ஹோவார்டு ரோர்க் - அயன் ராண்டின் பிரபலமான படைப்பு. தான், தனது வேலை தனது படைப்புகள். தான் வகுத்த விதிகளின் கீழ் மட்டும்தான் வாழ்வான், அயன் ராண்டின் ஆதர்ச மனிதன்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற கட்டிடக் கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அவனுக்கு குடும்பம், சொந்த பந்தம் என்று யாரும் கிடையாது. நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. யாரிடமும் எப்போதும் பேசுவது அரிது. அவன் எண்ணமெல்லாம் மனமெல்லாம் கட்டிடங்கள்தான். எப்படி புதிய புதிய கட்டிடங்களை வடிவமைக்கலாம், குறிப்பிட்ட இடத்தில் என்ன மாதிரியான கட்டிடம் கட்டலாம், குறிப்பிட்ட பொருளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று மட்டும்தான் அவனால் யோசிக்க முடியும்.
கட்டிங்களை வடிவமைப்பதற்கே பிறந்தவன் அவன். அதற்குத் தேவையான அறிவைப் பெற கட்டிடக் கலை கல்லூரியில் சேர்ந்து கொண்டான். முதல் ஆண்டுகளில் நுட்பங்களை கற்றுக் கொள்வதில் வித்தகனாக இருக்கிறான். கணக்கு, அறிவியல், கட்டிட பொறியியல் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுகிறான். இந்தத் துறை பேராசிரியர்களின் மதிப்பையும் கவனத்தையும் ஈர்க்கிறான். ஆனால், தனது கட்டிடங்களை வடிவமைப்பதில் வேறு யாருடைய கருத்துக்களையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ரோமன் கட்டிடக் கலை, மறுமலர்ச்சிக் கால கட்டிடப் பாணி என்று எதிலிருந்தும் தான் கற்றுக் கொள்ள எதுவுமில்லை. கட்டிடம் கட்டப் போகும் இடம், அப்போது கிடைக்கும் பொருட்களின் தன்மை இவைதான் கட்டிடத்தின் அமைப்பைத் தீர்மானிக்கின்றன.
வாடிக்கையாளர்கள் கூட பிற்சேர்க்கைதான். ரோர்க் கட்டிடம் வடிவமைப்பதற்கான ஒரு வழி வாடிக்கையாளர்கள். ரோர்க்கை பொறுத்தவரை மிகப் பொருத்தமான கட்டிடம் ஒன்றை வடிவமைத்துத் தருவதுதான் ஒரே நோக்கம். அதனால் வாடிக்கையாளருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும், என்ன ஆதாயம் கிடைக்கும் என்று ரோர்க் யோசிக்கப் போவதில்லை. இப்படி மிகப் பொருத்தமான கட்டிட வடிவமைப்பை நாடும் வாடிக்கையாளர்கள் ரோர்க்கை தேடி வருவார்கள். தமது கட்டிடம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு. மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று பொருட்படுத்தாதவர்கள் மட்டும்தான் ரோர்க்கின் வாடிக்கையாளர்களாக இருக்க முடியும்.
முற்றிலும் தான் சார்ந்த தனிமனிதக் கோட்பாடு.
படிக்கும் போது ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். தனது செலவுகளுக்கு கோடை விடுமுறைகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுக் கொள்கிறான். சின்ன வயதிலேயே அப்பா அம்மா இறந்து போயிருக்கிறார்கள். ஒவ்வொரு அடியும் தனது முயற்சியால் எடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறான். அவன் தங்கியிருக்கும் வீடு கீட்டிங் குடும்பத்தினது. பீட்டர் கீட்டிங், அவனது அம்மா. இள வயதிலேயே கணவனை இழந்த அந்த அம்மா, தனது மகனுக்காகவே வாழ்ந்து அவனை கட்டிடக் கலை படிக்கும் வரை கொண்டு வந்திருக்கிறாள். பீட்டர் இறுதியாண்டு மாணவன்.
ரோர்க் கல்லூரியை விட்டு வெளியேற்றப் பட்ட நாளில், பீட்டர் பட்டப் படிப்பு முடித்து பட்டமளிக்கும் விழா. நியூயார்க்கின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தின் பார்ட்னர் கய் பிராங்கன் வருகை தந்து பட்டம் அளிக்கிறார். பீட்டர்தான் அந்த ஆண்டின் முதல் மாணவன். அதற்கான பரிசு அவனுக்குக் கிடைக்கிறது. அவன் முந்திச் சென்ற இரண்டாவது இடத்து மாணவனைப் பார்த்து பீட்டருக்கு மனம் நிறைகிறது. அவனை தோற்கடித்து விட்டோம் என்ற பெருமிதம்.
ஆண்டு தோறும் தலை மாணவனாக தேர்ச்சி பெறுபவருக்கு தனது நிறுவனத்தில் வேலை அளிப்பதாக பிராங்கன் அறிவிக்கிறார். பீட்டருக்கு அந்த வாய்ப்பு வருகிறது, அந்த ஆண்டில். அவனுக்கு பாரிஸ் போய் நுண்கலைகளில் பயிற்சி பெற ஆர்வம். ஆனால், பிராங்கனின் நிறுவன வாய்ப்பை விட்டுக் கொடுக்கவும் மனதில்லை.
கல்லூரி முதல்வர் ரோர்க்கை அழைத்து தனது வருத்தத்தையும், ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். இங்கு தான் படிக்க வேண்டியது எல்லாம் படித்தாகி விட்டது. இன்னும் ஒரு ஆண்டு இங்கிருந்து பழைய கட்டிடங்களை, அவற்றின் வடிவமைப்புகள் நகல் செய்து கொண்டிருப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை. அவனாகவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியை விட்டு விலகியிருக்க வேண்டும். அவர்கள் வெளியேற்றும் வரை காத்திருந்ததுதான் தவறு. திரும்பவும் கல்லூரியில் சேரும் எண்ணமே அவனுக்கு இல்லை.
முதல்வருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. பழங்கால கட்டிடக் கலை அமைப்புகளை பற்றிய துறையில் அவற்றைப் பின்பற்றி வடிவமைப்புகளை உருவாக்க மறுத்ததால்தான் ரோர்க்கை வெளியேற்றும்படி நேர்ந்தது. அந்தத் துறை பேராசிரியர்களால் இவனைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அன்று மாலை தான் தங்கியிருக்கும் பீட்டரின் வீட்டு முகப்பில் நின்று கொண்டிருக்கிறான் ரோர்க். பீட்டர் தனது பட்டமளிப்பு விழாவிலிருந்து திரும்புகிறான். வீட்டுக்குள் போய் அம்மாவிடம் பேசும் முன் ரோர்க்கிடம் ஒரு ஆலோசனை கேட்க வேண்டும் பீட்டருக்கு.
பாரிசுக்குப் போய் நுண்கலைகள் பயிற்சி பெறலாமா? அதற்கான உதவித் தொகையும் பீட்டருக்குக் கிடைத்திருக்கிறது, அல்லது பிராங்கனின் நிறுவன வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிலில் நேரடியாக இறங்கி விடலாமா?
மூன்று ஆண்டுகள் சேர்ந்திருந்த நெருக்கத்தில் ரோர்க் மற்ற யாரையும் விட பீட்டருடன் அதிகமாக பேசுகிறான். கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டிடக் கலை தொடர்பான படிப்பில் பீட்டருக்கு பல உதவிகளை செய்திருக்கிறான். இப்போது, இந்த கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறான். பாரிசுக்குப் போனால் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம். பிராங்கனின் அலுவலகத்தில் சேர்ந்தால் அத்தோடு பீட்டர் அதோ கதிதான் என்பது ரோர்க்கின் கருத்து. அதைப் பற்றி பேச ஓரிரு நிமிடங்கள் கூட ஆகும் முன்பு உள்ளிருந்து பீட்டரின் அம்மா வெளியில் வருகிறாள்.
தன் மகன் என்னவாக ஆக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று உறுதியான திட்டங்கள் வைத்திருப்பவர் அந்த அம்மா. பீட்டர் அமெரிக்காவின் தலை சிறந்த கட்டிட கலைஞரான திகழ்வான் என்று ரோர்க்கிடம் பிற்பகலில் திட்டவட்டமாக கூறியிருந்தாள். மகனுக்கு வேறு ஆசைகள், விருப்பங்கள் இருப்பதை எல்லாம் தட்டி நிமிர்த்தி தனது விருப்பப்படி அவனை நடக்க வைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது.
தன்னிச்சையாக விட்டிருந்தால் பாரிசுக்குப் போயிருக்கக் கூடிய பீட்டரை பிராங்கனின் நிறுவனத்தில் சேரும்படி முடிவெடுக்க வைக்கிறாள்.
'நான் சொல்வதை எல்லாம் நீ ஏன் கேட்கப் போகிறாய். நான் ஒரு கிழட்டு அம்மாதானே. உனக்காக எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்து கல்லூரிக்கு அனுப்பி இந்த நிலைக்குக் கொண்டு வந்தாலும், நான் எதுவும் உனது வாழ்க்கையில் தலையிடவா முடியும்! என்ன இந்த வயசில் என்னை விட்டுப் பிரிந்து பிரான்சு போவாய். உனது இடத்தில் இரண்டாவதாக வந்த மாணவன் பிராங்கனின் நிறுவனத்தில் சேருவான். எல்லோரும் பீட்டரைப் பற்றி மறந்து விடுவார்கள். உங்கள் வகுப்பில் இரண்டாம் இடத்து மாணவன் பேர்தான் தலையெடுக்கும்'
இப்படி சில நிமிட தேர்ந்த கையாளலில் மகனை முடிவெடுக்க வைத்து விடுகிறாள்.
பீட்டர் நியூயார்க்குக்கு வந்து பிராங்கனின் நிறுவனத்தில் சேரும் அதே நேரத்தில் ரோர்க்கும் நியூயார்க் வந்து காமரூன் என்ற கட்டிடக் கலை வல்லுனரிடம் வேலைக்குச் சேருகிறான். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த காமரூனை இப்போது யாரும் சீண்டுவதே இல்லை. நியூயார்க்கின் வான் முட்டும் கட்டிடங்களுக்கான முன்னோடி இந்த காமரூன். பிராங்கன் கூட ஒரு காலத்தில் இவரிடம் வரைவாளராக வேலை பார்த்தவர்தான். அடுத்தவர்களை எப்படி கையாளுவது என்று தெரிந்திராத காமரூன் சில ஆண்டுகள் உச்சத்தில் இருந்து விட்டு துறையின் ஒரு விளிம்பில நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.
அவரது அலுவலகத்தில் ரோர்க் வந்து வரைவாளராக வேலை கேட்கிறான். 'இங்கு வேலை ஏதும் இல்லை, வேறு யாரும் உன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்று என்னிடம் வந்தாயா' என்று திட்டி விட்டு, ரோர்க்கின் வரைபடங்களை பார்த்ததும் அவனை சேர்த்துக் கொள்கிறார். இவ்வளவு நல்ல எண்ணங்களை ஏன் இப்படி கெடுத்து வைத்திருக்கிறாய் என்று செல்லமாக திட்டுகிறார். அவற்றை மேம்படுத்தத்தான் காமரூனிடம் கற்றுக் கொள்ள வந்திருப்பதாக ரோர்க் சொல்கிறான்.
காமரூனுக்கு எதுவும் வேலைகள் அதிகமாக இல்லை. ஏதாவது மூன்றாம்தர, நான்காம் தர கட்டிட வேலைகள் வருகின்றன. பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் இவர் பக்கம் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டிருக்கின்றன. அப்படியே ஓய்வு பெற்று கடைசி நாட்களை தள்ளும் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்.
பிராங்கன் /ஹேயர் நிறுவனம் நியூயார்க்கின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. பெரிய அலுவலகம், பல வரைவாளர்கள், பெரிய பெரிய கட்டிடப் பணிகள், செல்வத்தில் புரளுகிறார்கள். அங்கு இளநிலை வரைவாளனாக சேருகிறான் பீட்டர். பிராங்கன் வாடிக்கையாளர் பிடிப்பதில் மட்டும் ஈடுபடுகிறார். கட்டிடம் வடிவமைப்பது எல்லாம் மற்றவர் கையில் விட்டு விடுகிறார். இந்தச் சூழலில் உள்ளே வரும் பீட்டர், தனக்கு போட்டியாளராக, தனக்கு மேலே இருப்பவர்களை ஒவ்வொருவராக இடறி விட்டு பிராங்கனின் அபிமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு வளருகிறான்.
ஆரம்பத்தில் ஒரு மூத்த வரைவாளனை அவனது பணிகளை தான் செய்வதாக எடுத்துக் கொள்கிறான். அவனை வேலையில் கவனம் செலுத்தாமல் இருக்க ஊக்குவிக்கிறான். பீட்டரை போல நல்ல நண்பன் உண்டா! வேலை செய்யாமல் இருப்பவனுக்கு சம்பளம் எதற்கு என்று அடுத்த சில மாதங்களில் அவனை நீக்கி விடுகிறார் பிராங்கன். பீட்டர் அந்த இடத்துக்கு வந்து விடுகிறான்.
அடுத்ததாக நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர். பிராங்கனிடம் நிறைய உறவாடும் பீட்டர், வாடிக்கையாளரை சந்திப்பது, நிறுவனத்துக்கு புதிய திட்டங்களைக் கொண்டு வருவதிலும் பங்கெடுக்கிறான். வீடு ஒன்று கட்ட விரும்பிய ஒரு பணக்கார பெண்மணியிடம் பேசும் போது தலைமை வடிவமைப்பாளரை புகழ்ந்து சொல்கிறான். அவர்தான் பிராங்கன் நிறுவனத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். ஆனால் பேரும் பணமும் பிராங்கனுக்குப் போகிறது. அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரது உண்மையான திறமை வெளியில் தெரிய வரும் என்று விருப்பமில்லாமல் பேசுவது போல சொல்கிறான்.
அந்தப் பெண்மணி வேலையை தலைமை வடிவமைப்பாளருக்கு நேரடியாக கொடுக்கிறார். அவர் தனி நிறுவனம் ஆரம்பித்து போகிறார். 'நான் நினைத்ததை விட மோசமான பொறுக்கி நீ' என்று பீட்டரிடம் சொல்லி விட்டுப் போகிறார் அவர். பீட்டருக்கு அதெல்லாம் பொருட்டே இல்லை. நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளராக பதவி உயர்வு பெறுகிறான். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறுவனத்தின் ஒரு பங்காளராக சேர்ந்து விடலாம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நிறுவனத்தின் இன்னொரு பங்காளர் ஹேயர் பெயரளவில் மட்டும்தான். அடுத்த இலக்கு அவர்தான்.
கட்டிட வடிவமைப்பில் தனது உருவாக்கத்தில் நம்பிக்கை இல்லாத பீட்டர் ரோர்க்கிடம் போய் அவனது கருத்துக்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்கிறான்.
ரோர்க் காமரூனின் அலுவலகத்தில் அவருடன் வேலை செய்கிறான். இரண்டு பேருக்கும் இடையில் ஆழ்ந்த நட்பு உருவாகிறது. ஆனால், புதிய வேலைகள் எதுவும் வருவதில்லை. கடைசியாக முயற்சித்த ஒரு வங்கி கட்டிடப் பணிக்கு வரைபடங்களை உருவாக்க இரவு பகலாக வேலை செய்து சமர்ப்பிக்கிறார்கள். அதுவும் தரப்படாமல் போகிறது. காமரூன் தளர்ந்து போகிறார். மாரடைப்பு வந்து தொழிலிலிருந்து ஓய்வு பெற நேர்கிறது.
அந்த ஆண்டுகளில் ரோர்க் காமரூனின் பயிற்சியின் கீழ் கட்டிட வடிவமைப்பைப் பற்றி தேர்கிறான். 'நான் வேண்டுமானால் சிபாரிசு கடிதம் தருகிறேன். என்னை கண்டு கொள்ளாமல் இருந்தாலும், அந்த நாய்கள் நான் எழுதினால் உன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள்' ரோர்க் அதை மறுத்து விட்டு தானே ஏதாவது தேடிக் கொள்வதாக சொல்கிறான்.
காமரூன் ஓய்வு பெற்றதைப் பற்றி அறிந்து, ரோர்க்கை பார்க்க வருகிறான் கீட்டிங். பிராங்கனின் நிறுவனத்தில் ரோர்க்கை சேரச் சொல்கிறான். ரோர்க்கும் ஒத்துக் கொள்கிறான். ஏதாவது ஒரு இடத்தில் வேலை பார்க்க வேண்டும். எதுவும் பொருட்டில்லை என்று சொல்கிறான். தனது சாதனைகளை காண்பித்து ரோர்க்கை அடிபணியச் செய்யலாம் என்று வந்த பீட்டருக்கு இப்போதும் தான் நினைத்த மன நிறைவு கிடைக்கவில்லை. கட்டிட வடிவமைப்பு எதையும் செய்ய மாட்டேன். கட்டிடம் கட்டும் இடங்களுக்குப் போவது, அலுவலகத்தில் வரை படங்கள் வரைவது போன்ற பணிகள் மட்டும்தான் செய்வேன் என்ற நிபந்தனையுடன் ரோர்க் பிராங்கனின் நிறுவனத்தில் பீட்டருக்குக் கீழ் வேலையில் சேர்கிறான்.
4 comments:
திடுதிப்பென்று முடித்து விட்டீர்களோ...
மீதியை வெண்திரையில் காண்க என்பது போல... முடிவு குழப்படியா இருக்கு.. ஏதேனும் சில பத்திகள் சரியா வெளியாகமல் போயிடுச்சா..?
நீங்களும் அயன் ராண்ட் ரசிகரா? இந்த புத்தகத்தை நான் இரண்டு முறை படித்துவிட்டேன், இப்போது "atlas shrugged" படித்து வருகிறேன். அடுத்த பார்ட் எப்போ??
இதைப்பற்றி நான் எழுதிய ஆங்கில விமர்சனம் எனது பதிவில் இங்கே உள்ளது
http://dhans4all.blogspot.com/2008/05/fountain-head.html
சிவா,
மொத்தப் புத்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைச் சொல்லியிருக்கிறேன்.
அடுத்த பகுதிகள் அடுத்தடுத்த நாட்களில் தொடரும் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
தன்ஸ்,
இப்படித்தான் வாழ வேண்டும் என்று உரமேற்றிக் கொள்ளத் தேவைப்படும் போதெல்லாம் Fountainhead தான் எனக்கு ஊற்றுக்கண்.
Post a Comment