற்கு மேல் எதுவுமே தொட்டு விட முடியாது. அந்த சுயத்துக்கு அவன் மட்டுமே அதிகாரி. அவனது இருப்பு, அவனது படைப்புத் திறமை இந்த இரண்டும்தான் அங்கு செல்லுபடியாகும். யார் என்ன நினைக்கிறார்கள், மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கும் அந்த சுயத்துக்கும் எந்த சார்பும் இல்லை.

அந்த சுயத்துக்காக வாழும் ரோர்க், அதே போன்று உறுதியான சுயம் கொண்ட சக மனிதர்களுடன் கூட்டு சேர முடியும். இரண்டு தரப்புமே தமது சுயத்துக்காக உன்னத நிலையை அடைந்து அந்த உயரத்திலிருந்து அதே உயரத்திலிருக்கும் சக மனிதர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இங்கு ஒருவருக்கொருவர் முதுகு சொறிதலோ, பெரிய பெரிய முழக்கங்களோ இருக்காது.

'நீ சிறந்த கட்டிட வடிவமைப்பாளன், நான் சிறந்த எழுத்தாளன். என்னுடைய வீட்டுக்கு நீ வடிவம் கொடு. நான் சம்பாதித்த பணத்தை உனக்கு நான் தருகிறேன்'
'நீ சிறந்த சிற்பி. நான் சிறந்த கட்டிட வடிவமைப்பாளன். என்னுடைய கட்டிடத்துக்கு நீ சிலை வடித்துக் கொடு, நான் சம்பாதித்த பணத்தை உனக்கு நான் தருகிறேன்'

'நான் சிறந்த வியாபாரி, என்னுடைய விற்பனைக்கு நீ பொருள் உற்பத்தி செய்து கொடு. நான் சம்பாதிக்கும் பணத்தை உனக்கு நான் தருகிறேன்.'

இப்படி இயங்கும் மனிதர்கள்தான் இந்த உலகத்தின் உந்து சக்திகள். ஹோவார்டு ரோர்க், ஆஸ்டன் ஹெல்லர், ரோஜர் என்ரைட், கென்ட் லான்சிங், ஸ்டீவன் மல்லோரி, மைக் ஓ டொன்னல் இவர்களெல்லாம் இந்த ஆதர்சத்தின் வடிவங்கள்.

எல்ஸ்வொர்த் டூஹி அந்த ஆதர்சங்களை அழித்து எல்லோரையும், சக மனிதர்களை சார்ந்து கூட்டத்துக்கு கோவிந்தா போடும் இரண்டாம் தர மனிதர்களாக மாற்ற முயற்சிக்கிறார், அப்போதுதான் அவர்கள் அவரது ஆளுமையை ஏற்றுக் கொள்வார்கள்.

டொமினிக் பிராங்கன், இந்த ஆதர்சங்களை மதிக்காத உலகை வெறுத்து இரண்டாம் தர மனிதர்களைப் பற்றிய உண்மைகளை அவர்கள் முன்பே போட்டு உடைத்து நிறைவு காண்கிறாள்.

கேல் வைனான்ட். இந்த ஆதர்சங்களை உடைத்து, இரண்டாம் தர மனிதர்களின் மனப்பசிகளுக்கு இரை போட்டு பணம் சம்பாதித்துக் கொள்கிறார்.

மனித வாழ்க்கை என்பது சுயத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். சுயத்தைப் புறக்கணித்து அடுத்தவர்களுக்காக வாழும் வாழ முயற்சிக்கும் யாருமே உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியாது. அடுத்தவர் புகழும் போது மலரும் மனம், அடுத்த நிமிடமே அவர்கள் இகழ ஆரம்பித்தால் சுருங்கி விடும். தன்னைத் தானே எதிர் கொள்ள முடியாமல், ஓடிக் கொண்டே இருந்து விட்டு ஒரு கட்டத்தில் அடுத்தவர்களின் அபிமானங்களை தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் தனிமையை சந்திக்க நேரும் போது அவலமான மகிழ்ச்சியற்ற இருப்புக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.

சுயத்தை மட்டுமே உந்துசக்தியாகக் கொண்டு வாழ்பவர்களின் மனநிறைவும் மகிழ்ச்சியும் சார்பற்றவை. உயிரோடு இருப்பது வரை, உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களால் மகிழ்ச்சியாக நிறைவாக இருக்க முடியும்.

ஆதர்ச மனிதர்கள் சமூக விரோதிகளா? சக மனிதர்கள் அவர்களுக்குத் தேவையே இல்லையா என்ன?

சுயத்தை மையமாகக் கொண்டு வாழ்வது மனிதனின் இயற்கை. அந்த இயற்கையை விட்டு விலகாதவர்கள்தான் உலகத்தை செலுத்துகிறார்கள். அடுத்தவர் கருத்துக்களுக்கு அடிமையாக வாழும் பெரும்பான்மையினருக்கு மத்தியில் குறிப்பிடக் கூடிய அளவில் ஒரு சிறுபகுதியினர் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. அந்த சிறுபகுதியினர் ஒருவரை ஒருவர் நாடி தத்தமது திறமைகளின் வெளிப்பாடுகளை பரிமாறிக் கொள்வது மனித இயற்கையின் இன்னொரு கூறு.

இந்தக் கோட்பாடுகளின் வெளிப்பாடு The Fountainhead. இந்த சிறுபகுதியினரின் உழைப்பில், முன்முனைப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில் அவர்களின் உழைப்பை உறிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நன்றியுணர்வு கூட இருக்காது. எல்லோருமே சுயம் சார்ந்து தத்தமது ஆக்க சக்தியை வெளிப்படுத்தி வாழும் சமூகம் எப்படி இருக்கும்? ஒட்டுண்ணிகளுக்கு இரத்தம் கொடுத்து கொடுத்து களைத்துப் போகாமல் சமூகம் முழுவதும் சுயநிறைவு பெற்ற மனிதர்களாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்?

அப்படி உலகைத் தாங்கும் உழைப்பாளிகள் எல்லோரையும் ஒரு பள்ளத்தாக்குக்கு வர வைத்து தனி உலகம் படைக்கிறான் John Galt. அயன் ராண்டின் Atlas Shrugged நாவலில், அவரது ஆதர்ச மனிதர்கள் எல்லோரையும் ஒவ்வொருவராக சந்தித்து அவர்களது உழைப்பையும் படைப்பையும் எடுத்துக் கொண்டு பதிலுக்கு எதுவுமே கொடுக்காத உலகை துறந்து புதிய உலகத்துக்கு வரவேற்கிறார்கள் அவர்களுக்கு முன்பு அந்த பள்ளத்தாக்குக்கு போனவர்கள். ஒன்றன் பின் ஒன்றாக உலகைச் செலுத்தும் இயந்திரங்கள் இயக்கத்தை நிறுத்தி விட, பெரும்பான்மை ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை தூக்கிப் பிடிக்க ஆளில்லாமல் சிதற ஆரம்பிக்கிறது.

பீட்டர் கீட்டிங் தருணங்கள், ஹோவார்டு ரோர்க் தருணங்கள் இரண்டுமே நமக்கு நிகழ்கின்றன. அதில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நமது மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தீர்மானிக்கின்றது.

0 comments: