Saturday, March 13, 2010

The Fountain Head - 2

டொமினிக் பிராங்கன் இந்த உலகில் வாழும் மனிதர்களை தீவிரமாக வெறுக்கிறாள். உயர் தரமான ஆற்றலை புறக்கணித்து, உண்மையான உருவாக்கத்தை போற்றத் தெரியாமல் ஒருவொருக்கொருவர் முதுகு சொறிந்து கொண்டு தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மாடி அழியும் மனிதக் கூட்டத்தின் மீது கோபம். தினசரி வாழ்க்கையில் அலட்சியமும் அவளை அணுகுபவர்களை நோகடித்து துரத்தி விடும் சுட்டு விடும் உண்மைகள் பேசும் கடுஞ்சொற்களுமாக தன்னைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் அமைத்துக்க கொண்டிருக்கிறாள்.

பெரிய நெருப்பு மழை பொழிந்து இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதர்களும் ஒரு மணி நேரத்தில் அழிந்து போய் விட்டால்தான் அவளது மனம் நிம்மதி அடையும்.

பிராங்கன் தனது மகளுடன் உறவே இல்லாமல் இருக்கிறார். அவள் குழந்தையாக இருக்கும் போதே அவரும் அவள் தாயும் பிரிந்து விட்டிருந்தார்கள். அதன் பிறகு மகளுடன் எந்த ஒட்டுதலும் இல்லாமல் போய் விடுகிறது. படிப்பதற்காக போய்ச் சேரும் கல்வி விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இடம் மாற்றி மாற்றி அவள் வளர்ந்திருந்தாள். தற்போது நியூயார்க் பேனர் என்ற தினசரி பத்திரிகையில் இல்ல அலங்கரிப்புகளைப் பற்றி எழுதும் பத்தி எழுத்தாளராக வேலை செய்கிறாள் டொமினிக்.

அவள் அம்மா வழியாகவும் பெருவாரியான சொத்துக்கள் அவளை சேர்ந்திருந்தன. அப்பாவிடமும் குவிந்திருக்கும் பணத்துக்கு அவள் வாழ்நாள் முழுவதும் சுட்டு விரலைக் கூட உயர்த்தாமல் வாழலாம். அவளுடன் நட்பு கொள்ள பலர் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்குத்தான் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு.

நிறுவனத்தின் பங்குதாரராக வேண்டுமானால் பிராங்கனின் மகளிடம் நட்பு கொண்டு அவளையே மனைவியாகவும் ஆக்கிக் கொள்வது உதவியாக இருக்கும் என்று பீட்டரின் அம்மா அறிவுரை சொல்கிறார். எல்லாவற்றையும் வெற்றி கொள்ள வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் பீட்டருக்கும் அவளை சந்தித்து நட்பு கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. பிராங்கன் ஏதேதோ சொல்லி மழுப்பி அவனை மகளுக்கு அறிமுகம் செய்து வைக்காமலே நாட்களை கடத்துகிறார்.

மற்றவர்களுக்கு மத்தியில் ரோர்க்கிடம் அதிகாரம் காட்டி வேலை வாங்குவதில் பீட்டருக்கு தனி நிறைவு. ரோர்க் எந்த மறுப்பும் காட்டாமல், தனக்கு இடப்பட்ட பணிகளை எல்லாம் செய்கிறான். அவ்வப்போது ஏதாவது வடிவமைப்பில் உதவி தேவைப்படும் போது மட்டும் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் தனியாக தனது அறைக்கு அழைத்து தனது வரைபடங்களை சரிபார்க்கச் சொல்கிறான். ரோர்க்கும் தூக்கம் துறந்து அந்த வரைபடங்களை மேம்படுத்த முயற்சிக்கிறான்.

கட்டிடங்கள் கட்டும் இடங்களுக்கு மேற்பார்வைக்கு அனுப்பப்படும் நாட்களை ரோர்க் உற்சாகமாக எதிர் நோக்குகிறான். அவன் கையாள முடியாத கட்டிடது துறை கருவிகள் எதுவுமே கிடையாது. பொதுவாக வெள்ளைச் சட்டை போட்டவர்களை மதிக்காத திறமை வாய்ந்த தொழிலாளர்களும் ரோர்க்கை மதிக்கிறார்கள்.

பீட்டர் ஒரு வேலை நிமித்தமாக வெளியூர் போயிருக்கும் போது, பிராங்கன் ரோர்க்கை அழைத்து பணி ஒன்றை தருகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு கொடுத்த வடிவமைப்பு படங்களை எல்லாம் அவர் நிராகரித்து விட்டார். கேமரூனின் தேனா கட்டிடத்தைப் போல தனக்கும் வேண்டும் என்று கேட்கிறார். ரோர்க் கேமரூனிடம் வேலை செய்த அனுபவம் இருப்பதால், முதல் நிலை வரைபடங்களை ரோர்க் வரைந்து கொடுத்தால் அதற்கு மேல் அலங்காரங்களை தான் சேர்த்துக் கொள்வதாக சொல்கிறார். புதிதாக சேர்ந்த ரோர்க்குக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளிப்பதாக பெருந்தன்மை.

