Wednesday, February 17, 2010

The Ugly Duckling

வாத்து அம்மா அடை காத்து அடை காத்து களைத்து போயிருந்தது. இன்றைக்கு முட்டைகள் எல்லாம் பொரித்து விட வேண்டும். உண்மையிலேயே ஒவ்வொன்றாக பொரிக்க ஆரம்பித்தன. ஒரே ஒரு முட்டை மட்டும் மற்றவற்றை விட கொஞ்சம் பெரிதாக, மஞ்சள் கலந்த வெள்ளையாக இருந்தது. அது மட்டும் இன்னமும் கல்லுக்குண்டாக இருந்தது.

'இது ஏதோ வான் கோழி முட்டை போல இருக்கிறது' வாத்து அம்மாவைப் பார்க்க வந்திருந்த நெட்டை கழுத்து அக்கா சொன்னாள்.

'அப்படி எல்லாம் இல்லை, கொஞ்சம் பெருசா இருக்கு அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்தா இதிலிருந்தும் அழகான வாத்துக் குஞ்சு வந்து விடும்' இப்படிச் சொல்லி விட்டு ஒரு பெருமூச்சுடன் இன்னும் அடைப்பாக உட்கார்ந்து கொண்டது. பொறுமைக்கு பலனும் கிடைத்தது. கடைசி முட்டையும் உடைந்து குஞ்சு ஒன்று வெளியில் வந்தது.

'உஃப், இது என்ன இப்படி ஒரு வாத்துக் குஞ்சு.' பெரிதாக, பழுப்படித்த நிறத்தில், அசிங்கமாக இருந்தது. உண்மையிலேயே இது வான் கோழிக் குஞ்சுதானோ!

'சரி, சரி எல்லோரும் வாங்க! குளத்தில் நீந்தி களத்துக்குப் போகலாம். ரெடி, 1,2,3 எல்லாம் குதிங்க' அம்மா பேசிக் கொண்டே தனது புதிய குடும்பத்தை குளத்துக் கரையிலிருந்து தண்ணீருக்குள் இறக்கியது. அசிங்கமான வாத்துக் குஞ்சும் நன்றாகவே நீந்தியது.

'இவனும் நம்ம வாத்துக் குஞ்சுதான். எவ்வளவு நல்லா நீந்துகிறான். என்ன கொஞ்சம் நாளில், மத்தவங்களைப் போல அழகாக வளர்ந்து விடுவான்.'

புதிய வாத்துக் குடும்பம் அம்மாவைத் தொடர்ந்து களத்தில் ஏறியது.

'தண்ணியை நல்லா உதறிக் கொள்ளுங்க. நடக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தள்ளாம பதவிசா நடங்க. அதோ அங்கே மூலையில உட்கார்ந்திருக்கே அதுதான் நமக்கெல்லாம் மூத்த வாத்து பாட்டி. போய் வணக்கம் சொல்லிக்கோங்க' அம்மா பேசிக் கொண்டே குஞ்சுகளை வழி நடத்தியது.

'இது என்ன புதிய கூட்டம், இருக்கறவங்களுக்கே இடம் போதாது, சாப்பிடவும் தள்ளுமுள்ளா இருக்கு. இதுங்களையும் எப்படி சேர்த்துக்கறது' சில அடாவடி குரல்கள் எழுந்தன.

ஆனால் வாத்துப் பாட்டிக்கு திருப்திதான். 'நல்ல ஆரோக்கியமான வாத்துக் குஞ்சுகள். நல்ல இடமா பார்த்து மேயப் போங்க. ஏதாவது மீன் தலை கிடைச்சா, எனக்குக் கொண்டு தாங்க' என்று ஆசீர்வதித்து விட்டு, 'அந்த பெரிய குஞ்சு மட்டும் ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்கு!'

'அவன் கொஞ்சம் கூடுதல் நேரம் முட்டைக்குள் இருந்ததால் பெருசாகி விட்டான். நாள் போக போக மத்தவங்களைப் போல அழகாக வளர்ந்து விடுவான்' என்று அம்மா சமாதானம் சொல்லி விட்டு எல்லா குஞ்சுகளையும் அழைத்துச் சென்றது.

இந்த புதிய கூட்டத்தைச் சேர்த்துக் கொள்வதில் எல்லோருக்கும் ஒத்த மகிழ்ச்சி இல்லை.

'இவனைப் பார், என்ன ஒரு அவலட்சணம். எல்லாவற்றையும் விட அதிகமா சாப்பிடவும் போறான்.' என்று சொல்லிக் கொண்டு அசிங்கமான வாத்துக் குஞ்சின் மீது பாய்ந்து கொத்த ஆரம்பித்தது வாத்து தடியன். அம்மா ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து தடியனுக்கு ஒரு அடி வைத்து துரத்தி வைத்தது.

'ஆமாமா, மத்தவங்க கூட பரவாயில்லை. இவன் சாப்பிட்டே நம்மை எல்லாம் அழித்து விடுவான்' தடியனின் கூட்டாளிகள் கூக்குரலிட்டன. கோபத்தில் தலையைத் திருப்பிக் கொண்டு போனது அம்மா.

இப்படியாக அசிங்கமான வாத்துக் குஞ்சின் வாழ்க்கை ஆரம்பித்தது. களத்து விலங்குகளுக்கு உணவு கொண்டு வரும் சிறுமி கூட, நெல் கொண்டு வந்த கூடையால் அசிங்க வாத்துக் குஞ்சுக்கு ஒரு மொத்து மொத்தினாள் . விவசாயியின் நாய் ஒரே வாயில் விழுங்கி விடுவது போல இளித்துக் கொண்டு துரத்தியது.

அம்மாவின் காதில் விழாத போது, வாத்துக் குஞ்சின் சகோதர சகோதரிகள் கூட அதைப் பழித்தன. 'இவனால்தான், நமக்கெல்லாம் கெட்ட பேர். இவன் மட்டும் எங்காவது போய் தொலைந்து விட்டால், எவ்வளவு நல்லா இருக்கும்!'

அசிங்கமான வாத்துக் குஞ்சும் கண்ணில் நீர் முட்டியது. 'இந்தக் களத்தில் யாருக்குமே எனக்குப் பிடிக்கவில்லை. என் கூடப் பிறந்தவர்கள் கூட என்னை வெறுக்கிறார்கள். நான் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.'

அம்மாவிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், ஒரு நாள் களத்தின் மேற்குப் பக்கத்தில் இருந்த காட்டுக்குள் ஓடிப் போய் விட்டது அசிங்கமான வாத்துக் குஞ்சு. காட்டில் புதிய செடி கொடிகள், மிருகங்களைப் பார்த்து கண் பூத்துப் போனது. காட்டுக்கு அந்தப் பக்கம் இருந்த குளத்தில் குதித்து ஆனந்தமாக நீந்தியது. அங்கு ஏற்கனவே இருந்த காட்டு வாத்துக் கூட்டம் இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைப் பார்த்ததும் ஓடி வந்து கொத்தி விரட்ட ஆரம்பித்தன.

அங்கிருந்து தப்பி ஓடி ஓடி ஒரு புதரருகில் ஒதுங்கி இருந்தது. நன்கு பசித்தது. இருட்டவும் ஆரம்பித்தது. 'இந்த பெரிய உலகத்தில் எங்கு போவது, எப்படி வாழ்வது' என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தது வாத்துக் குஞ்சு.

திடீரென்று 'பூம், பூம், டுமீல்' என்று சத்தம். வெலவெலத்துப் போய் புதருக்குள் நன்கு பதுங்கிக் கொண்டது. பறவை வேட்டையாடுபவர்களின் துப்பாக்கிகள் பேசின. காட்டு வாத்துக்கள் வசித்த குளத்தை நோக்கி சுட்டுக் கொண்டு போனார்கள். தலை பிழைத்தது புண்ணியம் என்று அங்கிருந்து வேக வேகமாக ஓடியது வாத்துக் குஞ்சு.

அந்த முதல் இரவு என்றுமே மறக்க முடியாதது. இரவு விலங்குகளின் விதவிதமான சத்தங்கள், நடுக்கும் குளிர், நிம்மதியாக தூங்கக் கூட இடம் இல்லாமல் களைத்து சலித்துப் போய் சோர்ந்து சரிந்திருந்தது.

காலையில் பகலவனின் வெளிச்சம் கசியும் வேளையில் எழுந்து பார்த்தால், முன்னால், பெரிய ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்தது. செந்நிற சாயம் தீட்டி வானம் குடை விரித்திருந்தது. கண்களுக்கு இதமான காலைக் காட்சிகள், அவ்வளவு பெரிய ஏரியைப் பார்த்ததும் ஒடுங்கியிருந்த மனம் மலர்ந்தது.

ஆனந்தமாக ஓடி தண்ணீரில் குதிக்கப் போகும் சமயத்தில் வானத்திலிருந்து ஒரு வெண்ணிற பறவைக் கூட்டம் இறங்குவதைப் பார்த்தது. அழகான தேவதைகள் போன்று வெண்மையான அன்னப் பறவைகள், கூட்டமாக ஏரியில் இறங்கி நீர் விளையாட ஆரம்பித்தன. அவற்றைப் பார்த்ததும் அசிங்கமான வாத்துக் குஞ்சின் மனதில் இனம் புரியாத உணர்வுகள்.

'இந்தப் பறவைகள் போல நாமும் பறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இவஙக நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சு பேசக் கூட மாட்டாங்க. தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகு அன்னங்கள் எங்கே, பிறந்த இடத்தில் கூட வெறுக்கப்படும் அவலட்சண வாத்துக் குஞ்சு நான் எங்கே! ஒரு ஓரமா நின்று பார்த்து மகிழ்ந்து கொள்வோம்!'

நேரம் போனதே தெரியவில்லை. அந்த தெய்வீகப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே வெயில் ஏறும் வரையில் கழித்து விட்டது வாத்துக் குஞ்சு. அன்னப் பறவைகள் எழுந்து பறந்து போன பிறகுதான், தான் எங்கிருக்கிறோம், நிலைமை என்ன என்பது உறைத்தது வாத்துக் குஞ்சுக்கு.

பரந்து விரிந்த நண்பர்களற்ற உலகில் அதன் பயணம் தொடர்ந்தது. எங்கெங்கோ போய், யார் கண்ணிலும் படாமல் பதுங்கிப் பதுங்கி வயித்துப் பாட்டைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியனாக அந்த கோடை காலத்தைக் கழித்தது.

வாய் விட்டுப் பேசக் கூட உற்றாரோ நட்போ இல்லாமல் நாட்கள் நகர்ந்தன. மழைக் காலம் வரப் போகிறது. முதல் மழை விழுந்த போது வாத்துக் குஞ்சுக்கு 'இது என்ன புதிய கலாட்டா' என்று கலவரம் ஏற்பட்டது. ஓடோடிப் போய் ஒரு ஓட்டு விட்டின் சரிப்பில் நின்று மழையிலிருந்து ஒதுங்கிக் கொண்டது.

அந்த வீட்டில் ஒரு வயதான பாட்டி வசித்து வந்தார். ஒரு பூனையும், ஒரு கோழியும் வளர்த்து வந்தார் பாட்டியம்மா. மழையில் கலங்கிப் போயிருந்த வாத்துக் குஞ்சுக்கு அந்த வீட்டில் இடம் கிடைத்தது. புதிதாக வந்த வாத்துக் குஞ்சை கோழிக்கும் பூனைக்கும் பிடிக்கவே இல்லை.

