புரட்டிப் பார்ப்போம் என்று ஆரம்பித்து படித்து முடித்ததும் நம்முடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டப் படைப்புகள் பற்றியும் அவை ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றியுமான பதிவுகள்.

Wednesday, January 13, 2010

ஸ்லாஷ்டாட்

முதன் முதலில் சொந்தமாக கணினி வாங்கியது 1997ல். எச்டிஎம்எல் கற்றுக் கொள்ள ஆரம்பித்து C++ படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது போய் விழுந்தது திறவூற்று மென்பொருள் உலகில். திறவூற்று மென்பொருள் உலகின் ஒரு முக்கிய தளம் ஸ்லாஷ்டாட் என்ற விவாதக்களம்.

கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் போன்ற அமைப்புதான். 1997ல் ராப் மால்டா என்ற அமெரிக்க கணினியியல் மாணவன் தான் படிக்கும் கணினித் துறை செய்திகளைத் தொகுத்து ஒரு இடத்தில் போடுவதற்காக தளம் ஒன்றை ஆரம்பித்தான். அவரது நெருங்கிய நண்பர்களில் சிலருடன் அதைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்.

செய்திகளுக்கான சுட்டி, அதைக் குறித்த படித்தவரின் கருத்து நான்கைந்து வரிகள். கிட்டத்தட்ட நம்ம சற்றுமுன் வடிவில்.

படிக்க வருபவர்களும் தமது பின்னூட்டங்களை இணைக்கும் வசதி செய்து கொடுத்தான். வாய்வழியாகவே சேதி பரவி படிப்பவர்களின், பின்னூட்டம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கும்மிப் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன. ஒரு சில நம்பகமான நண்பர்களுக்கு மட்டும் மட்டுறுத்தல் வசதி செய்து கொடுத்தார். மட்டுறுத்தல் என்றால் நீக்கி விடுதல் இல்லை. பின்னூட்டத்துக்கு மதிப்பெண் அளிப்பது.

இன்னும் பரவலாக ஆட்கள் வர ஆரம்பிக்கவே மட்டுறுத்தலையும் தானியக்கமாக பலருக்கும் பகிர்ந்தளிக்கும் முறையை உருவாக்கினார்.

இது வரை பெரும்பாலான நிரல் மாற்றங்கள் உருவாக்கங்கள் கமாண்டர் டேக்கோ என்ற பெயருடன் விவாதங்களில் கலந்து கொள்ளும் ராப் மால்டாவே செய்து வந்தார். தளத்தின் பிரபலம் அதிகமாகி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. நண்பர்கள் சிலரும் தளத்தை நிர்வகிக்க உதவி செய்யலாயினர்.

டாட்காம் பரபரப்பில் பல மில்லியன் டாலர்கள் கொடுத்து இந்தத் தளத்தை வாங்க ஒரு நிறுவனம் முன்வந்தது. இப்போது சில கைகள் மாறி விஏசிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் கையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தளத்தின் இயல்பை மாற்றி விடாமல் தானே வழிநடத்த தன்னிச்சை வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராப் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தினமும் 20 செய்திகள் வெளியாகும். ஒவ்வொரு செய்திக்கும் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. அந்தப் பின்னூட்டங்களை மட்டுறுத்தி -1, 0, 1, 2, 3, 4, 5 என்று மதிப்பெண் கிடைக்கிறது. +4க்கு மேல் கிடைத்து பின்னூட்டங்கள் மட்டும் படிக்க வேண்டும் என்று அமைத்துக் கொள்ள முடியும். எல்லா பின்னூட்டங்களையும் பார்க்க வேண்டுமானால் -1லிருந்தே எடுத்துக் கொள்ளலாம்.

2002ல். தனது அப்போதைய நண்பிக்கு இந்தத் தளத்தில் ஒரு செய்தியாக தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார் ராப் மால்டா. அந்தப் பெண்ணும் தளத்திலேயே ஒரு பின்னூட்டமாக அதை ஏற்றுக் கொண்டார். அந்த இடுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்தன.

Of Human Bondage - W Somerset Maugham

Of Human Bondage, நான் முதல் முதலில் படித்த ஆங்கில classic. 1991ல் சென்னையில் அமெரிக்க தூதரக நூலகத்தில் உறுப்பினாரவுடன் படித்த புத்தகங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது ஆங்கில நூல்கள் எதுவும் படிக்க முடிந்ததில்லை. சென்னைக்கு வந்து கல்லூரியில் படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஆங்கிலத்தில் சரளமாக படிக்க முடிந்திருந்தது. அப்படிப் பார்க்கும் போது, ஆங்கிலத்தில் முழுமையாகப் படித்த முதல் நூல்களில் ஒன்று இந்த Of Human Bondage.

'எந்தப் புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டால் ஒரு வரி விடாமல் படித்து விட வேண்டும், கடைசிப் பக்கம் வரை படித்து விட வேண்டும்' என்று எழுதாத கோட்பாடு ஒன்று என் மனதில் உண்டு. தாங்கவே முடியாத அளவு போரடித்த ஓரிரண்டு நூல்களைத் தவிர எல்லாவற்றையும் அப்படித்தான் படித்திருக்கிறேன்.

Of Human Bondage முழுவதுமே அழுத்தமான நிகழ்வுகளாக இருக்கும். கதையின் நாயகனுக்கு, பிறவியிலேயே ஒரு பாதம் ஊனம். கதையின் முதல் பக்கங்களில் அவனது தாய் இறந்து விடுகிறாள். கதை ஆரம்பிக்கும் முன்பே தந்தை இறந்து விடுகிறார். பள்ளியிலும், கல்லூரியிலும் கால் ஊனத்தினால் மற்ற சிறுவர்களைப் போல இயல்பான வாழ்க்கை இல்லாமல் போகிறது.

அவனை வளர்க்கும் அங்கிள் (அப்பாவின் சகோதரர்) கொடுக்கும் அல்லது கொடுக்க முடியாத வழிகாட்டல்களை தாண்டி, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே பல்கலைக்கழகம் போவதை கைவிட்டு, ஜெர்மனி போகிறான். ஒரு ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்து, கணக்காளர் வேலை பயிற்சியில் அமர்கிறான். ஒரே ஆண்டில் அது ஒத்து வராது என்று தெரிந்து பாரிசுக்கு ஓவியம் பயில போகிறான். ஓரிரு ஆண்டுகளில் அதுவும் தனக்கு வசப்படாது என்று புரிந்து லண்டன் திரும்பி தனது தந்தையைப் போல மருத்துவப் படிப்பில் நுழைகிறான்.

தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணை பைத்தியமாக காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்காக நிறைய செலவழிக்கிறான். அவள் இவனை கைவிரலில் ஆட்டி, தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறாள். அவள் தன்னை சீரழித்துக் கொண்டே போக, அந்தப் பெண்ணின் மீதான ஆசை, படிப்படியாக வடிந்து போகிறது.

தந்தை விட்டுப் போன பணத்தை படிப்பு முடியும் முன்பு கரைத்து விடுகிறான். பட்டினி, வறுமை, கடையில் வேலை பார்த்தல், அன்பான குடும்பம் ஒன்றின் நட்பு. வயதான அங்கிள் இறந்ததும் கொஞ்சம் காசு கிடைக்க, மருத்துவப் படிப்பை முடிக்கிறான். இனிமேல் உலகமெல்லாம் சுற்ற வேண்டும் என்று கனவு காண்கிறான். நட்பான குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க கிராமப்புறம் போகும் போது, அவன் மீது அன்பைப் பொழியும் குடும்பத்தின் மூத்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்து விட்டதை உணர்கிறான்.

அவளைத் திருமணம் செய்து கொண்டு, கடலோரக் கிராமத்தில் மருத்துவப் பணி செய்து வாழ முடிவு செய்கிறான்.

கதையின் போக்கில் மகிழ்ச்சியோ உற்சாகமோ கிடையாது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது நட்பு கொள்ளும் குடும்பத்துடன் உறவாட ஆரம்பித்த பிறகுதான், மனதை வருடிக் கொடுக்கும் நிகழ்வுகள் படிக்கக் கிடைக்கிறது.

பொதுவாக பிடித்த கதைகளை பல தடவை படித்துக் கரைத்துக் குடித்து விடுவது எனது வழக்கமாக இருந்தாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை சொந்தமாக வாங்கி வைத்திருந்தாலும், படிப்பதற்கு மனமே வரவில்லை. என்றாவது ஒரு நாள் படிக்கலாம் என்று அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது.

புத்தாண்டு + வார இறுதி விடுமுறைகளில் மாலை வேளைகளில் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முடித்தேன்.

Sunday, November 22, 2009

தசாவதாரம், ஜெகன்மோகினி, ஆதவன், பழசிராஜா

'எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், இசைவல்லுனர்கள் இவர்கள் எல்லோருமே தமது அறிவாலும் பயிற்சியாலும் திறமையாலும் ஒரு வித்தையைக் கைக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு விஷயம். திறமை உள்ளவர்கள் என்பதாலேயே அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது. தமக்கு வாய்த்த வித்தையை வியாபாரமாக மட்டும் பயன்படுத்துபவர்களின் பின்னால் நாம் போக வேண்டியதில்லை!'

நண்பர் கல்வெட்டு சொல்லும் இந்தக் கருத்து இடது சாரி, கம்யூனிசப் புரட்சி இயக்கங்களின் எண்ணத்துடன் ஒத்துப் போவது. 'உன் திறமையை மக்களுக்கு சமூகத்துக்கு பலனுள்ளதாகப் பயன்படுத்த முடியவில்லை என்றால், அந்தத் திறமை தேவையில்லை'

1. எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய ஏமாற்றங்களில்தான் முதல் முதலில் கல்வெட்டின் இந்தக் கருத்தை கேட்டேன். சரியாகத்தான் பட்டது. பள்ளிப்பருவத்தின் ஆதரிச நாயகனாக ரஜினிகாந்தும், கமலஹாசனையும் விட சுஜாதாதான் இருந்தார். பொறியியல் படித்தவர், கணிணியில் வித்தகர். அறிவியலை வாசிக்கிறவர், மயக்கிப் போடும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். சுஜாதாவின் எழுத்து வெளியாகும் போது அந்தப் பத்திரிகையைச் சுற்றி ஒரு ஒளிவட்டமே தெரியும்.

அவரும் ஆகக் கூடிய விலைக்குத் தன் திறமையை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார். வாசகனின், தமிழ் வாசகனின் மனக் கம்பிகளை எப்படி மீட்டுவது என்ற கலையை வைத்துக் கொண்டு உணர்ச்சிக் கலவைகளைக் கலந்து எப்படி விற்கும் சரக்கைச் சமைப்பது என்பதில் வெகுவாகத் தேர்ந்திருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்த பிரிவோம் சந்திப்போம், என் இனிய இயந்திரா, ஜீனோ தொடர்கள் அவற்றின் ஓட்டத்திலேயே படித்தவை. குமுதத்தில் விக்ரம் - திரைப்படத்துக்கு முன்னோட்டமாக தொடராக வந்தது. தூண்டில் கதைகள், மத்யமர் கதைகள் என்று சிறுகதைகள்.

வைரங்கள் என்று ஒரு கதை மிகவும் பாதித்தது. கல்கியில் தொடராக இருள் வரும் நேரம்.

கல்லூரி நாட்களில் தேடித் தேடிப் படித்த எழுத்து அவரது. நூலகங்களிலும், புத்தகக் கடைகளிலும், பழைய புத்தகக் கடைகளிலும் சுவில் ஆரம்பித்து ஜாவில் தொடர்ந்து தாவில் முடிந்த பெயருடன் இருக்கும் எழுத்துக்களை எல்லாம் படித்து முடித்து விட வேண்டும் என்ற தாகம் அப்போது. பிறிதொரு காலத்தில், பிறிதொரு பணியில் அவருடன் சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழக இளைஞர்களுக்கு கணினிகளையும் உயர் அறிவியலையும் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என் வரலாற்று அடிக்குறிப்பு மட்டுமே அவருக்கு மிஞ்சியிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. இருந்த திறமைக்கு சமூகத்தையே புரட்டிப் போட்ட படைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.

2. இரண்டாவதாக கமல்ஹாசன் எனப்படும் கமலஹாசன்.

கலைஞர் தொலைக்காட்சியில் தசாவாதாரம் திரைப்படம் காட்டிய நாளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி வரும் பேருந்தில் அந்தப் படத்தின் முதல் ஒரு மணி நேரத்தைப் பார்த்திருந்தேன். விட்ட இடத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சியில்.

இவ்வளவு பணம், இவ்வளவு திறமை, இத்தனை ஆண்டு திரைப்பட அனுபவம். இவ்வளவையும் தசாவதாரம் போன்ற மலிவான கற்பனையில் பார்வையாளனை முட்டாளடிக்கும் நோக்கில் திரைப்படமாக செய்வது எவ்வளவு பெரிய வீணடிப்பு!

அதற்கு அடுத்த 10 நாட்களில் ஏதோ செலுத்தல்களில் சந்திரன் திரையரங்கில் ஜெகன் மோகினி திரைப்படம் பார்க்க முடிந்தது. fountainheadல் கல் குவாரி நகரிலிருந்து திரும்பி நியூயார்க் வரும் டொமினிக், முதல் கூட்டமாக elseworth Toohey நடத்தும் ஒரு கூட்டத்திற்குப் போவதற்குக் காரணமாக, 'நீந்தப் போனால், கொஞ்ச கொஞ்சமாக தண்ணீரில் கால் வைத்து போவது எனக்குப் பிடிக்காது. ஒரேயடியாக குதித்து தண்ணீரில் நனைந்து விட வேண்டும். இந்த உலகுக்குள் திரும்பி வர, அதனை முழுமையாகப் பிரதிபலிக்கும் ஒரு இடத்திற்கு வருவதுதானே சரி' என்பார்.

பல ஆண்டுகளாக திரையரங்குக்குப் படம் பார்க்கப் போவதைத் தவிர்த்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாகப் போன முதல் படம் இந்த ஜெகன்மோகினி. நமீதாவிடம் 'தான் உலகநாயகி, தன்னை எல்லோருக் கொண்டாட வேண்டும், தான் எல்லோரையும் விட தலை சிறந்தவர்' என்ற நினைப்பு இல்லை. மற்றபடி ஜெகன்மோகினி தசாவாதாரம் போலவே பெரும் செலவில், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பொழுது போகும் படி எடுக்கப்பட்டிருந்தது. குறைந்த பட்சம், தசாவதாரத்தில் பெண்களை இழிவு படுத்துவது போல் ஜெகன்மோகினியில் ஆண்கள் இழிவுபடுத்தப்படவில்லை என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம்.

3. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இன்னொரு திரைப்படம். ரயிலுக்குக் காத்திருக்கும் 3 மணி நேரத்தில் ஒரு திரைப்படத்துக்கு சீட்டு வாங்கினால் - ஆதவன். இடைவேளை போட்டதும், மீதி இருக்கும் நேரத்தை ஊருக்குள் உலவாவிக் களிக்கலாம் என்று வெளியே வந்து விட்டதால் தப்பித்தேன். இடைவேளை வரை சகிக்கும் படி இருந்தது அதன் பிறகு இன்னும் கொடுமை என்று விமரிசனங்கள்.

சூரியா - கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்.

4. 'எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருந்தா எப்படி? நீங்க என்னதான் வேண்டுகிறீர்கள்? உலகம் எந்த வழியில் போக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதற்கெல்லாம் மாற்றுத் திட்டம் ஒன்று உங்களிடம் இருக்கிறதா'

சுற்றுப்புழச்சூழல், தொழில்நிறுவன ஆதிக்கம் என்று எல்லா திட்டங்களையும் எதிர்த்துக் கொண்டிருக்கும் போராளிகளைக் குறித்துப் பேசும் போது அவர்களுக்கு ஆதரவாக பேசி எழுதி வரும் முன்னணி பத்தி எழுத்தாளரிடம் இப்படிக் கேட்டபோது, 'நான் எதுக்கு மாற்றுத் திட்டம் யோசிக்க வேண்டும்? ஆட்சியில் இருப்பவர்கள் யோசிக்கட்டும். அவர்களது திட்டங்களைக் குறை கண்டு நடுத்தர வர்க்த்தின் மனசாட்சியாக இருப்பதுதான் என்னுடைய பங்கு' என்று சொல்லி விட்டார்.

இதை கேள்வியை நானும் கேட்டுக் கொள்ள வேண்டுமே! எல்லாக் கலைஞர்களையும், எல்லா அரசியல்வாதிகளையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமா? என்ன மாற்று, எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது அடையாளம் கண்டு கொள்ள வேண்டாமா?

5. அப்படித் தேடிப் போன திரைப்படம் பழசிராஜா. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை காலை, டெக்கான் குரோனிக்கிள் நாளிதழில் பழசிராஜாவின் திரைவிமரிசனம். வரலாற்றுப் பின்னணியில் நடந்ததைச் சொல்லும் ஒரு திரைக்காவியம், நிச்சயம் பார்க்க வேண்டியது என்று முடித்திருந்தார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் ரசிக்கப்பட்ட காலம் மாறி விட்டது. உன்னைப்போல் ஒருவனும், தசாவதாரமும், சிவாஜியும் ரசிக்கப்படும் இந்த நாளில் வரலாற்றுப் படம் எப்படி எடுபடும்? அதுவும் மலையாள இயக்குனரின் நிதானமான இயக்கத்தில், நிதானமாக நடிப்புகளில் ஒரு படம் தமிழ்நாட்டில் என்ன பாடு படும்? என்று மெலிதாக ஒரு எண்ணம் இருந்தது.

11.15க்கு தொடக்க நேரம் என்று போட்டிருந்தாலும், 10 நிமிடம் முன்னதாகத்தான் உள்ளே விட்டார்கள். உடனேயே படமும் ஆரம்பித்து விட்டார்கள். முதல் அரை மணி நேரத்துக்கு மேல் கதவு திறந்து திறந்து மூடி பகல் வெளிச்சத்தை அரங்குக்குள் பாய்ச்சிக் கொண்டே இருந்தது. காட்சிகளும் நிதானமாக, வசனங்களுடனும், உருக்க முயற்சிக்கும் காட்சிகளுடனும் எரிச்சலூட்டுவது போலவே நகர்ந்தன. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஓடும் திரைப்படம். நடந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தில் நாடகத்தனமான காட்சிகள் நிறைத்து விட முடியாதுதான்.

காந்தி திரைப்படத்திலும் ஜாலியான் வாலாபாக் படுகொலை, தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தில் காவல் பிரம்படி என்ற சில காட்சிகள் மட்டும்தான் தூக்கத்தை விரட்டின, முதல் முறை திரைப்படம் பார்க்கும் போது. இங்கும் சண்டைக்காட்சிகள் மட்டும்தான் விறுவிறுப்பைக் கொடுத்தன. பழசிராஜா தன்னைப் பிடிக்க வந்த படையினரை தண்ணீர் தட்டில் மனைவி கொண்டு வந்த சுருள் கத்தியால் தாக்கி அழிக்கும் காட்சியில்தான் உயிர் வந்தது.

சண்டைக் காட்சிகள், ஒளி(ந்து) போர் காட்சிகள், கோட்டையைத் தாக்கித் தகர்க்கும் காட்சிகள் என்று போர்க் காட்சிகளை அவ்வளவு தத்ரூபமாக சித்தரித்திருக்கிறார்கள். திட்டமிடலும், உழைப்பும், செய்நேர்த்தியும் ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சி விடும் தரத்தில் இருக்கின்றன. போர்க்கைதிகளை, வஞ்சகமாகப் பிடித்த எதிரிகளை கலகக்காரர்கள் என்று வெள்ளையர்கள் தூக்கிலிடும் காட்சிகள் 'ஆதவன் போயிருக்கலாமே' என்று சலித்துக் கொண்டிருந்த இளைஞர்களைக் கூட அமைதியாக்கி இருந்தன.
வெள்ளையர்களையும் பலவகையினராக, சாதாரண மனிதர்களாகக் காட்டியிருக்கிறார்கள். உதவி ஆணையர் நோஞ்சானாக இளைஞராக, பெண்நண்பியுடன் கோட்டயம் வருகிறார். ஆளுனர் குண்டாக அந்தக் கால பவுடர் அடித்த பொய் முடியுடன் (wig), போர்த் தளபதி குரூரமாக நடவடிக்கைகள் எடுத்துக் குடித்துக் கொண்டாடுகிறார், ஆணையரின் நண்பி வெள்ளைப் படைகளின் அடாவடிகளைக் கண்டித்து அவரை விட்டு படகேறிப் போய் விடுகிறார்.

வசனங்களும் காட்சி நகர்தல்களும் அரங்கில் கிண்டல் குரல்களுக்கு அவ்வப்போது வரவேற்பு அளித்தாலும் திரைப்படத்தின் தாக்கம் பார்த்த அனைவரையும் ஆழமாகப் பாதித்திருக்கும்.

ஆங்கிலத்தில் காந்தி, தமிழில் மணிரத்தினத்தின் இருவர், இப்போது மலையாளம்/தமிழில் பழசி ராஜா. குறைந்தது இன்னும் நான்கைந்து முறை பார்த்து கட்டம் கட்டமாக உணர வேண்டிய திரைப்படம்.

தோன்றிற் புகழொடு தோன்றுக என்று தொடங்கும் குறளுக்கு, 'தமது திறமையை சமூகத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் பயன்படுத்துங்கள். அப்படி இல்லாதவர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதே உத்தமம்' என்று கொஞ்சம் வளைத்துப் பொருள் சொல்லலாம்.

கமல்ஹாசன், படத்துக்கு குரல் கொடுத்ததோடு இல்லாமல் நான்கைந்து முறை பார்த்திருக்கவும் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இது போன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த விருப்பம் இல்லா விட்டால், சும்மா இருந்து விடுங்கள்.

Tuesday, September 08, 2009

டிராகன்

சீனாவைப் பற்றி சில தகவல்கள்.

உணவு:
சீன உணவு என்பது நம்ம ஊரில் மிகவும் பிரபலம். செட்டிநாடு, தந்தூரி என்ற வரிசையில் உள்ளதில் மூத்தது சீன உணவு. கேள்விப் பட்டிருப்பது போல இங்கு நாம் சீன உணவு என்று சாப்பிடுவதற்கும் அங்கு ஊர்களில் சாப்பிடுவதற்கும் பெரிய தொடர்பு கிடையாது. அது மட்டுமில்லாமல் நாடு பெரிய நாடு. இந்தியாவை விட ஒன்றரை மடங்கு பெரியது. மக்கள் நெருக்கம் மிகுந்த கிழக்குப் பகுதியில் மட்டும் 10-12 பெரிய மாகாணங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி கலாச்சாரம் என்று சொல்லி விடலாம். தெற்கே குவாந்தோங்ஙில் சாப்பிடும் சாப்பாட்டுக்கும், கிழக்கே சாங்காயில் சாப்பிடும் சாப்பாட்டுக்கும், வடக்கே பெய்ஜிங்ஙில் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பொதுவாக எதுவும் சொல்ல முடியாது.

அரசியல்
அரசும் நானே, நீதிமன்றமும் நானே, வங்கியும் நானே, தொழில்களும் நானே, கட்சியும், ஊடகங்களும் நானே என்று எல்லாவற்றையும் வியாபித்து நிற்பது சீனக் கம்யூனிஸ்டு கட்சி. கொஞ்சம் கொஞ்சமாக, தொழில்களில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை வர விட்டிருக்கிறார்கள். ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசு அமைப்புகள், கட்சி அமைப்புகள் என்று இன்னமும் கம்யூனிஸ்டு கட்சியின் ஏக அதிகாரம்தான் கொடி கட்டிப் பறக்கிறது.

நான்கு புத்திசாலி கிழவர்கள் கூடி கடந்த காலத்தையும், பழைய தலைவர்களின் படிப்பினைகளையும், இன்றைய நிகழ்வுகளையும் உற்று நோக்கி சொல்லும் வழியில்தான் நாடு செல்ல வேண்டும். எந்த நாலு கிழவர்கள் என்பதில் பல போட்டா போட்டிகள் உண்டு, உள் குத்துகள் உண்டு. அந்த கிழவர்களும் குமரர்களுமாக கிட்டத்தட்ட 10 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிதான் நாட்டின் அகல நீளங்களில் பல்வேறு அமைப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறத

மொழி
'சீன மொழியா, அதை எப்படி படிக்கிறது, ரொம்ப கஷ்டமாமே!' என்று சொல்லாத வேற்று நாட்டினர் கிடையாது. 'அப்படி சிறப்பான சிக்கல் எதுவும் கிடையாது. தமிழ் தெரிந்த ஒருவர் ஆங்கிலம், இந்தி அல்லது செருமன் படிப்பதற்கு மேற்கொள்ளும் அதே அளவு முயற்சியில் சீனத்தையும் கற்றுக் கொள்ளலாம்'. இதில் எழுத்து வடிவம் சித்திர எழுத்துக்களாக இருந்தால், வாக்கிய அமைப்புகள் எளிதாகிப் போகின்றன. பேசுவதற்கு நான்கு வெவ்வேறு மாத்திரைகளிலான உச்சரிப்புகள் இருந்தால், எழுத்தைப் பார்த்தே பொருளை புரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரு சில கிலோமீட்டர்களுக்கு வேறுபடும் பேச்சு வழக்குகள். யாங்க்ட்சே நதியின் இரண்டு புறமும் இருக்கும் கிராமங்களில் பேசப்படும் மொழி ஒருவருக்கொருவர் புரியாத படி இருக்கலாம். ஆனால், எழுதப் படிக்கத் தெரிஞ்சா பொழைச்சுக்கலாம். எல்லோருமே ஒரே வடிவத்தில்தான் எழுதுகிறார்கள். இப்போதெல்லாம் உச்சரிப்பைச் சொல்லிக் கொடுக்க ரோமன் எழுத்துக்களில் பின்யீன் என்ற முறையையும் பின்பற்றுகிறார்கள்.

உள்கட்டமைப்பு
'சீனாவா, என்னா ரோடு, என்னா ரயிலு, என்னா பெரிய விமான நிலையம்' என்று மலைக்கும் அளவுக்கு பெரிய திட்டப்பணிகளை முடித்துக் காட்டி விடுகிறார்கள். மாற்றங்களை ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

மேலே சொன்ன, சாலை போடும் நிறுவனமும், அதற்கு நிதி அளிக்கும் வங்கியும், ஒப்புதல் அளிக்கும் அரசாங்கமும், நிலம் விற்கும் ஊராட்சியும் ஒரே கட்சியை சேர்ந்ததாக இருக்கும் போது என்ன பெரிய சாதனை. எல்லாம் கட்சிக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். அவர்கள் முடிவின் வழியில் உங்க வீடோ அல்லது கழுத்தோ இருந்தால் ஒரே இடியாக இடித்துப் போட்டு விட்டுப் போய் விடுவார்கள் அவ்வளவுதான். ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம் என்ற வேத நீதியை முழுமையாக கடைப்பிடிப்பவர்கள் அந்த கம்யூனிஸ்டுகள்தான்.

மனித உரிமை
தப்பு செய்து மாட்டிக்கிட்டா, கட்சியிலோ, ஆட்சியிலோ அல்லது சட்டைப் பைக்குள்ளோ சரியான பிடி இல்லாவிட்டால் கைது, விசாரணை, தீர்ப்பு, தண்டனை எல்லாம் முடிந்து ஒரே வாரத்தில் தூக்கில் போடப்பட்டு விடலாம். தப்பு செய்யாமல் கூட மாட்டினால் அதே கதியில் போய் சேர்ந்து விடலாம். அரசாங்கத்தின் வன்முறை விளிம்பு நிலை மனிதர்களின் மீது பாய்வதை பார்த்து பதறும் நம்ம ஊர்க்காரர்கள் அங்கே போனால் பதறுவதற்குக் கூட இடைவெளி விட மாட்டார்கள். ஒரே சீவுதான்.

அதுதான் மனித உரிமை. சுருக்கமாக முடித்து விடுகிறார்கள்.

தொழிலாளர்கள்
கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டால், கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து விட்டால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து வேலைக்குச் சேர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரை எந்திரங்கள் போல நடத்திக் கொள்ளலாம். மணி அடித்தால் சோறு, அடுத்த மணி அடித்தால் வேலை, அடுத்த மணியில் தூக்கம், மூன்றடுக்கு படுக்கைகளாக, நம்ம இரயில் பெட்டியில் தூங்கும் பெட்டி அளவில் இருக்கும் அறையில் ஆண்டு முழுவதும் வாழ்ந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை புத்தாண்டு விடுமையின் போது பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஊருக்குப் போகலாம். அங்கு பட்டினிக்கு இன்னும் விடை இல்லை என்றால் திரும்பி வந்து இன்னொரு ஆண்டு உழலலாம்.

தொழிலாளர்களின் கூடுதல் மதிப்புகளை எல்லாம் உறிந்து கொண்டு போகிறவர்கள் தைவானிலிருந்தும், ஆங்காங்கிலிருந்தும் வந்து கடை போட்டு ஆலை நடத்தும் முதலாளிகள். அவர்கள் பங்குச் சந்தையிலும், மக்காவின் சூதாட்ட விடுதிகளிலும், ஆங்காங்கின் கேளிக்கை விடுதிகளிலும், செலவளிக்கவும் உதவுகிறது.

மதம்
கடவுளும் நாமே என்று சொன்னக் கட்சி எல்லா மதங்களையும் கழுத்தைத் திருகிப் போட்டது. போன பத்திருபது ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சம் வணிகம் சார்ந்த மதங்களை அனுமதித்திருக்கிறார்கள். மீதி எல்லாம் கலாச்சாரம் மட்டும்தான். கடவுளின் பெயரால் மக்களை ஏய்க்கும் கும்பல்களை அறவே ஒழித்து விட்டார்கள்.

எல்லோருக்கும் பசிக்கு உணவு கிடைக்கிறது, கட்டாயப் பள்ளிக் கல்வி இலவசமாகவே கிடைக்கிறது. அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கிறது.

பெரிதிலும் பெரிது கேள்
என்று சொன்ன அவ்வையை காது கொடுத்து கேட்டவர்கள் இந்த சீனர்கள்தான். நம்ம ஊரில் பெரிய காலணித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 2000 சோடிகள் செய்கிறார்கள் என்றால் அங்கு 20,000 சோடிகள் செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. புத்தகக் கடைகள், கடைத்தெருக்கள், மின்சாதனப் பொருள் கடைகள், தங்கும் விடுதிகள், ஒலிம்பிக்ஸ் என்று எதை எடுத்தாலும் பெரிதாக சாதித்துக் காட்டும் வல்லமை அந்த மக்களிடம் இருக்கிறது.

==========
இப்படி சீனாவைப் பற்றித் துணுக்குகளாக, கட்டுரைகளாக, செய்திகளாக, சொந்த அனுபவங்களாக பல விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். நான் 1997 முதல் 2001ம் ஆண்டு வரை சீனாவின் சாங்காய் நகரில் வசித்து பணி புரிந்த நாட்களில் அருகில் இருந்து 'என்னதான் நடக்கிறது' என்று தலை கால் புரியாமல், யோசித்து யோசித்து, நாலரை ஆண்டுகள் கண்களை விரித்துக் கொண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டு சுற்றி நடப்பதை புரிந்து கொள்ள தேடித் தேடிப் படித்து, கேட்டு புரிந்து தெரிந்து கொண்டேன்.

சீனாவைப் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? அப்படிப் புரிந்து கொள்வதை எப்படி அணுக வேண்டும்? என்று பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, உழைத்து 'டிராகன்' எழுதி வெளியிட்டிருக்கிறார் செந்தில்நாதன். பல தளங்களில் விபரங்களுடன், நான்கு பரிமாணங்களையும் சேர்த்து சீனாவை ஒரு சராசரி தமிழ் வாசகருக்கு விவரித்திருக்கிறார். கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்த ஒன்றரை நாட்களில் முடித்து விட்டேன்.
==========

சீனாவுக்குப் போக வேண்டும். அல்லது ஒரு சீன நிறுவனத்துடன் வணிகம் செய்ய வேண்டும். அல்லது, சீன வணிகருடன் போட்டி போட வேண்டும் என்பவர்கள்
அங்கு வாழும் மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள், அவர்களைச் செலுத்துவது என்ன, அவர்களின் பின்னணி என்ன, அவர்கள் எப்படிப்பட்ட வீட்டில் வசிக்கிறார்கள், எதற்குப் பயப்படுகிறார்கள், எதை விரும்புகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்கண்டு இதழில் வருவதைப் போல கல்கண்டுகளாக படிக்காமல் முழுமையான ஒரு விவரிப்பாக தெரிந்து கொள்ளும் விதமாக டிராகன் உருவாகியிருக்கிறது. the definitive guide என்று ஒரு பொருளைப் பற்றி ஆங்கிலப் புத்தகங்கள் வெளியாவதைப் போன்று, சீனாவுக்கான The definitive guide என்று டிராகன் புத்தகத்தை சொல்லாம்.

மொத்தம் 475 பக்கங்களில், தமிழில் சீனாவைப் பற்றிய முழுமையான ஒரு சித்தரிப்பை கொடுக்கிறது புத்தகம். சீனாவைப் பற்றிப் பேசும் பல ஆங்கில நூல்கள் சாதிக்காத, சீன அரசின் கையேடுகள் தந்து விடாத, முழுமையான சித்திரம் இந்த நூலில் கிடைக்கிறது.

ஒரு நூறு பக்கங்களில் சீனாவின் 4000 ஆண்டு வரலாற்றை வரைந்து காட்டி விட்டு அடுத்த 100 பக்கங்களில் 1980 வரை கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர். அவ்வளவும் தெரிந்தவர்கள்தான் அடுத்த 30 ஆண்டுகளை புரிந்து கொள்ள முடியும். 'சீனாவைப் பார்' என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் நாம் சீனாவின் வரலாற்றுப் பாதைதான் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. அதைத் தெளிவாக விளக்கி விட்டு 1980 வரையிலான வரலாற்றுக்கு புத்தகத்தின் பாதியை ஒதுக்கியிருக்கிறார்.

திரையரங்கில் பழைய கறுப்பு வெள்ளை படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைவேளையில் 70mm அளவில் ஆலிவுட் படத்தின் முன்னோட்டம் காட்டினால் எப்படி உணர்வோம். அந்த உணர்வு அடுத்த 200 பக்கங்களில். கடந்த 30 ஆண்டுகளில் சீனா உலகை அளந்த கதை, மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்கள் விரியப் படித்துக் கொண்டே போகும் அளவுக்கு விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

கடைசியில் ஒரு பகுதியாக இந்திய, சீன உறவுகள் பற்றிய வரலாறு. சீனாவின் ஏகாதிபத்திய கனவுகள் என்று கொஞ்சம் அரசியல் சாயம் பூசப்பட்ட அவதானங்களும், காலக்கண்ணாடி காட்சியமைப்பும் என்று நூல் நிறைவு பெறுகிறது.

தமிழில் எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி. பிறமொழிக் கலப்பை வேண்டுமென்றே செய்பவர்களுக்கு மாற்றாக, வலிந்து வலித்து தூய தமிழ் எழுதுபவர்கள் ஒரு புறம். நல்ல தகவல்களை சொல்ல வந்து மொழி நடையால் நான்கு பக்கங்களுக்கு மேல் படிக்க ஒட்டாமல் ஓட்டி விடுபவர்கள் என்று இருந்தால் தமிழன்னை கைவிரலில் நடனமாடினாலும் குப்பைகளை அள்ளிக் குவிப்பதிலேயே ஈடுபட்டிருக்கும் 'கலைஞர்கள்' என்று இன்னொரு பக்கம்.

பிறமொழிக்கலப்பில்லாமல் ஆனால் இயல்பான தமிழ் சொற்களில் சலிக்காத தமிழ் நடையில் கனமான விஷயங்களை சொல்ல முடியும் என்று காட்டுகிறது டிராகன் புத்தகம். தமிழில் கதைகள், கவிதைப் புத்தகங்கள், அரசியல் கட்டுரைகள், பாடப் புத்தகங்கள் இவற்றைத் தாண்டி அறிவை வளர்க்கும் புத்தகங்களுக்கான ஒரு முன்னோடியாக டிராகன் அமையும் என்ற பெருவிருப்பத்தோடு, இந்தப் புத்தகம் பலரையும் போய்ச் சேர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

நன்னன் ஐயா பார்த்தால் தலையில் குட்டும் சின்னச் சின்ன குறைபாடுகள் அடுத்த பதிப்பில் மேம்பட்டு விடும். பின்யீங் வடிவங்களை இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தி ஒரு பட்டியலாக பின்னொட்டியில் தரலாம்.

Friday, May 22, 2009

அப்பல்லோ 13


நீல் ஆம்ஸ்ட்ராங் ’அப்பல்லோ 11’ செயல்திட்டத்தில் நிலவை அடைந்து, அதன் தரையில் கால் வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு அடுத்த அப்பல்லோ 12க்கும் அடுத்த ’அப்பல்லோ 13’க்கு நடந்த விபத்து ஒரு சிலருக்குத்தான் இப்பொழுது நினைவிருக்கும். ”வெற்றிகரமான தோல்வி” என்று அழைக்கப்படும் இந்த திட்டம், அமேரிக்க விண்வெளி சரித்திரத்தில் ஒரு முக்கியமான கட்டம்.

பூமியிலிருந்து கிளம்பி மூன்றாவது நாள் பிரயாணத்தின் பொழுது, ஆக்ஸிஜன் டாங்குகளில் வெடிப்பு ஏற்பட, பிரச்சனை ஆரம்பமானது. விண்கலத்தின் கமாண்டர் ஜேம்ஸ் லோவல்(James A. Lovell) பின்னாளில் மிகப் பிரபலமடைந்த அந்த வார்த்தைகளை கூறினார், “Houston, we've had a problem".

ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் இணைத்து கலத்துக்கு தேவையான நீரும், மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இப்பொழுது ஆக்ஸிஜன் சப்ளை காலியாவதால், முக்கியத் தேவையான மின்சாரம் பற்றாக்குறையானது. மின்சாரப் பற்றாக்குறை முதலாவதாக தலைதூக்க, பிரயாணிகள் முக்கியத் தாய்க்கலமான “ஒடிஸி”யை(Odyssey) shutdown செய்து விட்டு, நிலவில் இறங்குவதற்கு உபயோகிக்கும் கலமான ”அக்வாரிஸ்”(Aquarius) கலத்திற்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில், செயல்திட்டத்தின்படி நிலவில் கலத்தை இறக்க முடியாது. பூமியில் நாஸா விண்வெளி நிலையத்தில், அப்பல்லோ 13 திட்டத்திற்காக இதுவரை வேலை செய்த அனைவரும் தட்டியெழுப்பப்படுகின்றனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே கிட்டத்தட்ட முக்கால்வாசி தூரத்தில் மூன்று உயிர்கள் விண்வெளியில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அப்படியே ராக்கெட்டை இயக்கி கலத்தை திருப்பி பூமிக்கு திருப்பி விடலாமா?

ஆக்ஸிஜன், கலத்தின் எரிபொருளுக்கும் தேவை. நடுவழியில் கலத்தை திருப்பினால், செலவாகும் எரிபொருள், கடைசி நேர எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். அதனால் கலத்தை, நிலவை நோக்கியே பயணிக்க தீர்மானிக்கின்றனர். இதன் மூலம், நிலவின் ஈர்ப்பு சக்தி, கலத்தை, நிலவை சுற்றி திருப்பிவிடும் சுற்றுப்பாதையில்(free return trajectory) கலம் நுழைந்தது.

நிலவைச் சுற்றிக்கொண்டு, கலம் பூமியை நோக்கி திரும்பியதும், நிலவின் ஈர்ப்பிலிருந்து விடுபட அக்வாரிஸ்(Lunar Module - Aquaris) கலத்தின் ராக்கெட்டுகளே எரிந்தன. தாய்க் கலத்தின் ராக்கெட்டுகள் எந்த நிலையில் இருக்கிறதோ என்று பயம்!

பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. மின்சாரச் சிக்கனம் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. கலத்தினுள்ளே விளக்குகளிலிருந்து, கலத்தை வெப்பமாக்கும் ஹீட்டர் வரை அனைத்தும் அணைக்கப்படுகின்றன - கணிணியும் சேர்த்து. பூமியுடனான ரேடியோ தொடர்பு மட்டுமே உயிருடன் இருக்கிறது. கலத்தினுள்ளே தாங்க முடியாத குளிர். இருக்கிற மின்சார சக்தியை கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப முடியுமா என்று சந்தேகம். மின்சார சாதனங்கள் அணைக்கப்பட்டதால், கழிவுகளை கலத்திலிருந்து வெளியேற்ற முடியாது. அதனால், இனிமேல் கழிவுகள் கூடாது என்று பூமியிலிருந்து ஆணை கிளம்பியது. No Ones and Twos!!

அக்வாரிஸ் கலம் நிலவில் இறங்குவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டிருந்ததால், பிரயாணிகள் சுவாசித்த பின் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கான வசதி, இரண்டு பேருக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்பொழுது இருப்பதோ மூன்று பேர். என்ன செய்வது? பூமி விஞ்ஞானிகள், கலத்திலிருக்கும் பொருள்களை கொண்டே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் கருவியை செய்யும் முறையை கண்டுபிடித்து, பிரயாணிகளுக்கு சொல்லச் சொல்ல கருவி கலத்தில் தயாரிக்கப்பட்டது.

விபத்தில் நடந்த வெடிப்பில், அதிக வெப்பம் தாங்கும் கூடு(Heat Sheild) பாதிக்கப்பட்டதாக சந்தேகித்தனர். அப்படி பாதிக்கப்பட்டிருந்தால், பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்தபின், ஏற்படும் அபரிமிதமான உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கமுடியாமல் பிரயாணிகள் இறக்க நேரிடும்.

இவ்வளவு தடைகளையும் தாண்டி இறுதியில் பிரயாணிகள் இருந்த கூடு, கடலில் பத்திரமாக இறங்கியது. செயல்திட்டத்தின்படி நிலவை அடைய முடியவிட்டாலும், பிரயாணிகளை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்ததால் இந்த சம்பவம் வெற்றிகரமான தோல்வி என்று அழைக்கப்படுகிறது.

இந்த சம்பவங்களையெல்லாம் அப்பல்லோ 13 திட்டத்தின் கமாண்டர் ஜேம்ஸ் லோவல் தனது புத்தகமான "Lost Moon" என்ற புத்தகத்தில் விரிவாகவும், துல்லியமாகவும் விவரித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, 70களில் அப்போதைய தினமணி ஆசிரியர், தமிழில் இந்த வரலாற்று சம்பவத்தை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகத்தின் விலை அப்பொழுது ரூ.2.

இந்த சம்பவத்தை Ron Howard என்ற ஹாலிவுட் டைரக்டர் 1995ல் திரைப்படமாக எடுத்தார் - ஜேம்ஸ் லோவலின் உதவியோடு. Tom Hanks லோவலாக நடித்தார். திரைப்படத்துக்காக கொஞ்சம் டென்ஷன், சென்டிமெண்ட் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் அற்புதமாக படமெடுத்திருக்கிறார்கள். லோவல் பிரயாணத்துக்கு கிளம்பும் நேரத்தில், அவர் மனைவியின் திருமண மோதிரம் பாத்ரூம் குழாய்க்குள் விழுவது, நம்மூர் தாலி சென்டிமெண்டை நினைவுபடுத்துகிறது. ஆனாலும் அது உண்மையில் நடந்த சம்பவம் என்று லோவல் உறுதிப்படுத்துகிறார்.

விஷயம் தெரிந்த ஆசாமிகள், ஒருசில தொழில்நுட்ப விவரணைகள் தவறாயிருந்தாலும் இந்தப் படத்தில் கூறப்படும்/காட்டப்படும் தொழில்நுட்ப விவரங்கள் மிகப் பெருமளவு துல்லியமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்தப் படத்துக்கு இரு ஆஸ்கர் அவார்டுகளும் கிடைத்தன.

படத்தை எடுத்து முடித்ததும், டைரக்டர் Howard ஒரு test preview showக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஷோவை பார்த்தவர்களில் ஒருவர் எழுதிய கமெண்ட் “அப்பட்டமான ஹாலிவுட் படம். உண்மையில் இப்படி நடந்தால் விண்வெளி வீரர்கள் உயிருடன் தப்பிக்க முடியாது”, என்பது.


அப்பல்லோ 13 திட்டத்தின் விவரங்கள் பற்றி அறிய - http://en.wikipedia.org/wiki/Apollo_13
அப்பல்லோ 13 திரைப்படம் பற்றிய விவரங்கள் - http://en.wikipedia.org/wiki/Apollo_13_(film)
படத்தில் காட்டப்பட்ட தவறான தொழில்நுட்ப விவரங்கள் எவை என அறிய - http://www.moviemistakes.com/film75 , http://www.moviemistakes.com/film75/page2

Monday, May 11, 2009

அருந்ததி ராய்

The God of Small things என்று தலைப்புக் கொடுக்க மனம் வராமல் அதை எழுதியவரின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஒரு புத்தகம் ஏதாவது விருது பெற்றதும் அதற்கு ஒரு தனிப் புகழ் கிடைத்து விடுகிறது. புக்கர் பரிசு கிடைக்கா விட்டால், புத்தகக் கடையில் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒருவர் எழுதிய புத்தகத்தைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். அதே போலத்தான் ஆஸ்கர் விருது பெற்று விட்ட திரைப்படங்கள்.

1990களின் இறுதிகளில் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு, இருபுறமும் இறக்கைகள் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நாட்களில் ஏதோ ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் இதுக்கு என்ன விருது என்றுதான் தோன்றியது. விடாப்பிடியாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாதி புத்தகத்துக்கு மேல் போக முடியவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'தலைசிறந்த கதைகளில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அத்தகைய கதைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்க விரும்புவீர்கள். கதையின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து ஒட்டிக் கொள்ளலாம். கதகளி கலைஞர்கள் அதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.'

அதை அருந்ததி ராயும் புரிந்து கொண்டு தனது கதைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதையின் முதல் அத்தியாயத்திலேயே என்னென்ன நடந்தது, எதைப் பற்றிப் படிக்கப் போகிறோம் என்று அறிவுப்புகள், எச்சரிக்கைகள் கிடைத்து விடுகின்றன. அம்மு விவாகரத்து ஆகி அம்மா வீடு வருவது, சோஃபி மோள் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவது, எஸ்தா அபிலாஷ் தியேட்டரில் ஆரஞ்சு லெமன் டிரிங்க் ஆளிடம் படுவது, எஸ்தா, rahel இருவரின் வாழ்க்கையும் இலக்கில்லாமல் போவது என்று எல்லாமே முதலிலேயே தெரிந்து விடுகிறது.

அதன் பிறகு விபரங்கள்தான். இந்த நாவலுக்கு விமரிசனம் எழுதிய எல்லோருமே குறிப்பிடுவது details. கேரளாவின், சிரியன் கிருத்தவ, மேல்தட்டு குடும்பம் ஒன்றின் பார்வையில் உலகின் இண்டு இடுக்குகள் எல்லாம் உயிர் பெறுகின்றன. கதா பாத்திரங்கள் எதுவும் எதற்குள்ளும் ஒளிந்து கொள்ள முடிவதில்லை.

கதை சொல்வது ஆசிரியரா அல்லது ரஹேலா என்று குழப்பம் வருவது குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரஹேலின் சின்ன வயது உலகப்பார்வைவை, வளர்ந்து 31 வயதில் அனுபவப் பார்வையுடன் கலந்து கதை சொல்லப்படுகிறது. குடும்பம் கோட்டயத்துக்குக் காரில் போகும் போது வியட்நாமில் நடக்கும் சண்டையைப் பற்றியும் நாட்டின் பெயர் குறிப்பிடாமல் தொட்டுச் செல்கிறார் கதை சொல்லி. 31 வயது ரஹேல் 7 வயதில் நடந்த சம்பவங்கள் எப்படி அன்றைய கதாபாத்திரங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று உருவகித்து சொல்வது போலக் கதை.

என்ன பெரிய கதை! குழந்தைகள் வயிற்றுக்கு இல்லாமல் வாடுகிறார்களா! படிப்பதற்கு வசதியில்லையா? சமூகத்தால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? அப்படி எதுவும் இல்லை. மிகவும் நுண்ணிய ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் நடந்திருக்கக் கூடிய சம்பவங்களின் தொகுப்பு. கேரள சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டை இந்தக் கதைக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டுகிறார் அருந்ததி ராய். செம்மீன் திரைப்படத் தாக்கம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் தாக்கம், தொழிற்சங்க இயக்கம், நம்பூதிரி பாடின் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு ஏற்பட்டது, மத அரசியல்கள், வேதிப் பொருட்களால் ஆறுகள் மாசு படுவது, தீண்டாமை.

எஸ்தா நடந்து போகும் போது முதலில் 'அவர்களது தாத்தா தீண்டத்தகாதவர்களுக்காக கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடம்' என்று சொல்லி விட்டு அடுத்தடுத்து மற்ற காட்சிகளை விவரித்து விட்டு, இன்னொரு பள்ளியைக் குறிப்பிட்டு 'அது தீண்டத்தகுந்தவர்களுக்கு' என்று சொல்லும் சொற்கூர்மை நாவல் எங்கும் விரவிக் கிடக்கிறது. தீண்டத் தகுந்த காவல் அதிகாரிகள், தீண்டத்தகாத பறவனை மிதித்தே உடைக்கும் போது சாட்சிகளாக எஸ்தாவும், ரஹேலும் மட்டும் இருக்கிறார்கள். அவன் செய்த தவறு, தீண்டத் தகுந்த அம்முவுடன் உறவு வைத்துக் கொள்வது.

அந்த ரகசிய உறவு வெளிப்பட்ட பிற்பகலில் அம்மு குழந்தைகளை வார்த்தைகளால் நோகடித்து துரத்தி விடகுழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போகத் தீர்மானிக்கிறார்கள். இலண்டனில் வந்திருக்கும் அவர்கள் மாமா சாக்கோவின் இங்கிலாந்து (முன்னாள்) மனைவி மூலமான குழந்தை சோஃபி மோளும் சேர்ந்து கொள்கிறாள். முன்னிருட்டே நேரத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த படகில் ஏறி ஆற்றைக் கடக்க முயற்சிக்கும் போது படகு கவிழ்ந்து விடுகிறது. எஸ்தாவும், ரஹேலும் வழக்கம் போல நீந்தி அக்கரை சேர்ந்து விடுகிறார்கள். சோஃபி மோளுக்கு நீந்தத் தெரியாது.

டட்டடாய்ங் என்று இசை எழுப்பாமல், பெரிய பதற்றம் இல்லாமல் சோஃபி மோள் ஆற்றோடு போய் விடுகிறாள். மற்ற இரண்டு குழந்தைகளும் அக்கரையில் ஒரு கைவிடப்பட்ட வீட்டு திண்ணையில் படுத்துத் தூங்குகிறார்கள். அதுதான் அவர்கள் ஓடிப் போக வைத்திருந்த இடம்.

அம்மாச்சி வெளுத்தாவை திட்டி காரித்துப்பி அனுப்ப, அவனும் ஆற்றை நீந்திக் கடந்து அதே வீட்டுக்கு வருகிறான். அம்முவை அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

பேபி அத்தை கொடுத்த புகாரின் பேரில் தீண்டக் கூடிய காவலர்கள் படகேறி அடுத்த நாள் காலையில் அக்கரை வந்து வெளுத்தாவை மிதித்து துவைத்து குற்றுயிராக்கி விடுகிறார்கள். சோஃபி மோளின் பிணம் ஆற்றில் கிடைக்கிறது. வெளுத்தா குழந்தைகளைக் கடத்தியதாக எழுதி கேசை முடிக்கிறார்கள்.

இந்தக் குழந்தைகள் சரியில்லை என்று எஸ்தாவை கொல்கத்தாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். ரஹேலின் படிப்பை மட்டும் அம்மாச்சி பார்த்துக் கொள்வாள். அம்மு வேலை தேடி போகிறாள். 'நல்ல வேலை கிடைத்து நாம மூணு பேரும் சேர்ந்து இருக்க அளவுக்கு வருமானம் ஏற்பட்டதும் உங்களை அழைத்துக் கொள்கிறேன்' என்கிறாள். அது நடக்காமலே போய் அம்மு 31 வயதில் ஒரு லாட்ஜில் செத்துப் போகிறாள். எஸ்தா பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டு பேசாமல் அமைதியாகி விடுகிறான். ரஹேல் தில்லியில் வரைகலைப் பட்டம் படிக்கப் போய், ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து அமெரிக்கா போய் விடுகிறாள்.