தான் வடிவமைக்கும் படைப்புகளை வேறு யாரும் கை வைக்கக் கூடாது. தான் உருவாக்கிய அதே இறுதி வடிவில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பது ரோர்க்கின் கோட்பாடு. வாடிக்கையாளரே கேமரூனின் அணுகுமுறையை விரும்பி கேட்கும் போது அதை செய்ய தன்னை அனுமதிக்கும்படி கேட்கிறான். வழக்கமாக நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கட்டித் தரும் ஏமாற்று வேலைகளைப் பற்றி அவன் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது ஒரு வாடிக்கையாளரே இப்படி வேண்டும் போது ஏன் அதையும் நாசமாக்க வேண்டும்!

பிராங்கனுக்கு அதிர்ச்சி. காலணாவுக்கு வழியில்லாத இந்த பயல் தனது நிறுவனத்தின் அணுகுமுறைகளைப் பற்றி இப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறான். ஏதோ போனால் போகிறது என்று ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தால் ஏதேதோ பேசுகிறான். இப்படி ஒரு எதிர்வினை உருவாகும் என்ற உணர்வே இல்லாமல் இருந்த ரோர்க்கை உடனேயே சீட்டு கிழித்து அனுப்பி விடுகிறார்.

நகரின் மற்ற கட்டிடத் துறை வடிவமைப்பு அலுவலகங்களுக்கு படை எடுத்து வேலை கேட்கிறான் ரோர்க். பெரும்பாலானோர் நிராகரித்து விடுகிறார்கள். எதிர்பார்த்ததற்கு மாறாக அவனை உற்சாகமாக வரவேற்று வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார் எரிக் ஸ்னைட். அவரது பாணி, நான்கைந்து வரைவாளர்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பாணியில் வடிவமைக்க வைத்து, எல்லாவற்றையும் கலந்து இறுதி வடிவமைப்பு ஏற்படுத்துவது. கேமரூன் பாணிக்கு ஆள் கிடைத்ததும் நான்குடன் ஐந்தாக ரோர்க்கை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்.

வயிற்றுப் பாட்டுக்காக தான் வரையும் படம் என்ன ஆகப் போகிறது என்ற எண்ணத்தை மூட்டை வைத்து விட்டு பணியில் ஈடுபடுகிறான் ரோர்க்.

ஆஸ்டன் ஹெல்லர் என்ற எழுத்தாளர் தனது வீடு கட்ட ஒரு பொருத்தமான கட்டிக் கலைஞரை தேடிக் கொண்டிருக்கிறார், பல நிறுவனங்களை அணுகி அவர்களது வடிவமைப்புகளில் எல்லாம் நிறைவடையாமல் நிராகரித்து விடுகிறார். எரிக் ஸ்னைடுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எப்படியாவது ஹெல்லர் விரும்பும் வகையில் ஒரு வடிவமைப்பு கொடுத்து விட வேண்டும் என்று தனது வரைவாளர் கூட்டத்தை வீடு கட்ட வாங்கியிருந்த இடத்துக்கு அழைத்து செல்கிறார். ரோர்க் வழக்கம் போல ராப்பகலாக உழைத்து தனது சிறந்த படைப்பை வடிவமைப்பாக கொடுக்கிறான்.

ஐந்து வரைபடங்களையும் பிய்த்து பிடுங்கி இறுதி வரைபடம் செய்கிறார் ஸ்னைடு. அதில் பெரும்பகுதி ரோர்க்கின் படைப்பு தெரிகிறது. அதற்கு பொருத்தமே இல்லாமல் அல்ஙகாரங்களையும் கூடுதல் ஒட்டல்களையும் சேர்த்திருக்கிறார், அவ்வளவுதான்.

ஆஸ்டன் ஹெல்லர் வரைபடத்தைப் பார்த்து குழப்பமடைகிறார். கிட்டத்தட்ட தான் எதிர்பார்த்தது போல இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று இடறுகிறது. ரோர்க்கின் ஆதர்ச வாடிக்கையாளர்களில் ஒருவர் ஆஸ்டன் ஹெல்லர். ஸ்னைடு காட்டிக் கொண்டிருக்கும் வரை படத்தில் தேவையற்ற பகுதிகளை பென்சிலால் அடித்து ஹெல்லருக்குக் காட்டுகிறான். ஸ்னைடு கோபத்தில் அவனை வெளியே போகச் சொல்ல, ஹெல்லர் தனது வீடு கட்டும் பணியை ரோர்க்கிடம் தருகிறார்.

ரோர்க் தனது தொழிலை முறையாக தொடங்கி ஒரு அலுவலகமும் திறந்து கொள்கிறான். ஹெல்லரின் வீட்டு பணிகளுக்காக ஆட்களையும் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறான்.

0 comments: