தமிழில் கதை படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் எல்லோரும் பேரை எடுத்தாலே உருகிப் போகும் படைப்பு பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் பற்றிப் புகழ்ந்து புதிதாக எதுவும் சொல்ல புதிய சொற்களைத்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவு பேசவும் எழுதவும் செய்து விட்டோம்.
1.
'சேந்தன் அமுதன் உண்மையிலேயே தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைதான் என்பதை அறிந்ததும் செம்பியன் மாதேவி ஒரு புறத்தில் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார். அவர் உடம்பெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. "மகனே!" என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார்.
"உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே" என்று கருதக் கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக் கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது. "அரண்மனையில் வாழ்ந்தால் என்ன? குடிசையில் வளர்ந்தால் என்ன? இந்த நிலையில்லா மனித வாழ்வின் சுகபோகங்கள் எல்லாம் வெறும் மாயை அல்லவா! உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது? என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்குப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும்!" என்றெல்லாம் அடிக்கடி எண்ணி மனதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
பிறந்ததுமே இறந்து விட்டதாக நினைத்திருந்த தான் பெற்ற மகன் உயிரோடுதான் இருக்கிறான். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து வளர்ந்து வருகிறான். தனக்கு மிக அருகிலேயே வசித்து வருகிறான். என்று தெரிந்ததும் ஒரு தாய் எப்படி நடந்து கொண்டார் என்ற மேலே சொன்ன பகுதி தமிழர் நாகரீகத்தின் உயர்நிலைக்கு ஒரு சான்று. வரலாற்றில் நடந்தது எவ்வளவு, கல்கியின் கற்பனையில் சேர்ந்தது எவ்வளவு என்று விவாதித்தாலும், இரண்டுமே இந்த மண்ணில் பிறந்தவர்களின் உள்ளப் போக்குகள்தான்.
2. "தாயே! நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருக்கிறேன். உலகம் போற்றும் புண்ணியவதியான தாங்கள் ஒரு நாள் என்னை 'மகனே!' என்று அழைக்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்கா விட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத் தானிருந்தேன். ஆனால், இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை 'அன்னை' என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன்"
சோழப்பேரரசின் ஆட்சிப் பொறுப்புக்கு தனக்கு உரிமை இருக்கிறது, அதுவும் முதல் உரிமை என்று தெரிந்த ஒரு இளைஞர் பேசும் பேச்சு மேலே. இராஜ்ய உரிமையை எல்லோரும் பேசித் தீர்த்து வேறு யாரிடமாவது ஒப்படைத்த பிறகு வந்து தனது பிறப்பு உறவைத் தேடிக் கொள்ளலாம் என்று இருந்தாராம். இப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்ந்ததால்தான் சோழ வளநாடு உலகெங்கும் தன் புகழ் பரப்பி ஒளிர்ந்திருக்கிறது.
3. "இங்கே ஒருவர் இருக்கிறார். அவர் என்னை விட பிராயத்தில் மூத்தவர். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்னை விட அதிக உரிமை அவருக்கு நிச்சயமாக இருந்த போதிலும், அவர் அதைக் கோரவில்லை. நான் முடிசூட்டிக் கொண்டு சிங்காதனத்தில் அமர்வதைப் பார்த்து மகிழச் சித்தமாக இங்கு வந்திருக்கிறார். என் உயிரினும் இனியவரான என் நண்பரைக் காப்பாற்றினார். இந்தச் சோழ குலத்துக்கு நேர்வதற்கு இருந்த பெரும் விபத்து நேரிடாமல் தடுத்தார். இப்படிப்பட்ட சிறப்பான காரியம் எதுவும் நான் இதுவரையில் இந்நாட்டுக்குச் செய்தேனில்லை. ஆகையால் இந்த மணிமகுடத்தை மகான் கண்டராதித்தரின் குமாரரும், என் சிறிய தந்தையுமான மதுராந்தகத் தேவரின் தலையில் சூட்டுகிறேன்."
அருள்மொழித்தேவரின் இந்த செயலைக் குறித்து கல்கியை விட வேறு யார் சிறப்பாக சொல்லி விட முடியும்.
அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக் கொள்ள வேண்டுமென்று இராஜ்யத்தின் மக்கள் விரும்பினார்கள். உற்றார் உறவினர் விரும்பினார்கள். அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும்படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள்.
அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும், அவன் சாம்ராஜ்யத்தை உத்தம சோழனுக்கு அளித்துப் பட்டம் கட்டுவித்தான்.
உலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான அன்னொரு அரும்பெரும் செயலைக் காணுதல் அரிது.
அசோக சக்கரவர்த்தி கலிங்கநாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, "இனி யுத்தமே வேண்டாம்" என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மனின் தியாகத்துக்கு இணையாகக் கூறலாம்.
தமிழக வரலாற்றில் மிகச் சிறந்து ஆட்சி புரிந்து நான்கு திசையிலும் தன் புகழ் பரப்பி மறைந்த இராஜ இராஜ சோழனின் மேன்மைக்குக் காரணம் இதுவல்லவா!
3 comments:
ஓகே ! ரைட்டு
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
Post a Comment