எஸ்தாவின் தந்தை ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரப் போவதால் எஸ்தாவைத் திருப்பி அனுப்புகிறார். எஸ்தா திரும்பி வந்து விட்டதை பேபி அத்தை ரஹேலுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்க ரஹேல் ஊருக்கு வந்து சேருகிறாள். ஊரில் வந்த பிறகு அவள் திரும்பிப் பார்ப்பதாக கதை வளர்கிறது.

Monday, September 08, 2008

ஆல் யூ ஸோம்பீஸ் - All you Zombies - Robert.A.Heinlein

சமீபத்தில் கூகிளில் பாரடாக்ஸ்(Paradox - முரண் கூற்று) என்று தேடியபோது, இந்த சிறுகதையை பற்றி தெரிய வந்தது. டைம் டிராவல் கதைகளில் இயல்பாகவே இந்த பாரடாக்ஸ்கள் தலைகாட்டும். உண்மையில், அதுதான் அந்த கதைகளின் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படிபட்ட கதைகளில் உச்சகட்ட பாரடாக்ஸ் கதைகளை எழுதியவர் ராபர்ட்.ஏ,ஹேன்லீன். அப்படி அவர் எழுதியவற்றில் ஒன்றுதான் "ஆல் யூ ஸோம்பீஸ்". எனக்கு பிடித்திருந்தது. கதையை விவரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் சுருங்கச் சொல்ல முயல்கிறேன். அதற்குமுன், சஸ்பென்ஸ் உடையாமல் ஒரிஜினல் கதையை படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கிப் படிக்கலாம்.


கதைச் சுருக்கம் :-

1945ல் ஒரு பெண் குழந்தை(ஜேன்) அநாதை ஆசிரம வாசலில் விடப்படுகிறது. ஜேன் வளர்ந்து வாலிப பருவத்தை அடையும் பொழுது 1963ல் டிரிஃப்டர்(Drifter) என்று அழைக்கப்படும் வாலிபனை சந்தித்து காதலில் விழுகிறாள். ஆனால் அந்த வாலிபன் அவளுக்கு முன்பின் தெரியாதவன். சிறிது நாட்கள் அவளுடன் இருந்து விட்டு காணாமல் போகிறான்.

1964ல் ஜேனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்த சிறிது நேரத்தில் அதுவும் காணாமல் போகிறது. பிரசவத்தின் பொழுது மருத்துவர்களுக்கு ஜேனுக்கு ஆண்,பெண் இரு பாலுறுப்புகளும் இருப்பது தெரிய வருகிறது. பிரசவத்தில் ஏற்படும் சிக்கலால், ஜேனின் பயனில்லாத பெண் உறுப்புகளை நீக்கிவிட்டு, அவளை ஆணாக மாற்றிவிடுகிறார்கள் மருத்துவர்கள்.

திடீரென்று ஆணாகி விட்டதால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க முடியாமல் "அவன்" குடிக்க ஆரம்பிக்கிறான். அவனும் தன் காதலனைப் போன்ற டிரிஃப்டர் ஆகிறான்.

இப்படி அவன் வாழ்க்கை போய் கொண்டிருக்கும் பொழுது 1970ல் ஒரு பாருக்கு செல்கிறான். அங்கேயிருக்கும் மதுவிற்பனையாளனிடம்(Bartender) போதையில் தன் கதையை சொல்கிறான். மது விற்பவன், அவனை கைவிட்டுச் சென்ற பழைய காதலனை கண்டுபிடிக்க உதவுவதாக சொல்கிறான். அதற்கு பதிலாக அவன் "டைம் டிராவலர்ஸ் கார்ப்பரேஷனில்" உறுப்பினராக சேர வேண்டும் என்கிறான்.

ஒப்பந்தப்படி மது விற்பவன், அவனை அழைத்துக் கொண்டு டைம் மெஷினில் 1963க்கு சென்று அவனை இறக்கி விடுகிறான். அங்கே டிரிஃப்டர் முன்பின் அறிந்திறாத ஒரு அநாதைப் பெண்ணின் மேல் காதல்வயப்படுகிறான்.

இதற்கிடையில் டிரிஃப்டரை 1963ல் இறக்கி விட்ட மது விற்பவன், ஒன்பது மாதங்கள் முன்னோக்கிச் சென்று 1964ல் ஒரு ஹாஸ்பிட்டலிலிலிருந்து, குழந்தை ஒன்றை திருடிக் கொண்டு, அதை 1945ல் ஒரு அநாதை இல்ல வாசலில் விட்டு விடுகிறான். அதன் பின்னர் 1963க்கு வந்து டிரிஃப்டரை அழைத்துக் கொண்டு 1985க்கு சென்று டைம் டிராவலர்ஸ் கார்ப்பரேஷனில் அவனை சேர வைக்கிறான். அங்கே டிரிஃப்டர் சிறிது காலம் வாழ்ந்து 1993ல் மது விற்பவனாக மாறி, தன்னுடைய இருப்பை உறுதி செய்யும் பொருட்டு 1970க்கு டிரிஃப்டரை சந்திக்க செல்கிறான்.

தலை சுற்றுகிறதா?!:-D

மது விற்பவன், தனது இருப்பை உறுதி செய்யும் குறிக்கோளை வெற்றிகரமாக முடித்து, படுக்கையில் ஓய்வெடுக்க செல்வதோடு கதை முடிகிறது.

இப்பொழுது ஒரு கேள்வி. ஜேனின் தந்தை யார்? தாய் யார்? தாத்தா பாட்டி யார்யார்?


கதை எப்படியிருக்கிறது?

Monday, June 30, 2008

The Doomsday Conspiracy


ஆங்கில எழுத்தாளர்களில் மிகப் பிரபலமான எழுத்தாளரான சிட்னி ஷெல்டன் எழுதிய புத்தகமே இந்த டூம்ஸ் டே கொன்ஸ்பைரசி. வழமை போல சிட்னி ஷெல்டன் எம்மை கதை மூலம் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் செல்கின்றார். அதுவும் மின்னல் வேகத்தில் ஐரோப்பாவை சுற்ற வைக்கின்றார்.

அதிகாலை 4.00 மணிக்கு அழைப்பு ஒன்றைப் பெறும் கொமான்டர் பெல்லாமி அவசரம் அவசரமாக NSA (National Security Agency) இயக்குனரைச் சந்திக்குமாறு பணிக்கின்றனர். இங்கு இவருக்கு ஒரு பணி வழங்கப்படுகின்றது. இந்தப் பணியை செவ்வனே பெல்லாமி நிறைவேற்றிய பின்னர் தன்னை கொலைசெய்யவும் உயர்மட்டத்தில் முயற்சி நடக்கின்றதை அறிகின்றார். சில வேற்று கிரக வாசிகள் பற்றிய இரகசியத்தை மறைக்க உலக நாடுகள் நடத்தும் நாடகத்தில் பெலாமியை இழுத்து விடுகின்றனர். இதில் இவர் பாத்திரம் முடிந்ததும் அவரைக் கொலை செய்ய முயல்கின்றனர். இதில் இருந்து பெல்லாமி தப்பி ஒடும் கதைதான் இது.


போர்ன் திரைப்படம், புத்தகம் வாசித்திருந்தால் அதில் கிடைக்கும் அதே திருப்தியும் பர பரப்பும் இந்தப் புத்தகத்திலும் கிடைக்கும். சிட்னி இரசிகர்களுக்கு விருந்து போடக்கூடிய புத்தகம்