கோழி தினமும் ஒரு முட்டையிடும். பூனைக்கு முதுகை வளைத்து கோபுரம் போல் நிற்கத் தெரியும். அதனால் இரண்டு பேரும் உலகத்திலேயே திறமை வாய்ந்தவர்கள் என்று தீர்மானம் செய்திருந்தார்கள்.

'உனக்கு முட்டை போடத் தெரியுமா!'
'உடலை நெளித்து கோபுரம் போல நிற்க முடியுமா!'

'இல்லை என்றால் பேசாம அந்த மூலையில் போய் உட்காரு' என்று ஒதுக்கி வைத்து விட்டன பூனையும் கோழியும்.

பழகிப் போன ஒன்றான தனியனான நாட்கள் தொடர்ந்தன. காலையில் மழை நின்று குளிர்ந்த காற்று வீசியது.

'வெளியில் போய் நீந்தலாமா!' என்று தயக்கமாக ஒரு ஆலோசனையை முன் வைத்த வாத்துக் குஞ்சைக் கடுப்பாக பார்த்தன பூனையும், கோழியும்.

'என்ன ஒரு காட்டுமிராண்டி நீ. நீந்தணுமாம் நீந்த! உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு. பேசாமல் ஓடிப் போய் விடு. முட்டை போடவும் தெரியாத உடலை வளைச்சு கோபுரமா நிக்கவும் தெரியாது. இப்போ வந்து நீந்தணும்னு புலம்பல். ஓடு ஓடு, இனிமேல் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதே'

'இந்த உலகத்தை என்னால புரிந்து கொள்ளவே முடியாது' என்று சோகத்துடன் வெளியேறியது அசிங்கமான வாத்துக் குஞ்சு.

அடுத்த சில நாட்களில் பருவ மழை தன் கடமையைச் செய்ய ஓய்வெடுக்க உலர்ந்த இடமே இல்லாமல் போய் விட்டது. சாப்பிடுவதற்கும் ஒரு புழு கூடக் கிடைப்பது அரிதாகி விட்டது. எவ்வளவு நேரம்தான் நீந்திக் கொண்டே இருப்பது!

குளத்தின் கரை உடைந்து வயல் காடெல்லாம் தண்ணீர் நிரம்பி விட்ட நாட்களில், பசியிலும் உடல் களைப்பிலும் சோர்ந்து போய் விழுந்து விட்டது வாத்துக் குஞ்சு.

நல்ல வேளையாக அந்த வழியாகப் போன விவசாயி மயங்கிக் கிடந்த வாத்துக் குஞ்சை எடுத்து தனது துண்டில் பொதிந்து வீட்டுக்குக் கொண்டு போனார். வீட்டு அம்மா, வாத்துக் குஞ்சின் இறகுகளைத் துடைத்து, சூடான கஞ்சி புகட்டினாள். அந்த இதமான சூழலில் உணவு வயிற்றுக்குள் போனதும் புத்துயிர் பிறந்தது அசிங்கமான வாத்துக் குஞ்சுக்கு.

வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம். அசிங்கமான வாத்துக் குஞ்சை கையில் எடுத்து விளையாடப் போட்டி போட்டார்கள்.

நட்பு என்பதே பார்த்தறியாத அசிங்கமான வாத்துக் குஞ்சு கலவரத்தில் அங்குமிங்கும் ஓடியது. மேசையின் மீது வைத்திருந்த தயிர்ப் பாத்திரத்தை தட்டி விட்டு வீடெல்லாம் தயிரை சிதற அடித்தது. குழந்தைகள் உற்சாகத்தில் கூக்குரல் இட்டார்கள். ஓடி ஓடி, வாசல் வழியாக வீட்டுக்கு வெளியேயே வந்து விட்டது.

'எங்கு போனாலும், நமக்கு நிம்மதி இல்லை' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே தண்ணீரில் மூழ்கிக் கிடந்த வயக்காட்டுக்குள் போனது.

தண்ணீர் வடியும் வரை எப்படியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்தது. மழைக் காலம் முடிந்து தெளிவான வானம் தென்பட ஆரம்பித்த நாட்களில் தனது பயணங்களை மீண்டும் ஆரம்பித்தது. முன்பொரு நாள் தேவதைப் பறவைகளைப் பார்த்த ஏரிக் கரை நோக்கி அதன் கால்கள் தானாக நடந்தன.

'இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதை விட, அந்தத் தெய்வீகப் பறவைகள் முன்பு போய் நின்று, அவர்கள் என்னைக் கொத்திக் கொன்றாலும் நல்லதுதான்' என்று முடிவு செய்து கொண்டது. அதிக நேரம் காத்திருக்க தேவையில்லாமல், அன்னப் பறவைக் கூட்டம் சீக்கிரமாகவே ஏரியில் இறங்கியது.

வேக வேகமாக நீந்தி அவற்றின் முன் போய் சேர்ந்தது நமது நண்பன். 'அவலட்சணமான, யாருக்கும் பிடிக்காத என்னை கொத்திக் கொன்று விடுங்கள்' என்று மனதுக்குள் சொல்லியபடியே கண்களை இறுக மூடிக் கொண்டு அன்னங்களின் முன் நீந்தி சேர்ந்தது.

'ஹே! நீயும் எங்களில் ஒருவன். எங்க கூட சேர்ந்துக்கோ, நாம எல்லோரும் வானத்தில் உயரப் பறந்து போகலாம்' என்று யாரோ சொல்வதைக் கேட்டு கண்களைத் திறந்து பார்த்தது. தண்ணீரில் தனது உருவத்தையும் பார்த்தது. அந் த அசிங்கமான வாத்துக் குஞ்சு அழகான அன்னப் பறவையாக வளர்ந்து விட்டிருந்தது.

தனது புதிய நண்பர்களுடன் நீரில் விளையாடி விட்டு தனது சிறகுகளை விரித்து வானத்தில் உயர உயரப் பறந்து போனது.

6 comments:

யோசிப்பவர் said...

கதை நன்றாக இருக்கிறது! மொழிபெயர்ப்பா? ஒரிஜினல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?!

மா சிவகுமார் said...

வணக்கம் யோசிப்பவர்,

http://en.wikipedia.org/wiki/The_Ugly_Duckling

உலகின் அற்புதமான தேவதைக் கதைகளில் ஒன்று இது. எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத கதை. hans andersonன் சாகா வரம் பெற்ற கதை.

பேரைச் சொன்னாலே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

ரவிசங்கர் said...

இப்படி எல்லாம் ஒன்னு இருப்பதே தெரியாது. உலக இலக்கிய அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி. இது மாதிரி நிறைய எழுதுங்கள். நன்றி.

யோசிப்பவர் said...

//
பேரைச் சொன்னாலே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்//

அவரவர் ரசனைக்குத் தகுந்தாற்போல் தானே ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து படிப்பர். அதனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. இது போன்ற தழுவல்களுக்கு ஒரிஜினலைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லிவிடுவது நலமென்று நினைக்கிறேன்.

நான் முன்பு இந்தக் கதையின் அடிப்படை கருவை மட்டும் வைத்து எழுதப்பட்ட ஒரு short versionஐ எங்கோ படித்த ஞாபகம். ஆனால் ஒரிஜினல் இல்லை. என்ன இருந்தாலும் ஒரிஜினலை தெரிந்து கொள்வதில், அப்படி ஒரு திருப்தி!:)

உமா said...

மிக அழகான பகிர்வு. நன்றி.

மா சிவகுமார் said...

யோசிப்பவர்,

உண்மைதான். எதையும் நம்மை வைத்து முடிவு செய்து விடக் கூடாது என்பது அடிப்படைப் பாடம் :-)

நன்றி உமா.

அன்புடன்,
மா சிவகுமார்